இரண்டு போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றிருந்தாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்திலேயே இருக்கின்றன. இருப்பினும், முதல் இடத்தை நெருங்குவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. இந்திய அணி, இறுதிப்போட்டிக்குச் செல்லும் வாய்ப்பு குறித்து இங்கு பார்ப்போம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி

ஒவ்வொரு அணியும் தான் விளையாடும் டெஸ்ட் போட்டிகளில் பெறும் வெற்றிகளைப் பொருத்தே, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் அணிகள் வரிசைப்படுத்தப்படுகின்றன. அந்தவகையில், இந்தப் பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகளே இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறும். இறுதிப்போட்டி, இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி, இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவும், 2வது இடத்தில் இந்தியாவும் உள்ளன.

இத்தகைய நிலையில்தான், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதற்கட்டமாக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரை இந்திய அணி 4-0 அல்லது 3-1 என்ற கணக்கில் வென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்று சொல்லப்பட்டது. நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

image

டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது பார்டர் – கவாஸ்கர் டிராபி டெஸ்டில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதலிடத்தை நெருங்கியுள்ளது. 2021-23ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில், இந்திய அணி தற்போதுவரை 16 போட்டிகளில் பங்கேற்று 10 வெற்றிகளைப் பெற்றுள்ளது. 4 போட்டிகளில் தோல்வியையும் 2 போட்டிகளில் டிராவும் கண்டுள்ளது.

தொடருக்கு முன் – பின் இந்திய அணியின் நிலை

இந்த டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி 75.56 சதவிகிதத்துடன் முதலிடத்திலும், 58.93 சதவிகிதத்துடன் இந்திய அணி 2ம் இடத்திலும் இருந்தன. அதனால், இந்தத் தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. அந்தவகையில், முதல் போட்டியில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதன்மூலம், இந்திய அணியின் வெற்றி விகிதமும் 58.93லிருந்து 61.67 சதவிகிதமாக உயர்ந்தது. தற்போது 2வது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றிருப்பதால், இந்திய அணியின் புள்ளி சதவிகிதம் மீண்டும் உயர்ந்துள்ளது. தற்போது 61.67லிருந்து 64.06 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், ஆஸ்திரேலியாவின் வெற்றி புள்ளி சதவிகிதம் குறைந்துள்ளது.

தொடருக்கு முன் – பின் ஆஸ்திரேலிய அணியின் நிலை

தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி 75.56 சதவிகிதத்துடன் முதலிடத்தில் இருந்தது. இந்திய அணியிடம் முதல் போட்டியில் தோற்றதையடுத்து அதன் புள்ளி சதவிகிதம் 70.83 ஆகக் குறைந்தது. தற்போது 2வது போட்டியிலும் இந்திய அணியிடம் தோல்வி கண்டிருப்பதால், 66.66 ஆகக் குறைந்திருக்கிறது. அதேநேரத்தில், இந்த 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றாலும் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில்தான் உள்ளது. ஆனால், முதல் இடத்தை நெருங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றுக்கு இந்திய அணி முன்னேற வேண்டுமானால், அடுத்து வரும் இரண்டு டெஸ்ட்களில் கட்டாயம் ஒரு டெஸ்டில் வெற்றிபெற வேண்டும்.

image

ஒருவேளை இந்த தொடரை 2-2 என வென்றால் என்ன ஆகும்?

அப்போதுதான் இலங்கை, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளின் வெற்றி தோல்வியை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது. ஒருவேளை இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 4-0 என்ற கணக்கில் தோற்கடித்தால் 67.43 புள்ளி விகிதத்துடன் 147 பாயின்ஸ் எடுத்து முதலிடத்துக்கு முன்னேறிவிடும். அப்படியில்லாவிட்டாலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றால், 61.92 என்ற புள்ளி விகிதத்துடன் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்துகொண்டு ஆஸ்திரேலியாவுடன் இறுதிப்போட்டியில் விளையாடும். அதேநேரத்தில் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலை வகித்தால், இந்திய அணி இறுதிச்சுற்று முடிவு இலங்கை, தென்னாப்பிரிக்காவின் புள்ளி விகிதத்தை பொறுத்தே அமையும். இது ஒருபுறமிருக்க மறுபுறம், இந்த தொடரில் 4 வெற்றிகளையும் இந்திய அணி பெற்றுவிட்டால், ஆஸ்திரேலியாவின் நிலை தலைகீழாக மாறிவிடும்.

image

காத்திருக்கும் இலங்கை.. தடுத்து நிறுத்துமா ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா அடுத்த இரண்டு டெஸ்டுகளில் வெற்றி பெறத் தவறினாலோ, அல்லது டிரா செய்ய முடியாமல் போனாலோ புள்ளிப் பட்டியலில் இருந்து அவ்வணி கீழிறங்குவதுடன், இலங்கை 2வது இடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு அமையும். ஆக, இலங்கையை 2வது இடத்துக்கு வரவிடாமல் ஆக்க வேண்டுமென்றால், ஆஸ்திரேலிய அணிக்கும் அடுத்த இரண்டு போட்டிகளும் சவாலாய் அமைந்துள்ளன. மொத்தத்தில், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளுக்கும் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் வாழ்வா, சாவா என்ற கட்டத்தில்தான் உள்ளது. இந்தப் பட்டியலில் இலங்கை 53.33 என்ற விகிதத்தில் 3வது இடத்திலும் தென்னாப்பிரிக்கா 48.71 என்ற விகிதத்தில் 4வது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

image

இரண்டாவது போட்டியில் நடந்தது என்ன? ஸ்கோர் விவரம்

முன்னதாக, டெல்லியில் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்கிய 2வது டெஸ்டில் டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்தது. இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணியைவிட 1 ரன் பின்தங்கி இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி, 113 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. பின்னர் 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி வைத்த வெற்றி இலக்கை இந்திய அணி எடுத்து வெற்றிபெற்றது.

26.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. சர்வதேச ஆண்கள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 100வது வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் தொடரில் இந்திய அணி 2-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை வகிக்கிறது. மேலும், சர்வதேச ஆடவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 100வது வெற்றியை இந்தியா பதிவு செய்துள்ளது. முதல் போட்டியைப்போலவே, இரண்டாவது போட்டியும் மூன்று நாட்களிலேயே முடிவு பெற்றிருப்பது பேசுபொருளாகி உள்ளது.

ஜெ.பிரகாஷ்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.