நம் கண்முன்னே இன்று உலகளவில் நடந்துவரும் ஒரு மாற்றம் மின்சாரமயமாகிவரும் போக்குவரத்துத்துத் துறை. இந்த மாற்றத்தை நாம் சரியான வழியில் ஏற்றுக்கொள்ள தமிழக அரசு ‘மின்சார வாகனக் கொள்கை 2023’-யை சமீபத்தில் அறிவித்துள்ளது. இதன் முக்கிய அம்ச‌ங்கள், தாக்கங்கள் என்ன என்று பார்ப்போம்.

Electric Vehicle

தேசிய அளவில் இந்தியாவில் 2015-ல் FAME (Faster Adoption and Manufacture of Electric and Hybrid Vehicles) கொள்கை அறிவிக்கப்பட்டது. இந்தக் கொள்கை மின்சார வாகனத் (electric vehicle – EV) த‌யாரிப்பாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் குறிக்கோளுட‌ன் அமல்படுத்தப்பட்டது. தயாரிப்பாளர்க‌ளுக்கும் சார்ஜ் செய்யும் நிலையங்க‌ளுக்கும் மானியங்கள் அளிக்கப்பட்டன. வாகனம் வாங்குவோருக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது.

மின்சார வாக‌னக் கொள்கை

தமிழகத்தில் 2019-ல் முதன் முதலில் EV கொள்கை அறிவிக்கப்பட்டது. தமிழகத்தை ஒரு பசுமையான மாநிலமாக ஆக்குவதுடன் இதன் மற்றொரு குறிக்கோள் மின்சார வாகனத் தயாரிப்பில் முதலீடுகளை ஈர்ப்பது. இதன்படி பொருள்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள், ஆட்டோ, டாக்ஸி போன்ற பொதுமக்கள் பயன்படுத்தும் வண்டிகளுக்கு சில ஆண்டுகளுக்கு அனுமதி (permit) வாங்கத் தேவை இல்லை என்று அரசு அறிவித்தது. சாலை வரி விலக்கு வழங்கப்பட்டது. பொதுமக்கள் சார்ஜ் செய்யும் நிலையங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அவற்றில் சூரிய ஒளி, காற்று மூலம் தயாரிக்கப்படும் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் அளிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்தது. புதுப்பிக்கத்தக்க மின்சாரத் தயாரிப்பில் தமிழ்நாடு ஒரு முன்னோடி.

தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில், வரி விலக்குகள், மானியங்களைத் தாண்டி வேலைவாய்ப்பை வளர்க்கும் வகையில் சில கொள்கைகள் வகுக்கப்பட்டன. மின்சார யுகத்திற்குத் தேவைப்படும் புதுத்திறன்க‌ள் கற்றுக்கொள்ள நிதி உதவி வழங்கப்பட்டது. புதிதாக உருவாக்கிய வேலைவாய்ப்புகளில் பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு (provident fund) அரசாங்கம் பொறுப்பு ஏற்றுக்கொண்டது. போக்குவரத்துக் கழக‌ங்களின் பேருந்துகள் படிப்படியாக மின்சாரமாயமாக்கப்படும் திட்டம் இருந்தது. வாகனத் துறையில் முன்னோடியான தமிழகத்தில் மின்சாரமயமாக்கப்பட்ட போக்குவரத்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், மற்றும் திருநெல்வேலி என ஆறு நகரங்களில் முதலில் சோதனை செய்யப்படும்.

புதிய 2023 கொள்கை

வேகமாக மாறிவரும் EV உலகில் காலத்தின் போக்கிற்கு ஏற்ப கொள்கைகளை மறுபரிசீலனை செய்வது அவசியம். அதன்படி, த‌மிழ்நாட்டில் புதிய EV கொள்கை 2023 சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதை நான்கு கோணங்களில் பார்க்கலாம். அவை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தயாரிப்பாளர்கள், சார்ஜ் செய்யும் நிலையங்கள், மற்றும் ஒட்டுமொத்த சுற்றுச்சூழ‌ல் அமைப்பு (ecosystem). வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை, தனிப்பட்ட வாகனங்களுக்கு மட்டும் இல்லாமல் வணிகத்திற்குப் பயன்படுத்தப்படும் வாகனக் குழுக்களுக்கும் (commercial fleet) வரிவிலக்கு அளிக்கப்படும்.

கரோலா ஆல்ட்டிஸ் FFEV (Flex Fuel Electric Vehicle)

புதிய கட்டடங்களில் தொடக்கத்தில் திட்டமிடும்போதிலிருந்தே சார்ஜ் செய்யும் அடிப்படை வச‌தி சேர்க்கப்பட வேண்டும். தயாரிப்பாளர்களுக்கு மூலதனம், வருமானம் சார்ந்த மானியம், வரித் தள்ளுபடி வழங்க‌ப்படும்.

FAME 2 திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் 281 சார்ஜிங் நிலையங்கள் வழங்கப்பட்டுள்ளன. சார்ஜிங் நிலையங்கள் போதுமான அளவு இல்லாவிட்டால் மக்கள் மின்சார வாகனங்களை வாங்க மாட்டார்கள். அதே சமயம், EV விற்பனை ஒரு அளவிற்கு வரும் வரை முதலீட்டாளர்கள் சார்ஜிங் நிலையங்களில் முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள். முதலில் கோழி வந்ததா அல்லது முட்டை வந்ததா என்ற நிலையில், இந்த 281 நிலையங்கள் மின்சாரமயமாக்கலுக்கு ஒரு உத்வேகம் அளிக்கும்.

சார்ஜிங் நிலையங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

* வேகமான சார்ஜிங்,

* மெதுவான சார்ஜின் மற்றும்

* பேட்டரியை பரிமாறிக்கொள்வது (swapping). EV கொள்கையில் ஒவ்வொரு வகைக்கும் குறிப்பிட்ட அளவு வரை மானியம் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்டார்ட் அப்களுக்கு உதவும் வகையில் திட்டங்கள்…

EV துறையில் புதிய யோச‌னைகள் செயல்படுத்த பல வாய்ப்புகள் இருக்கின்றன. இதற்குத் தேவைப்படும் முதலீடும் அதிகம் இல்லை. மின்சாரமயமாக்கப்பட்ட எதிர்காலத்தில் மின்னணுவியல் மற்றும் மென்பொருள்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும். சுய தொழில்முனைவோர், ஸ்டார்ட் அ‌ப்களுக்கு உதவும் வகையில் இந்த கொள்கையில் அலுவலகம், வழிந‌டத்த உதவி (mentoring), சிறிய அளவில் தொழில் தொடங்க நிதி போன்ற உதவிகள் செய்யப்படும்.

Startup

மின்சாரமாயமாக்கலுக்கான‌ சுற்றுச்சூழல்

போக்குவரத்தின் மின்சாரமயமாக்கலைத் தயாரிப்பாளார்கள், வாடிக்கையாளர்கள், சார்ஜிங் இயக்குபவர்களையும் தாண்டி ஒரு சுற்றுசூழலாகப் பார்க்க வேண்டும். கல்வித்துறை இதில் முக்கியப் பங்கு வகிக்கும். பொதுமக்களிடையே விழிப்புணர்வு முக்கியம். பழுதானால் சரிசெய்யும் ரிப்பேர் மையங்கள் அவசியம். EV துறையில் ஆயிரக்கணக்கான‌ வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்புண்டு. ஆனால், அதற்கான திறன்கள், கல்லூரிகள், பாலிடெக்னிக்களில் தொடங்கி அனுபவம்மிக்க வாகனத் துறை வல்லுனர்கள் வரை வளர்க்கப்பட வேண்டும். அப்படி செய்யாவிட்டால் இருக்கும் வேலைகளை இழக்கும் நிலைமை உருவாகும். உதாரண‌மாக, ஃபோர்ட் நிறுவனம் மின்சார வாகனங்களால் ஐரோப்பாவில் வரும் மூன்று ஆண்டுகளில் 3,000-த்திற்கும்மேல் வேலைவாய்ப்புகள் நீக்கப்படும் என்று அறிவித்தது.

தமிழகத்தின் புதிய கொள்கையில் இந்த சுற்றுச்சூழல் வளர சில நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட திறன்க‌ளை வளர்க்க முயற்சிகள் எடுக்கப்படும். பெட்ரோல், டீசல் வாகனங்களில் என்ஜினிற்குப் பதில் மோட்டார் பொறுத்துவதற்கு குறிப்பிட்ட அளவு வரை ஊக்கத்தொகை அளிக்கப்படும். வாகனங்களில் பாதுகாப்பை உறுதிசெய்ய தரக்கட்டுப்பாட்டு சோதனைகள் ஊக்குவிக்கப்படும். கிருஷ்ண‌கிரியில் ஒரு பிரத்யேகமான மின்சார வாகனத் தொழில் துறை பூங்கா தொடங்கப்படும். தொழில் துறை, கல்வித் துறை இரண்டும் சேர்ந்து ஒத்துழைக்க, ஆராய்ச்சி செய்ய‌ ஆய்வகங்கள் உருவாக்கப்படும்.

SemiSolid lithium-ion cells

காஷ்மீரில் லித்தியம்.

இந்தியாவில் சார்ஜிங் நிலையங்கள், பேட்டரிக்களை மறுசுழற்சி செய்யத் தேவைப்படும் அடிப்படை வச‌திகள் அதிகரிக்க வேண்டும். பேட்டரிக்கள் தயாரிக்க‌ அதிகம் தேவைப்படும் ஒரு உலோகம் லித்தியம். சமீபத்தில் இந்தியாவில் முதன்முறையாக‌ ஜம்மு காஷ்மீரில் லித்தியம் 6 மில்லியன் டன் வரை இருப்பதாகவும் பேட்டரிக்களில் அவற்றைப் பயன்படுத்த சாத்தியக்கூறு அதிகம் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இது இறக்குமதியைத் தவிர்த்து உள்நாட்டில் EV தயாரிப்பதற்கான ஒரு நல்ல செய்தியாகும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.