அதானி நிறுவன பங்குகள் இன்று மீண்டும் சரிவைச் சந்தித்துள்ளதையடுத்து, கெளதம் அதானி உலக பணக்காரர் பட்டியலில் 24வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

60 சதவீதத்திற்கும் மேல் சரிந்த அதானி குழுமம்

அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த ஜனவரி மாதம் 24ஆம் தேதி வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு, ஆசியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான அதானி குழுமம் தொடர் சரிவுகளைச் சந்தித்து வருகிறது. கடந்த 13 வர்த்தக நாட்களில் அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் சரிந்துவிட்டது. அதாவது, அதானி நிறுவன பங்குகள் விலை 60 சதவீதத்திற்கும் மேல் சரிந்துள்ளது. அதன்படி, கடந்த டிசம்பரில் ரூ.12,40,353 கோடியாக இருந்த அதானியின் சொத்து மதிப்பு இன்று ரூ.4,33,297 கோடியாக வீழ்ச்சியடைந்துள்ளது.

image

இன்று 5 சதவிகிதம் சரிவைக் கண்ட பங்குகள்

இதில் இன்றைய வர்த்தகத்தில் அதானி குழுமத்தின் பங்குகள் மேலும் சரிவைச் சந்தித்தன. நேற்றும், அதானி குழும பங்கு விலை ஒரே நாளில் 5 சதவீதம் சரிந்ததால் அவற்றின் சந்தை மதிப்பு ரூ.51,525 வீழ்ச்சியடைந்தது. அதானி குழும பங்கு விலைகள் இன்றும் 5 சதவீதம் சரிந்ததால் சந்தை மதிப்பு மேலும் ரூ.50,000 கோடிக்கு மேல் வீச்சியடைந்துள்ளது. ஜனவரி 24ஆம் தேதி ரூ.19.2 லட்சம் கோடியாக இருந்த அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு ரூ.9 லட்சம் கோடிக்குக் கீழ் சென்றுவிட்டது.

சரிவைச் சந்தித்த பங்குகள்

அதானி கிரீன் எனர்ஜி பங்கு ரூ.34 குறைந்து ரூ.653 ஆகவும், அதானி பவர் பங்கு ரூ.7 குறைந்து ரூ.148 ஆகவும், அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு ரூ.56 குறைந்து ரூ.1,071 ஆகவும், அதானி டோட்டல் கேஸ் பங்கு ரூ.50 குறைந்து ரூ.1,133 ஆகவும், அதானி வில்மர் நிறுவன பங்கு ரூ.20 குறைந்து ரூ.393 ஆகவும் வீழ்ச்சி அடைந்துள்ளன. அதானி என்டர்ப்ரைஸ்ர்ஸ் பங்கு ரூ.44 குறைந்து ரூ. 1,674 ஆக உள்ளது. அம்புஜா சிமெண்ட்ஸ் பங்கு ரூ.7 குறைந்து ரூ.336 ஆகவும், ஏசிசி பங்கு விலை ரூ.4 சரிந்து ரூ.1,819 ஆகவும் உள்ளது. இதனிடையே அதானி குழுமத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஒரே நாளில் ரூ.53,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதானி சொத்து மதிப்பு வீழ்ச்சியடைந்ததை அடுத்து உலக பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருந்த கெளதம் அதானி 24வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

image

சரிவுக்கு முக்கியக் காரணங்கள்

கடந்த வாரம் குழுமப் பங்குகளின் விலை சரிவைத் தடுக்கும் வகையிலும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும், “2024 செப்டம்பருக்குள் கட்ட வேண்டிய கடன் தொகையில் ஒரு பகுதியை முன்னரே செலுத்துகிறோம்” என அதானி உறுதியளித்திருந்தார். இதையடுத்து, அவரது பங்குகள் சற்றே உயர்வைக் கண்டன. ஆனால், மீண்டும் அதானி குழுமப் பங்குகள் இந்த வாரம் சரிவை சந்தித்து வருகின்றன. அதானி நிறுவனம் மீது இந்திய பங்கு சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி, விசாரணை மேற்கொண்டிருப்பதுதான் அவரது பங்குகள் மீண்டும் சரிவைச் சந்திக்க காரணம் எனச் சொல்லப்படுகிறது. இந்த விசாரணையின் முதற்கட்ட அறிக்கையை இந்த வாரத்தில் நிதியமைச்சகத்திடம் செபி ஒப்படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதானி நிறுவனங்களில், மொரீசியஸ் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள 38 அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி டாலர்கள் அளவுக்கு முதலீடு செய்துள்ளன. இவற்றை பற்றி முதல் கட்ட ஆய்வுகளை மேற்கொண்ட மொரீசியஸின் நிதி சேவைகள் ஒழுங்குமுறை ஆணையம், `இவை மொரீசியஸின் சட்ட விதிகள் எதையும் மீறவில்லை’ என்று அறிவித்துள்ளது. இந்த ஆய்வறிக்கையைதான் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் செபி அமைப்பு, இந்த வார இறுதியில் சமர்பிக்க உள்ளது. இந்நிலையில் அதானி குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருவதும், எதிர்க்கட்சிகள் எழுப்பி வரும் பிரச்சினைகளும் அவரின் குழும பங்கு சரிவுக்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.

image

அமைச்சர் அமித் ஷா பதில்

இவையாவும் ஒருபுறமிருக்க, மறுபுறம் அதானி குறித்த எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளித்துள்ளார். அவர் அளித்த பதிலில், “அதானி விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அதனால் அதுபற்றி விமர்சிப்பது முறையல்ல. ஆனால், ஹிண்டன்பர்க்-அதானி விவகாரத்தில் பா.ஜ.க. பயப்படவோ, மறைப்பதற்கோ எதுவும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், “அதானி விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை தேவை என்ற எங்களது கோரிக்கையில் இருந்து மத்திய அரசு தப்பி ஓடுவது ஏன்? மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்றால் பின்னர் ஏன் அவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்? நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நாங்கள் எழுப்பிய கேள்விகளை அவர்கள் நீக்கி உள்ளனர். நாங்கள் அமைதியாக இருக்கும்படி மிரட்டப்பட்டு வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி: அதானி பற்றிய முழுக் கட்டுரையையும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

– ஜெ.பிரகாஷ்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.