மதுரை திராவிட கழகத்தினர் நடத்திய மாநாட்டில், திமுக பொருளாளரும் எம்பியுமான டி.ஆர்.பாலு சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது மீண்டும் தமிழக மக்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திராவிடர் கழகத்தின் மாநாடு

சேது சமுத்திர கால்வாய் திட்டத்தைச் செயல்பட வலியுறுத்தி மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் மாநாடு நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி, தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ்.அழகிரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சியினர் கலந்துகொண்டனர்.

image

டி.ஆர்.பாலுவின் சர்ச்சை பேச்சு

இதில் திமுக பொருளாளரும் எம்.பியுமான டி.ஆர்.பாலு பேசியதுதான் மீண்டும் விமர்சனங்களுக்கு வித்திட்டுள்ளது. ”நான் கொஞ்சம் முரடன்போல என்று கூறுவார்கள். உண்மைதான். நான் தவறு நடக்கும்போது கொஞ்சம் முரடனாகி விடுவேன். அதனை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது. ’உங்களை எவனாவது சீண்டினால் அமைதியாக இருக்க முடியுமா? திருப்பி அடிக்க முடியுமா’ ”என கி.வீரமணியைப் பார்த்து பேசும் அவர், ”அதற்கு உங்களிடம் பலம் இல்லை. ஆனால், என்னிடம் இருக்கிறது. அதனால் என்னால் அடிக்க முடியும். நான் திருப்பி அடிப்பேன். எனது கட்சித் தலைவரை சீண்டினால், எவனாவது அய்யா (கி.வீரமணி) மீது கைவைக்க வந்தால் அவனின் கைகளை வெட்டுவேன். இது எனது தர்மம். கைகளை வெட்டுவது நியாயம். அது நியாயம் இல்லை என்பதை நீதிமன்றத்தில் சென்று சொல்லுங்கள். ஆனால், அதற்குள் நான் கைகளை வெட்டிவிடுவேன்” எனப் பேசியிருந்தது மீண்டும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

வருத்தத்தைப் பதிவுசெய்த முதல்வர்

திமுக அமைச்சர்களின் சில பேச்சுகளும், பொதுவெளியில் சில செயல்பாடுகள் சோஷியல் மீடியாவில் வைரல் ஆகி வருவது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி வந்தது. அவரே அந்த வருத்தத்தை ஒரு கூட்டத்தி வெளிப்படுத்தி இருந்தார். அந்தக் கூட்டத்தில் மூத்த தலைவர்களை வைத்துக் கொண்டே முதல்வர் ஸ்டாலின், ”என் முகத்தைப் பார்த்தாலே தெரியும். கட்சியினர் சிலரது செயலால் தூக்கமின்றி தவிக்கிறேன். என்னை தூங்கவிடாமல் செய்கிறார்கள். துன்பப்படுத்துவதுபோல் அமைச்சர்களோ, நிர்வாகிகளோ நடந்து கொண்டால் நான் என்ன செய்வது? தூங்கி எழும்போது புதிதாக என்ன பிரச்சனையை கிளப்பி உள்ளனர் என்ற பயத்தோடே எழுவதாக புலம்பினார். மேலும், பொது மேடைகளில் பேசும்போது கவனித்து பேச வேண்டும் என்று தெரிவித்தை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு வருகின்றனர் திமுக அமைச்சர்கள். ஆனால், இது தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

அமைச்சர்களின் கடந்தகால செயல்பாடுகள்

தொண்டர்களை தள்ளிய கே.என்.நேரு

சமீபத்தில்தான் சேலத்தில் (ஜனவரி 26) நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளச் சென்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, தொண்டர் ஒருவர் சால்வை அணிவிக்க முயன்றார். அப்போது மேடையில் இருந்த மூத்த அமைச்சர் கே.என்.நேரு அந்த தொண்டரின் தலையில் கையை வைத்து தள்ளி வெளியேற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது.

நாற்காலியும் அமைச்சர் நாசர் ரியாக்‌ஷனும்

திருவள்ளூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்டம் ஒன்றில் திமுகவினரைப் பார்த்து, ’போடா நாற்காலியை எடுத்து வா’ என்று தமிழக பால்வளத் துறை அமைச்சர் நாசர் சொல்லி, கல்லை எடுத்து எறிந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.

image

பேருந்தில் ஓசி பயணம் – அமைச்சர் பொன்முடி

பேருந்தில் பெண்களுக்கான இலவச பயணத்தை ’ஓசி பயணம்’ என அமைச்சர் பொன்முடி பேசியிருந்ததும், அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆரிடம் மனு கொடுக்க வந்த பெண்ணின் தலையில் அமைச்சர் தாக்கியதும் கடும் விமர்சனத்தை எழுப்பின. அதுபோல், முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவின் மனுஸ்ருதி குறித்த பேச்சும் அதிர்வலையை உண்டாக்கியது. அமைச்சர் ராஜகண்ணப்பன், வட்டார வளர்ச்சி அலுவலரை, ஜாதிப் பெயரை சொல்லி திட்டியதாக எழுந்த புகாரும் இந்த வரிசையில் அடங்கும்.

image

மூத்த அமைச்சர் துரைமுருகன், இல்லத்தரசிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் குறித்துப் பேசியபோது, ’சில்லரை மாற்றிக் கொண்டிருக்கிறோம்’ எனக் குறிப்பிட்டதும்,  அமைச்சர் கே.என்.நேரு, தனக்கு வேண்டிய டிஎஸ்பியை பார்த்து, ’அவரின் திறமை என்ன என்றால், ஒருவரை குற்றவாளியாக ஆக்க முடியும், குற்றவாளி பட்டியலில் இருந்து நீக்க முடியும்’ என்று தெரிவித்ததும்,  போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், ’ஆம்னி பேருந்து கட்டண உயர்வு ஏழைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை’ என்று பேசியதும் என விவாதப்பொருளான திமுக தலைவர்களின் பேச்சுகள் தொடர் கதையாகிக் கொண்டிருக்கின்றன. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.