இபிஎஸ் தரப்பை தான் அதிமுக என மக்கள் நினைக்கின்றனர். இரட்டை இலை சின்னம் கிடைக்கவே காத்துக் கொண்டுள்ளோம் என முன்னாள் அமைச்சர் சல்லூர் ராஜூ தெரிவித்திருக்கிறார்.

மதுரை கோச்சடை பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தனது மகன் தமிழ்மணி நினைவாக இலவச மருத்துவ முகாம் நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது மனைவி மற்றும் மகன்களுடன் துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது, ஈரோடு தேர்தலில் குழப்பமே இல்லை. நாங்கள் தெளிவாக உள்ளோம் என்றார் செல்லூர் ராஜு. தொடர்ந்து, ஓபிஎஸ் வேட்பாளர் அறிவிப்பேன் எனக் கூறியது குறித்த கேள்விக்கு, எல்லோரும் ஜனநாயக முறைப்படி அவரவர் அறிவிக்க உள்ளார்கள். ஆனால், மக்கள் இபிஎஸ் தரப்பையே அதிமுக என நினைக்கின்றனர். மக்கள் தான் எஜமானர்கள் மக்கள் தான் தலைவர்கள் மக்கள் பார்த்து யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என்று கூறியுள்ளார்.

image

இதையடுத்து, “மூத்த மத்திய அமைச்சராகவும் திமுகவின் பொறுப்பு மிக்க தலைவராகவும் இருக்கும் டி.ஆர்.பாலு வன்முறையை கையில் எடுக்கும் வகையில் பேசுவது முறையல்ல. ஆசிரியர் வீரமணிக்கு டி.ஆர்.பாலு குறிப்பிட்டது போல எதுவும் நடக்கவில்லை. டி.ஆர்.பாலுவின் பேச்சு கண்டிக்கத்தக்கது. டி.ஆர்.பாலுவின் பேச்சு திமுக எவ்வளவு வன்முறை எண்ணம் நிறைந்தது என்பதையே காட்டுகிறது.

மன்னர், மன்னரின் மகன், இளையராஜா அடுத்து, கொள்ளு ராஜா தற்போது கொள்ளு ராஜாவாக இன்ப நிதி உள்ளார். ஒரு மூத்த அமைச்சரான, மூன்றாவது இடத்தில் இருக்கும் கே.என்.நேரு எவ்வளவு தூரம் திராவிட இயக்க பகுத்தறிவு கொள்கை சிந்தனையில் இருந்து வெளியேறி உதயநிதிக்கும் இன்பநிதிக்கும் கொடி பிடிப்போம் என்று பேசுவதெல்லாம் வாரிசு அரசியலில் ஆழமான அடையாளத்தையே காட்டுகிறது.

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வந்து நல்லது செய்யலாம் ஆனால், உதயநிதி ஸ்டாலின் நேற்று வரை என்ன நல்லது செய்தார். அப்பாவுக்கு துணையாக அரசியலுக்கு வருகிறேன் எனச் சொல்லிவிட்டு தற்போது மூத்த அமைச்சர்கள் அனைவரும் உதயநிதி ஸ்டாலினுக்கு கப்பம் கட்டுவது போல கட்டிக் கொண்டுள்ளனர். இதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

image

சின்னம் கிடைக்காததால் வேட்பாளரை அறிவிக்கவில்லை என்று சொல்வது தவறு, நீதிமன்றம் ஏற்கனவே எங்களுக்கு சாதகமாக கூறிவிட்டது. எந்த சந்தேகமும் வேண்டாம். எங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பதற்காகத்தான் நாங்கள் காத்துக் கொண்டு இருக்கிறோம். மக்கள் எங்களைத்தான் உண்மையான அதிமுக என நினைக்கின்றனர். 20 மாத திமுக ஆட்சியில் எண்ணற்ற துயரங்களை சந்தித்து வருவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இஸ்லாமிய வீடுகளில் தான் எங்களை அதிக அளவில் அழைத்து உபசரிக்கின்றனர். அதிமுக தான் வர வேண்டும் என வாக்களித்ததாகவும், ஆனால், இவர்கள் ஆட்சியில் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறோம் என எங்களை வீட்டில் அமர வைத்து வேதனை தெரிவிக்கின்றனர். மக்கள், பெண்கள் இஸ்லாமியர்கள் எல்லோரும் திமுகவுக்கு எதிரான மன மாற்றத்தில் உள்ளனர்.

தேடிப்போய் கூட்டணிக்கு அழைக்க வேண்டிய நிலை நிச்சயமாக இல்லை. ஒரு அண்ணன் தம்பிக்குள் பிரிவு வருகிறது. சின்ன கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. அதன் காரணமாக ஏற்கனவே உள்ள நண்பர்களை சென்று பார்ப்பதில் தவறு ஏதுமில்லை. யாரையும் கூட்டணியில் பிடித்து வைக்க முடியாது. எங்களை ஆதரித்தே ஆக வேண்டும் என்று நிர்பந்திக்க முடியாது. நாங்கள் யாருக்கும் எஜமானர்கள் இல்லை. நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை.” என்றார் செல்லூர் ராஜூ.

image

எங்கள் கூட்டணியில் உள்ள நண்பர்களை நாங்களாக விலக்கியது கிடையாது என்றவரிடம் பாஜக வேட்பாளரை நிறுத்தாவிட்டால் நாங்கள் வேட்பாளரை நிறுத்துவோம் என ஓபிஎஸ் கூறியது குறித்த கேள்விக்கு, ”அது அவரின் கருத்து. நாங்கள் ஈரோடு கிழக்கில் வேட்பாளரை நிறுத்த உள்ளோம். ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி சாதனை புரிவார். மக்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் தான் உள்ளனர். பெருந்தலைவர் காமராஜரை எதிர்த்து அன்றைய திமுக மாணவர் அணி தலைவர் சீனிவாசன் வெற்றி பெறவில்லையா. மக்கள் தான் எஜமானர்கள். மக்கள் தான் நீதிமான்கள். மக்கள் நினைத்தால் தான் வெற்றிபெற முடியும்.

பெருந்தலைவர் காமராஜரை விட இளங்கோவன் என்ன பெரிய ஆளா. இடைத்தேர்தல் சாக்கடை தேர்தல் எனவும், அதில் எல்லாம் நிற்க மாட்டோம் என ஒரு காலத்தில் பேசிய இளங்கோவன் தற்போது எதற்காக தேர்தலில் நிற்கிறார் என தெரியவில்லை. திமுக ஆட்சியில் இருப்பதால் தன்னை கரை சேர்ப்பார்கள் என நினைத்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நிற்கிறாரா என தெரியவில்லை.

image

அதிமுகாவுக்கு எல்லாமே நல்லபடியாக நடக்கும். தொடக்க பந்தயத்திலேயே வேகமாக அதிமுக செல்ல உள்ளது. நேற்று இருப்பவர் இன்று இல்லை இன்று இருப்பவர் நாளை இல்லை. எல்லாமே நல்லபடியாக நடக்கும் அதிமுக சிறப்பாக போய்க்கொண்டுள்ளது.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரும் இல்லை எங்களுடைய எதிரிகளையே எங்களால் பார்க்க முடியவில்லை. இடைத்தேர்தலில் ஜனநாயகம் தான் வெல்லும். பணநாயகம் வென்றதாக சரித்திரம் இல்லை. ஈரோடு பொதுமக்கள் சிறப்பானவர்கள். பெரியார் பிறந்த பூமி என்பதால் நம்பிக்கையோடு நிற்க உள்ளோம். மக்கள் வெற்றி பெற வைப்பார்கள்.” இவ்வாறு செல்லூர் ராஜூ கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.