சில்வர் சிந்து என கேலி செய்தவர்கள் முன் தங்க மங்கையான ரகசியம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து.

திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கேர் இன்டர்நேஷனல் என்ற தனியார் பள்ளியில், பேட்மிட்டன் வீராங்கனையான பத்மபூஷன் பி.வி சிந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய பிவி சிந்து தான் கடந்து பாதைகள் குறித்து மனம் திறந்து பேசினார்.

பிவி சிந்து பேசுகையில், “உங்களது குழந்தைகள் விரும்பும் விளையாட்டை கண்டறிந்து ஊக்கப்படுத்துங்கள். பெற்றோர்களாகிய நீங்கள் தான் உங்களது குழந்தைகள் எதில் ஆர்வமாக உள்ளனர் என்பதை தெரிந்து கொண்டு அவர்களுக்கு உந்துதலை தரவேண்டும். வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படுவது இயல்பான விஷயம் தான். சிலர் சிறு வயதில் வெற்றி பெறுவார்கள். சிலர் அதற்கு பிறகு வெற்றிபெறுவார்கள். ஆனால் வெற்றி பெறுகிறார்களா என்பதே முக்கியம்.

image

வெற்றி என்பது படிப்படியாக தான் கிடைக்கும்-நிறைய பிவி சிந்துவை கண்டறியுங்கள்

நிறைய நேரங்களில் நான் தோல்வி அடைந்து துவண்டுபோன போதெல்லாம் எனது பெற்றோர்கள் தான், எனக்கு தட்டிக் கொடுத்து என்னை ஊக்கப் படுத்தினார்கள். படிப்படியாக தான் முன்னேறினேன். விருதுகள், சான்றிதழ்கள் எல்லாம் படிப்படியாக தான் கிடைத்தது, எதுவும் உடனடியாக கிடைத்துவிடாது.

image

இங்கு எண்ணற்ற சாதனையாளர்கள் இருக்கலாம். எண்ணற்ற பிவி சிந்துக்கள் இருக்கலாம். அவர்களை கண்டறிந்து வெளி கொண்டு வரும் முக்கிய பொறுப்பு கண்டிப்பாக ஆசிரியர்களுக்கு உண்டு.

சில்வர் சிந்து என கேலி செய்தனர்- ஏன் என்னால் முடியாது என்ற கேள்வி மட்டும் எனக்குள் இருந்துகொண்டே இருந்தது!

நாள்தோறும் காலை, மாலை என 27 கிலோ மீட்டர் பயிற்சிக்காக நான் பயணித்து விட்டு பின்னர் வீடு திரும்புவேன். நான் என் மனதில் எண்ணி கொண்டதெல்லாம் நம்மால் ஏன் முடியாது, தங்க பதக்கத்தை வெல்ல முடியும் என்ற மனஉறுதி எப்போதும் என்னிடம் இருந்தது. 3 மாதம் போன் கூட பயன்படுத்தாமல் இருந்தேன். 3 மாத காலம் எந்த ஒரு துரித உணவுகளையும் சாப்பிடாமல் இருந்தேன்.

image

இந்தியாவிற்காக மேடையில் நிற்கும் போது எப்போதும் எனக்குள் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். சில்வர் சிந்து என்று எனக்கு பலர் பெயரே வைத்து விட்டார்கள். அவர்கள் பேச்சை பொருட்படுத்தாமல் நான் தங்க பதக்கத்தை வெல்வது எப்படி என்பதில் மற்றுமே என் கவனத்தை செலுத்தினேன்.

7 முறை தோற்ற பின்பு தான் வெற்றிபெற்றேன்! நடுத்தரவர்க்கத்தை சேர்ந்தவள் தான் நான்!

இந்தியாவிற்கு தங்கம் வெல்லும் எனது முயற்சியானது 7 முறை தோல்வியிலேயே முடிந்தது. 7 முறை தோற்ற பின்னர் தான் டிசம்பரில் மீண்டும் வெற்றி பெற்றேன். உலக சேம்பியன்ஷிப்பை வென்றேன். என்னுடைய வாழ்வில் நான் கற்று கொண்டது ஒன்று தான். அது, தோல்விகளின் போது நான் என்ன கற்றுக்கொள்ளகிறேன் என்பதே.

image

தங்க பதக்கம் வெல்ல என்னவெல்லாம் கடின பாதையை கடந்து வந்தேன் என்பது எனக்கு உடனே நியாபகம் இல்லை. ஆனால் என்னுடைய வாழ்வில் உண்மையில் எண்ணற்ற கடினமான சூழலை சந்தித்தேன். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள் தான் நான். தங்க ஸ்பூனில் எல்லாம் சாப்பிட்டதில்லை” என்று கூறினார்.

image

பின்னர் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த பி.வி சிந்து, உங்கள் ரோல் மாடல் யார்? என்ற கேள்விக்கு, “என்னுடைய இஸ்பைரேசன் பேட்மிட்டன் வீரர் லிண்டன். முதலில் சிறுவயதில் எனக்கு டாக்டராக வேண்டும் என்கிற கனவுதான் இருந்தது. பின்னர் தான் பேட்மிட்டன் மீது ஆர்வம் வந்தது.

கடினமான நேரத்தில் எப்படி மனதை திடப்படுத்துவீர்கள்?

களத்தில் சிரமமான நேரங்களில் இந்த அளவிற்கு நாம் வளர எவ்வளவு சிரமம் அடைந்தோம், எவ்வளவு பயிற்சி, எவ்வளவு கிலோ மீட்டர் பயணம், இதை தான் என்றும் என் மனதில் எண்ணுவேன். வெற்றி தோல்விகளை கண்டு மனதை மாற்றி கொள்ள மாட்டேன்.

image

விளையாட்டை விரும்பும் போது கல்வி பெரிதல்ல என கூறுவது தவறு-இரண்டும் முக்கியம்

ஒழுக்கம் என்பது மிக முக்கியம். அதே போல் இலக்கு என்பதும் மிக மிக முக்கியம். கல்வியும் – விளையாட்டும் இரண்டுமே முக்கியம் தான். விளையாட்டை விரும்பும் போது கல்வி பெரிதல்ல என்று கூறுவது தவறு. கல்வி உங்களை மீண்டும் புத்துணர்வாக மாற்ற உதவும். கல்வியும் முக்கியம் என்பதை விளையாட்டின் மீது ஆர்வம் உள்ள குழந்தைகள் மறந்து விடக்கூடாது.

image

மேலும் யோகா போன்ற பயிற்சிகளை கண்டிப்பாக மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும்” என கேட்டுகொண்டார் பிவி சிந்து. தொடர்ந்து பள்ளியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.