2030ஆம் ஆண்டில் மனிதர்கள் செய்து வரும் சுமார் 80 கோடி வேலைவாய்ப்புகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தட்டிப்பறித்து இருக்கும் என்று சொல்லப்படுகிறது ஒரு ஆய்வு.

கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கும் மாபெரும் இணையப் புரட்சியின் காரணமாக இன்றைய உலகமே விரல் நுனியில் வந்துவிட்டது. அதன் பின்னணியில் சத்தமின்றி வீற்றிருக்கிறது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence). இன்று கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளிலுமே ஏதோவொரு வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் பின்னிப் பிணைந்திருக்கின்றன.

அவ்வளவு ஏன், நம் அன்றாட வாழ்வில் நமக்கே தெரியாமல் இரண்டற கலந்துவிட்டது இந்த AI.

அப்படி என்ன செய்துவிட்டது AI.. சில எடுத்துக்காட்டுகள்..

செல்போனின் பாதுகாப்புக்கு நாம் பயன்படுத்தும் ஃபேஸ் அன்லாக் வசதியை சாத்தியப்படுத்தியது AI தான். அமேசான், ஃபிளிப்கார்டில் நாம் தற்செயலாக தேடிப்பார்த்த பொருள் ஒன்றை, அடுத்த கணமே யூடியூப், ஃபேஸ்புக்கில் நமக்கு திரும்பத்திரும்ப விளம்பரமாக போட்டுக் காண்பிப்பது இந்த AI தான். இணையத்தில் நாம் தேடுவதை வைத்தே நமக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்பதை துல்லியமாக அறிந்து வைத்துக்கொண்டு, அதற்கேற்ப பரிந்துரைகளை மற்ற இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்கள் வழங்குவது AI உதவியுடன்தான்.

கூகுள் மேப்ஸில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் போகும்போது வழியில் எவ்வளவு நெரிசல் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து சொல்வதும் AI தான். வங்கி சேவைகள், ஆன்லைன் உணவு விற்பனை செயலிகள்…  என இப்படி AI பயன்பாடுகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இது செயற்கை நுண்ணறிவின் தொடக்கப் புள்ளிதான். இன்னும் பெரிய முன்னேற்றங்களை வரும் ஆண்டுகளில் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

image

நேற்று உடல் உழைப்பு.. இன்று மூளை உழைப்பு..

முன்பு வந்த இயந்திரமயமாக்கல், கணினிமயமாக்கல் ஆகியவை மனித உடல் உழைப்பைத்தான் ஆக்கிரமிப்பு செய்தன. ஆனால் தற்போது செயற்கை நுண்ணறிவோ மனித மூளையின் உழைப்பையும் ஆக்கிரமிக்கத் தொடங்கி விட்டது. இந்த செயற்கை நுண்ணறி தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்புகளை தட்டிப்பறிக்கிறதா என்பதை பார்ப்பதற்கு முன்னதாக, AI என்றால் என்ன என்பது குறித்து சுருக்கமான பார்க்கலாம்.  

உங்களுக்காக உங்களைப் போல் சிந்திக்கும்..

உலகில் தற்போது செயற்கை நுண்ணறிவுடன் செயல்படும் பல்வேறு தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படுகின்றன. மனிதன் தாமாக சிந்தித்து செயல்படுவது போன்று பல்வேறு கம்ப்யூட்டர் ப்ரோகிராம்களை உருவாக்கி, அவற்றை மென்பொருளில் உள்ளீடு செய்து அதன் வழியாக ஒரு இயந்திரத்தை சிந்தித்து செயல்பட வைக்கும் முறைதான் செயற்கை நுண்ணறிவு. இதன்படி கணினியால் கட்டுப்படுத்தப்படும் ரோபோ அல்லது மென்பொருளை, மனித மூளை போன்று புத்திக்கூர்மையுடன் சிந்திக்க வைக்கும் விதத்தில் உருவாக்கப்படுகின்றன.

சமீப ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு உள்ள சாதனங்கள் உலகில் பெருமளவு அதிகரித்துள்ளது. உலகின் மிகப்பெரிய தேடுபொறி தளமான கூகுளில் அநேகமாக எல்லா வகையான தொழில்நுட்பங்களிலும் செயற்கை நுண்ணறிவு ஏற்கனவே வந்துவிட்டது. மக்களின் அன்றாட நிகழ்வுகள் மற்றும் வணிகங்களில் செயற்கை நுண்ணறிவு பெரிய அளவில் முக்கியமானதாக மாறிவிட்டது.

வேலைவாய்ப்புகளை தட்டிப்பறிக்கிறதா AI?

மனிதர்கள் கைகளால் செய்யக்கூடிய பல வேலைகளை, செயற்கை நுண்ணறிவு பறித்துவிடும் என்கிற பேச்சு பரவலாக இருக்கிறது. மறுப்பதற்கில்லை. 2030ஆம் ஆண்டில் மனிதர்கள் செய்து வரும் 40 கோடி முதல் 80 கோடி வேலைவாய்ப்புகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கைப்பற்றி இருக்கும் என்றும் இதனால் உலக அளவில் 37.5 கோடி பேர் தங்களது வேலையை முற்றிலும் மாற்றிக் கொள்ள நேரிடும் என்றும் சர்வதேச ஆய்வு நிறுவனமான மெக்கின்ஸி கூறுகிறது.

குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத் துறை, வங்கி சேவை, வாடிக்கையாளர் சேவை மையம் ஆகிய துறைகளில் கணிசமான வேலைவாய்ப்பை செயற்கை நுண்ணறிவு பறிப்பது நிச்சயம் என்கின்றனர் நிபுணர்கள். அதேநேரம் AI பல புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்பதையும் மறுக்க முடியாது.

image

ஏன் பயப்படணும்.. நேற்று கணினி இன்று செயற்கை நுண்ணறிவு..

இயந்திரமயமாக்கல், கணினிமயமாக்கல் கொண்டுவரப்பட்டக் காலத்தில், பலரது வேலை பறிபோகும் என்கிற அச்சம் சூழ்ந்திருந்தது. ஆனால் அவை மனித வேலைப்பளுவை கணிசமாகக் குறைத்ததுடன், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்ததை கண்கூடாகப் பார்த்தோம். அதேபோல்தான் செயற்கை நுண்ணறிவும். AI  வருகையால் நடப்பில் உள்ள சில ஆயிரம் வேலைவாய்ப்பைப் பறிப்பது நிச்சயம் என்றாலும், அதைவிட அதிகமான பணிவாய்ப்புகளை செயற்கை நுண்ணறிவு வழங்கும் என்கிறது உலகப் பொருளாதார கூட்டமைப்பு. செயற்கை நுண்ணறிவு துறை சார்ந்த படிப்புகளின் தேவை எதிர்காலத்தில் அதிகரிக்கும். இப்படிப்புகள் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. அதுசார்ந்த மாற்றங்களுக்கு நாம்தான் தயாராகிக்கொள்ள வேண்டும் என்கின்றனர் வல்லுனர்கள்.

எனவே ஒட்டுமொத்த மனித வளத்தையும் செயற்கை நுண்ணறிவு ஓரங்கட்டிவிடும் என்கிற அச்சம் தேவையில்லை. ஏனெனில் AI என்பதே மனிதர்களால் உருவாக்கப்பட்டு, மனிதனால் கட்டுப்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்பம்தான். செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம், அதை எப்படி பயன்படுத்தப் போகிறோம் என்பதில்தான் இருக்கிறது என்றாலும், சற்று கவனத்துடன் அதை அணுகுவதே மனித சமுதாயத்திற்கு நல்லது.  

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.