பூமியில் ஏற்பட்டிருக்கும் ஒளியின் மாசுபாட்டால் வானம் அதிக பிரகாசத்துடன் இருப்பதாகவும், நமது கண்ணிற்கு புலப்படாத வகையில் நட்சத்திரங்கள் மறைந்து வருவதாகவும் வானியலாளர்கள் அதிர்ச்சியான எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

விண்மீன்கள் நிறைந்த வானமானது எப்படி பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக காணப்படுகிறதோ, அதேபோல் தான் நம் பூமியின் வாழ்க்கைமுறையையும் கண்கொள்ளா காட்சியாக வைத்திருப்பதற்கு முக்கியமான ஆதாரமாக வானில் இருக்கும் நட்சத்திரங்கள் இருந்து வருகின்றன. ஏனென்றால் அவை எப்போதும் பிரபஞ்சத்தை பற்றி அறிந்துகொள்வதற்கு முக்கிய ஆதாரமாக இருக்கின்றன. முக்கியமாக பூமியின் வெப்பநிலையை மற்ற காரணிகளோடு சேர்ந்து ஒரு சரியான மட்டத்தில் இருக்குமாறு பராமரிக்கும் வேலையையும் நட்சத்திரங்கள் செய்கின்றன.

image

இந்நிலையில், தற்போது வானியலாளர்கள் நட்சத்திரங்கள் குறித்து ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளனர். அதன் படி, இரவில் வானமானது ஒளி மாசுபாட்டின் காரணமாக அதிக பிரகாசமானதாக காட்சி தருவதாகவும், இதனால் மந்தமான இருளால் முன்பு கண்களுக்கு புலப்பட்ட நட்சத்திரங்கள், தற்போது பெரிதளவு மறைந்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு குழந்தை பிறக்கும் போது இருக்கும் நட்சத்திரங்கள் – 18 வயதில் இருப்பதில்லை!

அதாவது ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஒரு பெரிய ஆய்வின்படி, வானம் தற்போது 10% பிரகாசமாக இருக்கிறது. அதன்படி முன்பு மனிதர்கள் தங்கள் கண்களால் பார்க்கப்பட்ட நட்சத்திரங்கள் தற்போது மறைந்துவருகிறது. உதாரணமாக கண்களுக்கு புலப்படும் 250 நட்சத்திரங்களின் கீழ் பிறந்த ஒரு குழந்தை, வளர்ந்து அதன் 18ஆவது வயதில் பார்க்கும் போது வெறும் 100 நட்சத்திரங்களை மட்டுமே பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முன்னெப்போதும் இல்லாதவகையில் வானத்தின் பிரகாசம் 10% அதிக பிரகாசமாக இருப்பதாகவும், ஒரு ஆண்டிற்கு 2% மட்டுமே முன்னர் பிரகாசமாக இருந்துவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

இவை முழுக்க முழுக்க ஒளி மாசுபாட்டால் மட்டுமே ஏற்படுவதாகவும், அதைக் கட்டுப்படுத்த முயற்சித்தாலும், நாம் உணர்ந்ததை விட மிக வேகமாக வளர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரச்சனையானது இரவு வானத்தை பார்க்கும் நம் பார்வைக்கு மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகவும், விலங்குகள் மற்றும் மனித இனத்தின் உயிரியல் அமைப்புகளில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக மாறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதன் ஏற்படுத்திய செயற்கை விளக்குகளால் நிகழும் ஒளிமாசுபாடு! 

பொதுவாக வானமானது நட்சத்திரங்கள் மற்றும் சந்திரனின் மென்மையான ஒளியால் மட்டுமே ஒளிரும். ஆனால் தற்போது அதிகளவில் இரவு வானமானது அரிதாகவே இருட்டாக காட்சியளிக்கிறது, மாறாக உலகளவில் மனிதன் பயன்படுத்தும், வளிமண்டலத்தை மாசுபடுத்தும் ஒளியின் சிதறலாள் மட்டுமே வானம் அதிகமாக ஒளிர தொடங்கியுள்ளது. இப்படி மனிதன் வெளிப்படுத்தும் செயற்கை ஒளியின் இருப்பு அதிகமானதின் காரணமாகவே, நட்சத்திரங்கள் விரைவாக மனித கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துவருகின்றன.

image

இப்படி செயற்கையாக வானம் பிரகாசிக்கும் விளைவானது ”ஸ்கைக்ளோ” என்று அழைக்கப்படுகிறது. மனிதனால் உருவாக்கப்பட்ட மாசுபாட்டால் ஏற்படும் வானம் என்பதாகும், இது கடந்த நூற்றாண்டில் உலகின் பெரும்பகுதியில் அதிவேகமாக அதிகரித்துள்ளது. மனிதனால் நிகழும் இந்த அளவை துல்லியமாக அளவிடுவது மிகவும் கடினமான ஒன்றாகும், ஏனெனில் உலகளவில் கதிர்வீச்சைப் பதிவு செய்யும் செயற்கைக்கோள்கள் நவீன எல்.ஈ.டி விளக்குகள் வெளியேற்றும் ஒளியின் சிதறலை கணக்கிடுவதில் உணர்வற்றவை. மற்றும் செயற்கைக்கோள்கள் எடுக்கும் அளவீடானது கிடைமட்டமாக, அதாவது ஜன்னல் வழியாக பார்த்து சொல்லும் அளவீடுகளை ஒத்ததாகும். இதனால் மனிதனின் கண்களால் பார்க்கப்படும் ஒரு அளவீடு ஆய்வுமுறையை மேற்கொண்டு வருகின்றனர் விஞ்ஞானிகள்.

பொதுமக்களால் நடத்தப்பட்ட ஆய்வில் 10% அதிகரித்த வானின் பிரகாசம்!

இந்த அளவீடானது ஆராய்ச்சியாளர்களால் “குளோப் அட் நைட்” என்ற ஆப் மூலம் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் தளத்தைப் பயன்படுத்தி உலகெங்கிலும் உள்ள மக்கள், தங்கள் இருப்பிடத்தில் இருந்தவாறே இரவு வானத்தின் தோற்றத்தை மதிப்பிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும் இதில் பங்குபெற்றவர்களுக்கு ஒளி மாசுபாட்டின் வெவ்வேறு நிலைகளில் நட்சத்திரங்கள் காணப்படும் வரைபடங்களின் தொகுப்பு வழங்கப்படுகிறது. அதைவைத்து அவர்கள் பார்க்கக்கூடிய இரவு வானத்துடன் பொருந்தக்கூடிய ஒரு காட்சியை தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு, ஒட்டுமொத்தமாக ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

image

மேலும் இந்த ஆய்வு முறையானது 2011லிருந்து 2022வரையிலான காலகட்டத்தில் நட்சத்திரங்களை வெறும் கண்களால் பார்த்து, அவற்றின் மாறுதலை ஒப்பிட்டு கூறப்பட்டு வருகிறது. மற்றும் 51,351 வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இருந்து பார்க்கப்படும் அளவீடை வைத்து இவை கணக்கெடுக்கப்படுகின்றன. இந்த ஆய்வின் முடிவில் வானம் எப்போதும் இல்லாத அளவில் 10% அதிகமாக பிரகாசித்துவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் நிரூபிக்கப்பட்ட அதிகளவு ஒளிமாசுபாடு!

image

இந்த ஒளி மாசுப்பாட்டின் அறிக்கையை ஒரு அறிவியல் இதழ் வெளியிட்டுள்ளது. ஒளிமாசுபாட்டை கட்டுப்படுத்தும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், பெரிய மாற்றங்கள் இல்லை என்றும், அதற்கான முயற்சியில் இன்னும் மனிதகுலம் முன்னேற வேண்டும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகரித்து வரும் செயற்கை விளக்குகளால், விலங்குகள் மற்றும் தாவரங்களில் உயிரியல் மற்றும் உடலியல் செயல்முறைகள் பாதிப்படைகின்றன என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக 2022ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் நடத்தப்பட்ட ஆய்வில் எல்இடி முதலிய செயற்கை விளக்குகளால் ஒளிமாசுபாடு அதிகரித்துள்ளதால், மக்கள் பாதிப்படைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.