கேரள நடிகை ஷம்னா காசிம் தனது பெயரை பூர்ணா என மாற்றி தமிழ் சினிமாக்களில் நடித்து வருகிறார். ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமான பூர்ணா ‘மஞ்ஞி போலொரு பெண்குட்டி’ என்ற மலையாள சினிமா மூலம் 2004-ம் ஆண்டு சினிமா துறையில் அடியெடுத்து வைத்தார். ‘ஸ்ரீ மகா லட்சுமி’ என்ற தெலுங்கு சினிமாவில் நடித்ததன் மூலம் பிற மொழி சினிமாக்களிலும் பிரவேசித்தார். பரத் கதாநாயகனாக நடித்த ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ என்ற சினிமா மூலம் 2008-ல் தமிழில் அறிமுகம் ஆனார்.

ஆடுபுலி, கந்தகோட்டை, தகராறு, அடங்கமறு, காப்பான், தலைவி உள்ளிட்ட தமிழ் சினிமாக்களில் நடித்துவந்தார் பூர்ணா. பூர்ணாவின் சொந்த ஊர் கேரளாவின் கண்ணூர். அவர் கொச்சி மரட் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்துவந்தார். 2020-ம் ஆண்டு வெளிநாடுகளில் நகைக்கடை வைத்திருக்கும் தொழில் அதிபரைத் திருமணம் செய்துவைப்பதாக பூர்ணாவை அணுகிய ஒரு கும்பல் பணம் கேட்டு மிரட்டியது. அந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் தங்கம் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. இந்த வழக்கு 2020-ல் பரபரப்பாகப் பேசப்பட்டது.

வீடியோவில் பேசும் நடிகை பூர்ணா

கடந்த அக்டோபர் மாதம் ஜெ.பி.எஸ் குரூப் ஆஃப் கம்பெனி பவுண்டர் சானித் ஆசிஃப் அலியை துபாயில் வைத்து ரகசியமாகத் திருமணம் செய்துகொண்ட பூர்ணா. பின்னர் அவரது திருமண போட்டோக்களை வலைதளத்தில் சர்ப்பிரைசாக வெளியிட்டார். இந்த நிலையில் நடிகை பூர்ணா அம்மா ஆகப்போவதாக யூடியூப் வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

நடிகை பூர்ணா

அந்த வீடியோவில் பேசும் பூர்ணா, “இது நான் வெளியிடும் ஸ்பெஷல் வீடியோ. நான் அம்மா ஆக தயாராகிவிட்டேன். என் அம்மா பாட்டி ஆகவும், அப்பா தாத்தா ஆகவும் போகிறார்கள். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். உங்கள் வாழ்த்துகள் எனக்கு வேண்டும். அனைவருக்கும் மிகவும் நன்றி” எனக் கூறியுள்ளார்.

பின்னர் அம்மா ஆகும் மகிழ்ச்சியைத் தனது உறவினர்களுடன் கொண்டாடும் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. பூர்ணாவின் வீடியோவை ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர். வாழ்த்து மழையில் கமென்ட் பாக்ஸை நிறைத்தும் வருகின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.