கர்ப்பத்தைக் கலைக்கச் சொன்ன கணவன்… கத்தியால் குத்திக் கொன்ற மனைவி!

விழுப்புரத்திலுள்ள நாயகன் தோப்பு என்னும் பகுதியில் வசித்துவந்தவர் கட்டடத் தொழிலாளி சந்தோஷ். இவர் தன் மனைவி சுரேகா, குழந்தைகளுடன் வசித்துவந்திருக்கிறார். இந்த நிலையில், சுரேகா மூன்றாவது முறையாக கர்ப்பம் தரித்திருப்பதையடுத்து, அவர்மீது சந்தேகப்பட்டு கர்ப்பத்தைக் கலைக்கக் கூறியிருக்கிறார். இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த கணவன், தன் மனைவி சுரேகாவைக் கத்தியால் குத்த முயன்றிருக்கிறார். அப்போது அந்தக் கத்தியை வாங்கி சுரேகா, தன் கணவனைக் குத்தி கொன்றுவிட்டு, விழுப்புரம் காவல் நிலையத்தில் சரணடைந்துவிட்டார். கணவனைக் கொன்ற குற்றத்துக்காக சுரேகாவைக் காவல்துறையினர் கைதுசெய்தனர். 

திருமணம் மீறிய உறவு… கணவனைக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி!

சேலம் அன்னதானப்பட்டி அருகேயுள்ள மூணாங்கரடு கொத்தடிமை காலனியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், ஜன.16-ம் தேதி கணவர் உயிரிழந்தார். அவர் மது குடித்து உயிரிழந்ததாகக் காவல்துறையினரிடம் கண்ணீர்மல்கத் தெரிவித்திருக்கிறார் மனைவி.

இந்த நிலையில், மரணத்தில் சந்தேகமடைந்த காவல்துறையினர், இறந்த கணவரின் உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு, அவர் மூச்சுத்திணறி இறந்திருப்பதைத் தெரிந்துகொண்டனர். அதோடு, போலீஸார் மனைவியின் செல்போனை அவருக்குத் தெரியாமல் கண்காணித்துவந்த நிலையில், அவர், ராஜா என்பவருடன் அடிக்கடி பேசுவதைக் கண்டுபிடித்தனர். மேலும், இருவரும் திருமணம் மீறிய உறவில் இருப்பது தெரியவந்தது. இருவருக்கும் ஜீவா தடையாக இருந்ததால், அவர் மதுபோதையில் இருக்கும்போது கவிதா தலையணையால் அமுக்கிக் கொலைசெய்ததும் விசாரணையில் அம்பலமானது.

காவல் நிலையம் அருகே நள்ளிரவில் திமுக பிரமுகர் வெட்டிக் கொலை!

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை தெற்கு பஜார் பகுதியைச் சேர்ந்தவர், அபே மணி என்னும் பொன்னுதாஸ் (வயது 38 ). தி.மு.க-வில் 38-வது வார்டு செயலாளராகப் பொறுப்பு வகித்துவந்தார். ஆட்டோ மெக்கானிக்காக இருந்த அவர் கடந்த சில வருடங்களாகத் தொழிலைவிட்டு விலகி முழுநேர அரசியல்வாதியாக வலம்வந்தார். இந்த நிலையில், ஜனவரி 29, 2022 அன்று நள்ளிரவு 11 மணிக்கு மர்ம நபர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து, அவர்கள் உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். டாஸ்மாக் மற்றும் பார் ஏலத்தில் முன்விரோதம் காரணமாகக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என விசாரணையின் மூலம் தெரியவந்தது.

கொலை

பெண் வனக்காவலர் கொலை… சிறப்புக் காவல் படைக் காவலர் சரண்!

தேனி மாவட்டத்திலுள்ள, போடி தென்றல் நகரிலுள்ள வனச்சரக அலுவலகம் அருகே தனியாக வசித்துவந்தவர் சரண்யா (27). நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், அவரின் கணவர் இறந்தநிலையில், இரண்டு குழந்தைகளும் அவரின் தாயிடம் வளர்ந்துவந்திருக்கின்றனர். இந்த நிலையில், பிப்.12-ம் தேதி சரண்யாவை, தான் கொலை செய்ததாகக் கூறி சிறப்புக் காவல் படைப் பிரிவுக் காவலர் திருமுருகன் என்பவர் சரணடைந்திருக்கிறார். அவர்கள் இருவரும் திருமணம் மீறிய உறவில் இருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் அவர் சரண்யாவைக் கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

சென்னை மாநகராட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்த திமுக பிரமுகர் கொலை!

சென்னை மடிப்பாக்கம் 188-வது வட்ட திமுக செயலாளராகப் பணிபுரிந்தவர் செல்வம். அவர் 188-வது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுவதற்கு மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இந்த நிலையில் பிப்.1-ம் தேதி இரவு அவர் அலுவலகத்தின் அருகே நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த நான்கு மர்ம நபர்கள் செல்வத்தைக் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினர். இந்த நிலையில் உயிருக்குப் போராடிய செல்வம் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.

திமுக வட்டச் செயலாளர் செல்வம்

ஓட ஓட திமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

சென்னையிலுள்ள பல்லவன் பகுதியைச் சேர்ந்தவர் மதன். அதிமுக-விலிருந்து திமுக-வில் மதன் இணைந்திருந்தார். இதையடுத்து, மாநகராட்சித் தேர்தலில் அந்தப் பகுதியில் தி.மு.க-வுக்கு ஆதரவாக வாக்குசேகரித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், அவர் பிப்ரவரி 21, 2022 அன்று காந்தி நகரில் மறைந்த தி.மு.க நிர்வாகியின் படத்திறப்புவிழாவுக்குச் சென்றிருக்கிறார். நிகழ்ச்சி முடிந்து அனைவரும் கலைந்து சென்றதும், மதனை நான்கு பேர் ஓட ஓட விரட்டிக் கொலைசெய்தனர்.

அரசு வேலைக்கு ஆசைப்பட்டு தந்தையைக் கொன்ற மகன்!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரனூர், திடீர் நகரைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர் கீரனூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் துப்புரவுப் பணியாளர் பணியிலிருந்தவர். இவர் பிப்ரவரி 31-ம் தேதியுடன் பணி ஓய்வுபெறவிருந்த நிலையில், பிப்ரவரி 18-ம் தேதி பஞ்சாயத்து அலுவலகத்துக்கு அருகே மதுபோதையில் இறந்திருந்தார். அவரின் உடற்கூறாய்வு அறிக்கையின்படி `அவர் உடலில் விஷம் இருந்ததும், அவர் நெஞ்சில் யாரோ மிதித்திருப்பதும்’ தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அவரின் மகன் பழனியை போலீஸார் விசாரித்தபோது, `என் தந்தை பணியில் இருக்கும்போது இறந்தால் எனக்கு வேலை கிடைக்கும். அதனால் அவர் குடித்த மதுவில், விஷம் கலந்து கொடுத்தேன். மேலும், என் நண்பனுடன் சேர்ந்து அவர் நெஞ்சில் மிதித்துக் கொலைசெய்தோம்” என்று ஒத்துக்கொண்டார். இதைவைத்து போலீஸார் அவர் மகன் பழனியையும், பழனியின் நண்பர்களையும் கைதுசெய்தனர். 

மரணம்

`ஆண் நண்பர்களுடன் பேச வேண்டாம்’ என்று கூறிய தாய்; கொலை செய்த 17 வயது மகள்!

தூத்துக்குடி மாநகராட்சிக்குக் கீழ்வரும் பகுதியில் தூய்மைப் பணியாளராக இருந்தவர் முனியலட்சுமி. தன் கணவரைப் பிரிந்து, 17 வயது மகளுடன் தனியாக வசித்துவந்திருக்கிறார். இந்த நிலையில், தன்னை ஆண் நண்பர்களுடன் பேச வேண்டாம் என்று முனியலட்சுமி கண்டித்திருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த மகள், தன் தாயை நான்கு ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொலைசெய்துவிட்டு வேறு யாரோ கொன்றதுபோல நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, மகளையும், அவரின் நான்கு ஆண் நண்பர்களையும் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

உப்புமாவில் விஷம் கலந்து குழந்தையைக் கொன்ற தாய்!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவருக்கு கார்த்திகா என்ற மனைவியும், மூன்றரை வயது பெண் குழந்தையும் , ஒன்றரை வயதில் ஆண் குழந்தையும் இருக்கின்றனர். 06.04.2022 அன்று வீட்டில் இருந்த எலி மருந்தைச் சாப்பிட்டு ஆண் குழந்தை மயங்கி விழுந்ததாகத் தன் கணவருக்குத் தகவல் கூறியிருக்கிறார். மருத்துவமனையில் குழந்தையைப் பரிசோதித்து, ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூற, உடற்கூராய்வில் குழந்தையின் இறப்பில் சந்தேகம் எழுவதாகக் கூற, போலீஸார் ஜெகதீஷையும், கார்த்திகாவையும் விசாரித்தனர்.

அதில் கார்த்திகாவுக்கு, சதிஷ் என்பவருடன் திருமணம் மீறிய உறவு இருந்தது தெரிய வந்திருக்கிறது. தனக்குக் குழந்தை இருப்பது தெரிந்து சதிஷ் பேசுவதை நிறுத்தியதும், குழந்தை இறந்துவிட்டால் சதிஷிடம் திரும்பப் பேசலாம் என்று, குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் உப்புமாவில் விஷம் கலந்து கொடுத்ததும் தெரியவந்தது. மூத்த மகள் குறைவாகச் சாப்பிட்டதால் பிழைத்துகொண்டதாகவும், இளைய மகன் அதிகம் சாப்பிட்டதால் வீட்டிலேயே இறந்ததாகவும் கார்த்திகா ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து போலீஸார் கார்த்திகாவைக் கைதுசெய்தனர்.

ஒருதலைக் காதல்; மாணவியைக் கத்தியால் குத்திய இளைஞன்!

நீலகிரி மாவட்டம், குன்னூர் கிருஷ்ணாபுரம் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில், 12-ம் வகுப்பு மாணவி படித்துவந்திருக்கிறார். இவரை குன்னூரிலுள்ள கீழ் பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த ஆஷிக் என்பவர் ஒருதலையாகக் காதலித்துவந்திருக்கிறார். இந்த நிலையில், 29.04.2022 அன்று மாணவியைப் பள்ளிக்குச் செல்லும் வழியில் வழிமறித்த ஆஷிக், மாணவியைக் கத்தியால் குத்த, மாணவி கத்தியிருக்கிறார். இதனால், சத்தம் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள் தப்பி ஓட முயன்ற ஆஷிக்கைப் பிடித்து கட்டிவைத்து போலீஸில் ஒப்படைத்தனர். 

போலீஸ்

சாதிக் கயிறு… தகராறில் உயிரிழந்த மாணவன்!

நெல்லை மாவட்டம், அம்பை அருகேயுள்ள பள்ளக்கால் புதுக்குடியில் இருக்கும் அரசுப் பள்ளியில் மாணவர் (17) ஒருவர், 12-ம் வகுப்பு பயின்றுவந்தார். சில தினங்களுக்கு முன்பு இந்தப் பள்ளியில் ப்ளஸ் ஒன் மாணவர்களுக்கும், ப்ளஸ் டூ மாணவர்களுக்கும் இடையே கையில் சமுதாயரீதியாகக் கயிறு கட்டுவதில் மோதல் ஏற்பட்டிருக்கிறது. இந்த மோதலில் காயமடைந்த மாணவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி 23.04.2022-ல் உயிரிழந்தார்.

உணவில் மண் விழுந்ததால் இரண்டு நண்பர்களைக் கொன்ற இளைஞன்!

சென்னையிலுள்ள திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அருண் (25), சதீஷ் (25), தினேஷ் (25). நண்பர்களான மூன்று பேரும் வேலையின்றி சுற்றித் திரிந்திருக்கின்றனர். ஒருநாள் அனைவரும் ஒன்று கூடி மது அருந்திவிட்டு, உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். இதில் அருண் விளையாட்டாகத் தன் செருப்பை எறிந்திருக்கிறார். அப்போது அதிலிருந்த மண் தினேஷின் உணவில் விழ, தினேஷ் கோபமடைந்தார். இந்த நிலையில், அருணும்,சதீஷும் சேர்ந்து தினேஷைத் தாக்க, தினேஷ் வீட்டிலிருந்த மீன் வெட்டும் கத்தியை எடுத்து இருவரையும் ஓட ஓட துரத்திக் கொன்றுவிட்டு போலீஸில் சரணைடைந்தார்.

கொலை

நிலத்துக்காகக் கடப்பாரையால் இரண்டு கொலைகள் செய்த கொடூரம்!

30.05.2022, திருவாரூர் மாவட்டத்திலுள்ள, செருகளத்தூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும், அவருடைய அண்ணனுக்கும் இடையே நிலத்தகராறு ஏற்பட்டது. பாஸ்கரின் மனைவி அலங்காரமேரி, மகன் அஜய்குமார் ஆகியோரை, அவரின் அண்ணன் மகன் செபாஸ்டின் கடப்பாரையில் குத்திக் கொன்றதாகத் தெரிகிறது. நிகழ்வை அறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர், இரு உடல்களையும் உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி தற்கொலை!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகேயுள்ள கணியாமூர் கிராமத்தில் தனியார் மேல்நிலைப் பள்ளியில் பயின்றுவந்த மாணவி ஒருவர், மர்மமான முறையில் மரணமடைந்தார். அந்தச் சமயம், மாணவியின் மரணத்தைச் சந்தேக மரணமாக வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர், கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி ராஜலட்சுமி தலைமையில் விசாரணையை நடத்தினர். இதற்கிடையில், ஜூலை 17-ம் தேதி மாணவி மரணத்துக்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் ஒருகட்டத்தில் கலவரமாக மாறிப்போனது. மாணவியின் மரணத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கள்ளக்குறிச்சி கலவரம்

விருந்துக்கு வந்த மாப்பிள்ளை; வெட்டிக் கொன்ற மாமனார்!

திருவாரூர் மாவட்டத்திலுள்ள, திருத்துறைப்பூண்டிக்கு அருகேயுள்ள வீரபுரம் பகுதியைச் சேர்ந்த முத்தரசன் (23). அதே பகுதியிலுள்ள மங்கல நாயகிபுரத்தைச் சேர்ந்த அரவிந்தியாவை 13.06.2022 அன்று திருமணம் செய்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த ஜூன் 15-ம் தேதி மாமனார் வீட்டுக்கு மனைவியுடன் விருந்துக்குச் சென்றிருக்கிறார்.

அப்போது, மாப்பிள்ளை முத்தரசன், மது போதையில் தன் மனைவி அரவிந்தியாவுடன் தகராறில் ஈடுபட்டு, அவரை அடித்ததாகத் தெரிகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்ணின் தந்தை, புதுணத் தம்பதியைச் சமாதானப்படுத்தியிருக்கிறார். ஆனால், குடிபோதையில் இருந்த மருமகன் முத்தரசன், மாமனாரின் பேச்சைக் கேட்காத நிலையில், கோபத்தில் மருமகனைக் கொலைசெய்திருக்கிறார்.

ஆன்லைன் ரம்மி… ரூ.5 லட்சத்தை இழந்த இளைஞர் தற்கொலை!
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த பட்டணம் பகுதியைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநரின் மகன் சுரேஷ். பி.காம் படித்துவிட்டு வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முயன்றுகொண்டிருந்த இவர், ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி, வெளிநாடு செல்வதற்காக வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை இழந்துவிட்டார். இதனால் மனமுடைந்த சுரேஷ், ஆகஸ்ட் 8-ம் தேதி  “Bye Bye miss you ரம்மி” எனக் கடிதம் எழுதிவைத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சமீபகாலமாக தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

ஆன்லைன் ரம்மி

காதல் திருமணம் செய்த மகளை வெட்டிக் கொலைசெய்த தந்தை!

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் வசித்துவந்த முகத்துக்குட்டி என்பவரின் மகள் ரேஷ்மா (20). அவர் அதே பகுதியைச் சேர்ந்த உறவினர் மகன் மாணிக்கராஜ் (26) என்பவரை காதலித்துவந்திருக்கிறார். இந்த நிலையில், தங்களின் காதலுக்கு ரேஷ்மாவின் தந்தை எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, ரேஷ்மாவும் மாணிக்கராஜும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த ரேஷ்மாவின் தந்தை ஜூலை 25-ம் தேதி ரேஷ்மாவையும், மாணிக்கராஜையும் அரிவாளால் வெட்டிக் கொலைசெய்துவிட்டார். 

கல்குவாரிக்கு எதிராகப் புகார் அளித்த சமூக ஆர்வலர்… லாரி ஏற்றிக் கொலை!

கரூர் மாவட்டம், தென்னிலை சுற்றுவட்டாரப் பகுதியில் செல்வகுமார் என்பவருக்குச் சொந்தமான கல்குவாரி ஒன்று இயங்கிவந்தது. கல்குவாரிக்கு அருகில் ஜெகநாதன் என்பவருக்குச் சொந்தமாக விவசாய நிலம் இருக்கிறது. நிலப் பிரச்னை தொடர்பாகத் தன்னைக் கொலைசெய்ய முயன்றதாக சமூக ஆர்வலர் ஜெகநாதன் மீது கடந்த 2019-ம் ஆண்டு செல்வகுமார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில், செல்வகுமாரின் கல்குவாரி, உரிமம் முடிந்து இயங்கிவருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் உள்ளிட்டோருடன் இணைந்து கனிம வளத்துறைக்கு ஜெகநாதன் பல்வேறு புகார்கள் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே , செப்டம்பர் 11-ம் தேதி கல்குவாரிக்குச் சொந்தமான வேன் மோதியதால் ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோதிய வேன் செல்வகுமாருக்குச் சொந்தமானது எனக் கூறப்படுகிறது. இவரை செல்வக்குமார் கொலை செய்திருக்கலாம் என்று சமூக ஆர்வலர் கொடுத்த புகாரின் பேரில் செல்வக்குமார், அவரின் டிரைவர் மீதும் போலீஸார் கொலை வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர். இதில், ஜெகநாதன் கொலைசெய்யப்பட்டது தெரியவந்தது.

குவாரி

குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து மாணவன் கொலை!

காரைக்கால் நேரு நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் அங்குள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்துவந்தார். இதையடுத்து, பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய சிறுவனுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதை விசாரித்ததில், மாணவனின் உறவினர் எனக் கூறி சக மாணவியின் தாய் அவருக்குக் குளிர்பானம் தந்தது தெரியவந்தது.

இந்த நிலையில், காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த மாணவன் சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 3-ம் தேதி உயிரிழந்தார். மேலும் போலீஸார் விசாரணையில், தன் மகளைவிட நன்கு படிக்கிறான் என்பதற்காகக் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்திருக்கிறார் சக மாணவியின் தாய் சகாய ராணி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரைக் கைதுசெய்தனர்.

சாதிச் சான்றிதழ் தரவில்லை; நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்த பழங்குடியினத்தவர்!

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்தவர். அவரின் மகனுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி ஐந்து ஆண்டுகளாக அரசு நிர்வாகத்திடம் போராடியிருக்கிறார். அப்போதும் அவரால் சாதிச் சான்றிதழ் பெற முடியவில்லை என்ற விரக்தியில், அக்டோபர் 11 -ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் அருகே வேல்முருகன் பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்தார். அருகிலிருந்தவர்கள், தீயை அணைத்து மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் கிசிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தீ

கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட தமிழ்ப் பெண்!

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம் எலந்தூர் கிராமத்தில் அண்மையில் இரண்டு பெண்கள் வெட்டிக் கொலைசெய்யப்பட்டதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில், இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது. எர்ணாகுளத்திலிருந்து அந்த இரண்டு பெண்களையும் பணம் கொடுப்பதாகக் கூறி, ஏமாற்றி அழைத்து வந்து கொலைசெய்துள்ளனர்.

இரு பெண்களின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியிருக்கின்றனர். உயிரிழந்த பெண்கள், எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ரோஸ்லின், பத்மா எனத் தெரியவந்திருக்கிறது. இதில் பத்மா தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பரம்பரை மருத்துவரான பகவத் சிங், அவரின் மனைவி லைலா இருவரும் இணைந்து பண ஆசையில் மந்திரவாதி என அறியப்பட்ட ஒருவரின் யோசனையைக் கேட்டு இரண்டு பெண்களை நரபலி கொடுத்திருக்கின்றனர். இதையடுத்து, போலீஸார் பகவத் சிங், லைலாவைக் கைதுசெய்தனர்.

ரோஸ்லின், பத்மா

பரங்கிமலை கல்லூரி மாணவி கொலை!

சென்னையிலுள்ள ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடன் பழகிவந்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் பரங்கிமலை ரயில் நிலையத்தில் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் இருவருக்கும் வார்த்தைத் தகராறு முற்றியிருக்கிறது. அப்போது ரயில் நிலையத்துக்குள் மின்சார ரயில் வந்துகொண்டிருந்த சமயத்தில், சதீஷ் மாணவியைத் தண்டவாளத்தில் தள்ளியிருக்கிறார். இதனால் மின்சார ரயிலில் சிக்கிய மாணவி, உடல் நசுங்கி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பரங்கிமலை ரயில் நிலையத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தால் அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்டு, மாணவியின் தந்தை மாணிக்கம் தன் மகளை நினைத்து கதறியிருக்கிறார். இதையடுத்து, மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மின்சார ரயில் முன் தள்ளிவிட்டு மாணவி கொலை

குளிர்பானத்தில் ஆசிட் கலந்து கொடுத்த சக மாணவன்!

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகேயுள்ள மெதுக்கும்மல் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவன் அதங்கோடு பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்துவருகிறான். பள்ளி வளாகத்தில் வைத்து இந்தச் சிறுவனுக்கு மற்றொரு மாணவன் குளிர்பானம் குடிக்கக் கொடுத்திருக்கிறான். அதைக் குடிக்கும்போது சிறுவனுக்கு நெஞ்செரிச்சல் இருந்ததாகக் கூறப்படுகிறது. மறுநாள் காலையில் சிறுவனுக்குக் காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. சிறுவனை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பெற்றோர் சிகிச்சை அளித்தனர். அங்கு மாணவனுக்கு ஸ்கேன் எடுத்தபோது வாய்ப் பகுதியிலிருந்து குடல் பகுதிவரை ஆசிட் பட்டது போன்று வெந்து கொப்புளம் ஏற்பட்டு வெளிறிய நிலையில் இருந்திருக்கிறது. மேலும், சிறுநீரகத்திலும் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

இதையடுத்து சிறுவனின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்துக்கும், களியக்காவிளை காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். இந்தச் சிறுவன் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்து வந்ததாகப் பெற்றோர் கூறுகின்றனர். காரைக்கால் பகுதியில் தன் மகனைவிட நன்றாகப் படித்த மாணவனுக்கு, குளிர்பானத்தில் விஷம் கலந்துகொடுத்த கொடூரச் சம்பவம் நடந்த நிலையில், அதே போன்று படிப்பில் போட்டி காரணமாக 6-ம் வகுப்பு சிறுவனுக்கு, குளிர்பானத்தில் ஏதாவது அமிலம் கலந்து கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர். சிறுநீரகங்கள் செயலிழந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆசிட்

கோவை கார் வெடிப்புச் சம்பவம்!

கோவை கோட்டைமேட்டில், கடந்த மாதம் 23-ம் தேதி கார் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டிவந்த அதே பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் (25) உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்த முபினின் நெருங்கிய உறவினர்கள் அப்சர்கான், முகமது அசாருதீன் உட்பட ஆறு பேர் கைதுசெய்யப்பட்டனர். உக்கடம் போலீஸார் இந்த வழக்கை விசாரித்த நிலையில், வழக்கு என்ஐஏ-வுக்கு மாற்றப்பட்டது.

உயிரிழந்த முபின், கைதுசெய்யப்பட்ட ஆறு பேரின் பின்புலம் மற்றும் இந்த வழக்கில் மேலும் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கின்றனர். இதற்கும், தீவிரவாத கும்பலுக்கும் தொடர்பு இருக்குமா என எண்ணி தேசிய புலனாய்வுத்துறை விசாரணை நடத்திவருகிறது.

கோவை கார் வெடிப்பு

காதலனுக்குக் கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்த காதலி!

கன்னியாகுமரி எல்லையை ஒட்டி கேரளாவில் அமைந்துள்ள பகுதி பாறசாலை. இந்தப் பகுதியிலுள்ள மூரியங்கரைப் பகுதியைச் சேர்ந்தவர் ஷாரோன் ராஜ் (23). இவர் நெய்யூரிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி ‘ரேடியாலஜி’ இறுதி ஆண்டு படித்துவந்தார். களியக்காவிளை அருகேயுள்ள ராமன்சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா (20) என்ற இளம்பெண்ணுக்கும், ஷோரோன் ராஜுக்கும் நட்பு ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியிருக்கிறது.

இந்த நிலையில், ஷாரோன் ராஜை வீட்டுக்கு வரவைத்து கஷாயத்தில் விஷம் கொடுத்திருக்கிறார் காதலி கிரீஷ்மா. இதையடுத்து, உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாரோன் ராஜ் சிகிச்சை பலனின்றி அக்டோபர் 31-ம் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தியதில், காதலி கிரீஷ்மா ஜாதகத்தை நம்பி பரிகாரத்துக்காகக் காதலனை கஷாயத்தில் விஷம் ஊற்றிக் கொடுத்து கொலை செய்தது தெரியவந்தது.

கிரீஷ்மா – ஷாரோன் ராஜ்

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்! 

சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ரவிகுமார். அவரின் மகள் பிரியா. 17 வயது கால்பந்து வீராங்கனையான இவர் ராணிமேரி கல்லூரியில், பட்டப்படிப்பு படித்துவந்தார். இவருக்கு, வலது கால் மூட்டுப் பகுதியில் ஜவ்வு விலகியதால், கொளத்துார் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடந்தது. மேல் சிகிச்சைக்காக, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குச் சென்றபோது, அவரின் கால் அகற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, நவம்பர் 12-ம் தேதி மாணவி பிரியா ராரீவ் காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தார். கொளத்துார் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அளித்த தவறான சிகிச்சையே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது. 

ஊத்தங்கரை அருகே பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த வெப்பாலம்பட்டி ஜல்லிகிரஷர் அருகே நவம்பர் 24 -ம் தேதி பலத்த வெட்டுக் காயங்களுடன் ஓர் ஆண் சடலம் கிடந்திருக்கிறது. இது குறித்து ஊத்தங்கரை காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்யப்பட்டவர் கலி கண்ணன் என்பது தெரியவந்திருக்கிறது. மேலும் இவர், திருப்பத்தூர் மாவட்டம், பா.ஜ.க நகர துணைத் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மரணம்

திருவண்ணாமலை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொலை!

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த ஒரந்தவாடி கிராமத்தில் பழனி என்பவர் வசித்துவந்திருக்கிறார். இவர் விவசாயம் பார்த்துவந்திருக்கிறார். இவரின் மனைவி வள்ளி. இந்தத் தம்பதிக்கு நான்கு மகள்களும், 4 வயது மகனும் உள்ளனர். இந்த நிலையில், குடும்பத் தகராறு காரணமாக ஆத்திரமடைந்த பழனி, டிசம்பர் 12-ம் தேதி அரிவாளால் மனைவி உள்ளிட்ட 5 பிள்ளைகளையும் சரமாரியாக வெட்டியிருக்கிறார். இதில், மனைவி உள்ளிட்ட 5 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் குடும்பத்தையே கொலை செய்துவிட்டு பழனி தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் ஐந்து பேரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தக் கொலைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.