தமிழ்நாட்டில் கஞ்சா அதிகமாக பயன்பாட்டில் இருப்பதாக கூறப்பட்டு வரும்நிலையில், ஆந்திராவிலிருந்து திருப்பூருக்கு சரக்கு ஆட்டோவில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இது தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் முத்தணம்பாளையம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த சரக்கு ஆட்டோவை சோதனையிட்டபோது, அதில், 9 கிலோ கஞ்சா, 2 பட்டாக்கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பது தெரியவந்தது.

அதையடுத்து போலீஸார், ஆட்டோவில் இருந்த முத்தணம்பாளையத்தைச் சேர்ந்த ஜெபராஜ் என்பவரைக் கைதுசெய்து விசாரித்தனர். அவர் கூறிய தகவலின் அடிப்படையில் கஞ்சா கடத்தலில் தொடர்புடைய கரட்டாங்காடு பகுதியைச் சேர்ந்த ராஜா, செட்டிபாளையத்தைச் சேர்ந்த தீனதயாளன், பாலகிருஷ்ணன், சுதன், வீரபாண்டியைச் சேர்ந்த லட்சுமணன் உள்ளிட்ட 6 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
போலீஸார் இது தொடர்பாக நடத்திய விசாரணையில், ஆந்திராவிலிருந்து ஆட்டோ மூலம் கஞ்சாவை திருப்பூருக்கு கடத்தி வந்து திருப்பூரில் விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக தலைமறைவாக உள்ள மேலும் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.