‘ஷிகர் தவானுக்கு முடிவுரை எழுதிவிட்டார் இஷான் கிஷன் ‘ – தினேஷ் கார்த்திக் தீர்க்கதரிசனம்

இஷான் கிஷனின் இரட்டை சதத்தால் ஷிகர் தவானின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வர உள்ளதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

இந்தியா – வங்கதேசம் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இஷான் கிஷன் இரட்டை சதம் விளாசி வரலாற்று சாதனையை படைத்தார். இப்போட்டியில் காயமடைந்த கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற இஷான் கிசான் அதை பொன்னாக மாற்றி 131 பந்துகளில் 210 ரன்கள் அடித்து இந்திய அணியில் இனி தவிர்க்க முடியாத வீரராக மாறிவிட்டார். இரட்டை சதம் அடிக்கும் நான்காவது இந்திய வீரர் என்று பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்.

இந்திய அணியில் துவக்க வீரராக வருவதற்கு ஷிகர் தவான் கடுமையாக முயற்சித்து வந்த நிலையில் இஷானின் இத்தகைய அதிரடியான ஆட்டத்திற்கு பிறகு தவானின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரும் சூழல் உருவாகியுள்ளதாக கூறுகிறார் தினேஷ் கார்த்திக்.

image

இதுகுறித்து தினேஷ் கார்த்திக் அளித்துள்ள பேட்டியில், ”அடுத்து வரவிருக்கும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் நீங்கள் இஷான் கிஷனை அணியில் சேர்க்காமல் இருக்க முடியாது. இருப்பீர்கள். அப்படியெனில் தவான் எந்த இடத்தில் விளையாடுவார்? மறுபுறம் சுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். எனவே அந்த தொடரில் ரோகித் சர்மா வரும் போது யாரேனும் ஒருவர் வெளியே சென்றாக வேண்டும். அந்த இடத்தில் ஷிகர் தவான் தான் இருப்பார். அதனால் அவருடைய அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கை சோகத்துடன் நிறைவு பெறலாம்.

image

மேலும் புதிதாக பொறுப்பேற்கும் தேர்வுக்குழு சில கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது. முன்னதாக இந்த தொடரில் சுப்மன் கில் இடம் பிடித்திருந்தால் சமீப காலங்களில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் நிச்சயம் அவர் ஓப்பனிங் வீரராக களமிறங்கி இருப்பார். மறுபுறம் கிஷான் கிஷன் தமக்கு கிடைத்த வாய்ப்பை இருகரம் கொண்டு இறுக்கமாக பிடித்துக் கொண்டார்” என்று கூறினார்.

தவற விடாதீர்: மூன்று போட்டிகளிலும் ஒற்றை இலக்கத்தில் ரன்.. ஊசலாடும் ஷிகர் தவனின் இடம்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM