புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில், கருவடிக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலை, காமராசர் மணிமண்டபத்தில் ’மோடி@20 நனவாகும் கனவுகள்’ மற்றும் ’அம்பேத்கர் & மோடி’ தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வள இணையமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை வெளியிட்ட நூல்களை, முதல்வர் ரங்கசாமி பெற்றுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து பேசிய ஆளுநர் தமிழிசை, “பாரதப் பிரதமர் மோடி அவர்கள் நல்லாட்சி செய்து கொண்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக இந்த புத்தகம் தமிழில் வெளிவந்திருக்கிறது. பாரதப் பிரதமரின் நல்ல திட்டங்கள் விமர்சிக்கப்படுகின்றன. பாரதப் பிரதமரின் திட்டங்கள் விமர்சிப்பதற்கு அல்ல என்பதை தமிழக மக்களுக்கு எடுத்துக் கொள்வதற்காக இந்த புத்தகம் வெளிவருகிறது. புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரியாக மாற்ற வேண்டும் என்பது பாரத பிரதமரின் கனவு. ஆனால் இதை ‘டெஸ்ட்’ புதுச்சேரி ஆக்கிக் கொண்டிருப்பதாக சிலர் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

விழாவில் தமிழிசை

இந்த நாட்டை எப்படி மேம்படுத்த வேண்டும் என்று நினைக்கிறாரோ அப்படி மேம்படுத்துவார் பிரதமர் மோடி. அதற்காகத்தான் பல விமர்சனங்களை அவர் தாங்கிக் கொள்கிறார். எத்தனை விமர்சனங்கள் வந்தாலும், பிரதமர் ஒரு முடிவு எடுத்தால் அது மக்களுக்கானதாகத்தான் இருக்கும். அதேபோல பல ஆண்டுகளாக அவரிடம் பாடம் கற்ற நாங்கள் எடுக்கும் முடிவுகளும் மக்களுக்கானதாகத்தான் இருக்கும். அத்தகைய பாடத்தைத்தான் நாங்கள் அவரிடம் கற்று இருக்கிறோம். அம்பேத்கரையும், மோடியையும் இணைத்து எழுதப்பட்ட ’அம்பேத்கர்-மோடி’ என்ற புத்தகத்திற்கு இளையராஜா முகவுரை எழுதியிருக்கிறார்.

அதனால் அவர் சந்தித்த விமர்சனங்கள் அதிகம். விமர்சனம் செய்பவர்கள் அனைவரும் முதலில் இந்த புத்தகத்தை படியுங்கள். படித்துவிட்டு விமர்சனம் செய்யுங்கள். இதுவரை இப்படி சாதனை செய்த பிரதமர் இருக்க முடியாது என்பதை ஒப்புக் கொள்ளுங்கள். ஒருவேளை ஒப்புக்கொள்ள முடியவில்லை என்றால், விமர்சனம் செய்யும் போது நாகரிகமாக விமர்சனம் செய்யுங்கள். இணையத்தில் எங்களை அநாகரிகமாக விமர்சனம் செய்தால், எதற்காக நாம் இப்படி நடந்துகொண்டோம் என்று நீங்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு நடவடிக்கை இருக்கும்.

நீங்கள் விமர்சிக்கும் அளவுக்கு நாங்கள் இல்லை. இந்த மேடையில் இருக்கும் அனைவரும் தகுதியின் அடிப்படையில்தான் பதவிகளையும், பொறுப்புகளையும் வகித்துக் கொண்டிருக்கிறோம். மக்கள் நலனுக்காகத்தான் அனைவரும் இருக்கிறார்கள். மத்திய அரசு எவ்வளவு நல்லது செய்து கொண்டிருக்கிறது என்று இந்த புத்தகங்களை படித்து புரிந்துகொள்ளுங்கள். விமர்சனம் செய்பவர்களிடம் புத்தகங்களை கொண்டு சேருங்கள். நாமெல்லாம் பாரதப் பிரதமருக்கு கடமைப்பட்டிருக்கிறோம். கொரோனா  பெருந்தொற்று என்பது சாதாரண விஷயம் அல்ல. பெருந்தொற்றின்போது மார்ச் 22-ம் தேதி பொது முடக்கத்தை அறிவித்தார். விமர்சனம் செய்தார்கள். மீண்டும் மார்ச் 25-ம் தேதி பொது முடக்கத்தை ஏற்படுத்தினார். அனைவரும் விமர்சனம் செய்தார்கள். ஆனால் பெருந்தொற்றின் அபாயத்தை உணர்ந்து முதன்முதலில் பொது முடக்கத்தை அறிவித்ததால்தான் இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களும் உயிர் பிழைத்தார்கள் என்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி முடிவை வெளியிட்டது.

புதுச்சேரியில் கொரோனா இரண்டாவது அலையில் 70 நாள்கள் ஆளுநர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. திடீரென்று இரவு 11:30 மணிக்கு பிரதமர் என்னை தொடர்பு கொள்வார். புதுச்சேரியில் எல்லாம் பத்திரமாக இருக்கிறார்களா ? எவ்வளவு வென்டிலேட்டர்கள் வேண்டும் ? எவ்வளவு ஆக்சிஜன் வேண்டும் ? என்று கேட்பார். நாம் சொல்வதற்கு முன்பாகவே புதுச்சேரிக்கு இவ்வளவு வென்டிலேட்டர், ஆக்சிஜன் வேண்டும் என்று அவரே சொல்லிவிடுவார். அந்த அளவிற்கு அந்தந்த மாநிலத்தையும் அவர் மேலே இருந்து அக்கறையுடன் பார்த்துக் கொண்டார். அதனால் தான் (PM & PM – Prime Minister & Pandemic Management) பாரதப் பிரதமரும், பெருந்தொற்று நிர்வாகமும் என்று புத்தகம் எழுதினேன். 

ஒவ்வொரு நாளும் அங்கிருந்து நாம் பெற்ற தகவல்கள் மிகப்பெரிய சவாலாக இருந்த சூழ்நிலையை எதிர்கொள்ள உதவியது. நம் பாரதப் பிரதமர் வெளிநாடு சென்ற போது அங்குள்ள மாணவர்கள் அவரிடம், ’நீங்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கிறீர்களே என்ன சாப்பிடுகிறீர்கள்’ என்று கேட்டார்கள். அதற்கு ‘நாங்கள் விமர்சனங்களை சாப்பிடுகிறேன்’ என்று பதிலளித்தார் பிரதமர். உங்களுடைய புனித நூல் எது என்று கேட்டால் அம்பேத்கர் உருவாக்கி கொடுத்த இந்திய அரசியலமைப்புச் சட்டம்தான் என்று கூறியவர் பிரதமர் மோடி. அதுதான் அம்பேத்கருக்கும் மோடிக்கும் உள்ள தொடர்பு. அதனால் வேறு எவரும் அதை சான்றளிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.