விறுவிறுப்பான கடைசி கட்டத்தை எட்டிய இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியில் வெற்றியை ருசித்துள்ளது இங்கிலாந்து அணி.

இங்கிலாந்து அணி பாகிஸ்தானிற்கு சென்றதலிருந்து, முதல் டெஸ்ட் போட்டி தொடங்கி கடந்த 5 நாட்களாக எல்லோருடைய பேசுபொருளாகவும் மாறியது, பாகிஸ்தானின் ராவல் பிண்டி மைதானம். இதுவெல்லாம் டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளமா என்பதில் தொடங்கி, என்ன டெஸ்ட் போட்டி பா இது என்ற முடிவில் அனைத்து டெஸ்ட் போட்டி ரசிர்களையும் நாற்காலியின் நுனியில் அமரவைத்து வேடிக்கை காட்டியது ராவல் பிண்டி மைதானம்.

பாகிஸ்தானுக்கு ஆட்டம் காட்டிய இங்கிலாந்து!

இங்கிலாந்து அணியின் வீரர்களுக்கு வைரஸ் அட்டாக் ஏற்பட்டதில் தொடங்கி, போட்டி நடைபெறுமா நடைபெறாதா என்ற குழப்பத்தில் நகர்ந்து, பின்னர் எந்தவித இடையூறும் இன்றி கடந்த டிசம்பர் 1ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது.

image

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்ய, முதல் நாள் பேட்டிங்கிலேயே பல சாதனைகளை நிகழ்த்தி காட்டியது இங்கிலாந்து அணி. விக்கெட்டையே விட்டுக்கொடுக்காத இங்கிலாந்து ஓபனர்கள் கிராலி, டக்கெட் இருவரும் அதிரடியாக விளையாடி சதமடித்து அசத்த, அடுத்தடுத்து வந்த ஒல்லி போப் மற்றும் ஹரி ப்ரூக் இருவரும் அடுத்தடுத்து சதமடிக்க ஒரே நாளிலேயே 4 பேட்டர்கள் சதங்களை விளாசி சாதனை படைத்தனர். இறுதி நேரத்தில் பென் ஸ்டோக்ஸ் டி20 நாக் விளையாட முதல் நாள் முடிவில் 506 ரன்களை குவித்து, எந்த அணியும் இதுவரை நிகழ்த்தாத புதிய சாதனையை நிகழ்த்தி காட்டியது இங்கிலாந்து அணி. பின்னர் முதல் இன்னிங்ஸ் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 657 ரன்கள் சேர்த்தது இங்கிலாந்து.

வாங்கியதை திருப்பி கொடுத்த பாகிஸ்தான்!

Michael Vaughan Calls Babar Azam

இங்கிலாந்து அணி தான் சிறப்பாக விளையாடியது, பாகிஸ்தான் சிறப்பாக பந்துவீசவில்லை என்பதை உடைத்தது பாகிஸ்தான் அணி. தங்களது முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணியின் ஓபனர்கள் அப்துல்லா மற்றும் இமாம் உல் ஹக் இருவரும் அனுபவம் வாய்ந்த பவுலர்களான ஆண்டர்சன், ராபின்சன், பென் ஸ்டோக்ஸ் என அனைத்து இங்கிலாந்து பந்துவீச்சாளர்களது பந்துவீச்சையும் பவுண்டரிகளாக பறக்க விட, விக்கெட்டையே கைப்பற்ற முடியாமல் திணறினர். ஒபனர்கள் இருவரும் சதமடித்து அசத்த, அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாமும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தன் பங்கிற்கு சதமடித்து அசத்த முதல் இன்னிங்ஸ் முடிவில் பாகிஸ்தான் அணி 579 ரன்கள் சேர்த்தது.

ஆடுகளத்தையும் பாகிஸ்தான் வாரியத்தையும் கேள்வி எழுப்பிய முன்னாள் வீரர்கள்!

இரண்டு அணிகளின் முதல் இன்னிங்க்சையும் பார்த்த பிறகு ராவல்பிண்டி மைதானத்தின் தன்மை குறித்து குற்றச்சாட்டுகளை எழுப்பினர் கிரிக்கெட்டின் முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள்.

ஆடுகளம் குறித்து பேசியிருந்த இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், “இது டெஸ்ட் போட்டிக்கான பிட்சா என்று அதிர்ச்சியடைவதாக” தெரிவித்திருந்தார்.

image

பாகிஸ்தானின் நிர்வாகத்தை சாடிய பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி, “ஒரு நல்ல டெஸ்ட் போட்டிக்கான பிட்சை தயார் செய்ய ஒளி ஆண்டுகள் தேவைப்படும் பாகிஸ்தானின் கிரிக்கெட் போர்டுக்கு” என்று குற்றம் சாட்டினார். மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்சிப்பை வெற்றிபெற வேண்டும் என்றால் எங்களது பந்துவீச்சாளர்களை சிறந்த ஆடுகளத்தில் விளையாட வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

ரிஸ்க் எடுத்து போட்டியில் வாழ்வா-சாவா சுவாரசியத்தை கூட்டிய இங்கிலாந்து!

இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 4ஆவது நாள் ஆட்டத்தின் இரண்டாவது செஸ்ஸனில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 267 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆச்சரியமளிக்கும் வகையில் டிக்ளேரை அறிவித்தார் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ்.

image

343 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி, கேப்டன் பாபர் அசாமின் விக்கெட்டை இழந்தாலும் 4ஆவது நாள் ஆட்டத்தின் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 80 ரன்களை சேர்த்து இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சியளித்தது.

வெற்றி யாருக்கு என்ற 5ஆவது நாள் ஆட்டம்!

கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான் அணியின் பேட்டர்கள் இமாம் உல் ஹக், சயத் சகீல், விக்கெட்கீப்பர் முகமது ரிஸ்வான் மூன்றுபேரின் சிறப்பான ஆட்டத்தால் 200 ரன்களை விரைவாகவே சேர்த்தது. 259-5 விக்கெட் என்ற ஸ்டிராங்கான நிலையில் இருந்தது பாகிஸ்தான் அணி.

கடைசி நேரத்தில் இங்கிலாந்துக்கு கைக்கொடுத்த ஆடுகளம்!

image

பந்துவீச்சாளர்களுக்கு எந்த உதவியும் கிடைக்காமல் இருந்த ஆடுகளத்தில், ஒருவழியாக 5ஆவது நாள் ஆட்டத்தில் தொடர்ச்சியாக ரிவர்ஸ் ஸ்விங் கிடைத்தது. அதை பயன்படுத்தி கொண்ட இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் போட்டியில் அழுத்தத்தை அதிகமாக்க, ஒருவழியாக இங்கிலாந்தின் ராபின்சன், சிறப்பாக விளையாடி பெரிய பார்ட்னர்ஸிப் போட்ட அசார் அலி, அகா சல்மான் இருவரது விக்கெட்டையும் அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்த 260 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான் அணி. 

பீல்டிங் பொசிசானால் மிரட்டிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ்!

image

அடுத்து களமிறங்கிய வீரர்களை விரைவாகவே வெளியேற்ற நினைத்த இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஸ்லிப், லெக் ஸ்லிப், 2 ஷார்ட் லெக்ஸ், ஷார்ட் மிட்விக்கெட் என பேட்டிங்க் செய்த வீரரை சுற்றி அட்டாக்கிங் பீல்செட்டை நிறுத்தினார். பவுன்சர், ரிவர்ஸ் ஸ்விங் என கிடைத்த இங்கிலாந்து அணிக்கு மைதானத்தில் இருளும் சூழ சுற்றி இருந்த இரண்டு அணி ரசிகர்களுக்கும் மட்டுமில்லாமல், போட்டியை பார்த்த அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் சுவாரசியத்தை ஏற்படுத்தியது.

ஒரே ஒவரில் 2 விக்கெட் எடுத்த ஆண்டர்சன்!

image

போட்டியின் இறுதியில் அனைத்தும் இங்கிலாந்து அணிக்கு சாதகமாக முடிய ஒரு அபாரமான கேட்சை எடுத்த இங்கிலாந்தின் கீப்பர் ஒல்லிபோப், இங்கிலாந்து அணிக்கு உயிர்ப்பை பலப்படுத்தி கொடுத்தார். பின்னர் ஆண்டர்சன் இன்னொரு விக்கெட்டையும் தூக்க ஒரே ஒவரில் 2 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 264க்கு 9 விக்கெட்டுகளை இழந்தது.

கடைசி 1 விக்கெட்டுக்கு ஆட்டம் காட்டிய பாகிஸ்தான்!

image

விரைவாகவே மீதி ஒருவிக்கெட்டையும் இங்கிலாந்து வீழ்த்திவிடும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், 8 ஓவர்கள் வரை ஆட்டம் காட்டினர் பாகீஸ்தான் அணியின் டெய்ல் எண்டர்ஸ். இந்நிலையில் புதிய பந்தை எடுக்காத இங்கிலாந்து அணி, வீசப்பட்டுக்கொண்டிருந்த ஓவருக்கு நடுவிலேயே புதியபந்தை மாற்றினார் கேப்டன் பென்ஸ்டோக்ஸ். பின்னர் அடுத்த ஓவரை வீசிய ஜேக் லீச் நசீம் ஷா விக்கெட்டை வீழ்த்தி இந்த விறுவிறுப்பான போட்டியை முடிவுக்கு கொண்டுவந்தார்.

இறுதியில் 74 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வெற்றிபெற்றது இங்கிலாந்து அணி. கடைசி 9 ரன்களில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.

image

ஓவருக்கிடையே பந்தை மாற்றியது ரசிகர்கள் இடையே சலசலப்பை ஏற்படுதியது. அப்படி எடுக்கமுடியுமா என்ற கேள்வியை சமூக வலைதளங்களில் எழுப்ப ஆரம்பித்தனர். இந்நிலையில் 80 ஓவர்களுக்கு மேல் புதிய பந்தை எப்போது வேண்டுமானாலும் மாற்றிகொள்ள முடியும் என்று சொல்லப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.