டிஜிட்டல் ரூபாய் என்றால் என்ன? எங்கே எல்லாம் இதை பயன்படுத்தலாம்? யாரெல்லாம் பயன்படுத்தலாம்? என்பது குறித்து இங்கே பார்க்கலாம்..

கடந்த பிப்ரவரியில் நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தபோது, விரைவில் இந்தியாவில் டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். அதன்படி கடந்த நவம்பர் 1 அன்று இந்திய ரிசர்வ் வங்கி நாடு முழுவதும் சோதனை முறையில் டிஜிட்டல் நாணயங்களை மொத்த விற்பனையில் அறிமுகப்படுத்தியது. அந்த சோதனை வெற்றிகரமாக முடிந்த நிலையில், கடந்த டிசம்பர் 1ஆம் தேதி சில்லறை வர்த்தகத்திலும் இது அறிமுகமாகி உள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி ஆகிய 8 வங்கிகள் மூலம் டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்படுகிறது. முதற்கட்டமாக இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுடன் மும்பை, டெல்லி, பெங்களூரு மற்றும் புவனேஸ்வர் ஆகிய 4 நகரங்களில் மட்டும் இந்த சோதனை தொடங்கப்பட்டுள்ளது. இது மெல்ல நாடு முழுக்க வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த டிஜிட்டல் ரூபாய் என்றால் என்ன?  எங்கே எல்லாம் இதை பயன்படுத்தலாம்? யாரெல்லாம் பயன்படுத்தலாம்? என்ற சந்தேகமும் பலருக்கும் உள்ளது.

image

டிஜிட்டல் ரூபாய் என்றால் என்ன?

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பணம் காகிதம் வடிவிலும், நாணயம் உலோக வடிவிலும் உளளது. இதே போல Digital Code மூலம் உருவாக்கப்படுவதுதான் டிஜிட்டல் நாணயம் அல்லது டிஜிட்டல் ரூபாய்.  இது ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளின் டிஜிட்டல் வடிவம் ஆகும். ஆன்லைன் பரிவர்த்தனைகளில் இதைப் பயன்படுத்தலாம். காகித பணத்திற்குச் சமமாக இந்த டிஜிட்டல் பணமும் மதிக்கப்படுகிறது. இதை கிரிப்டோகரன்சி என்று தவறாக பலரும் நினைக்கிறார்கள். இதற்கும் கிரிப்டோ கரன்சிக்கும் சம்பந்தம் இல்லை.

எப்படி வாங்குவது?

டிஜிட்டல் நாணயம் என்பது விலை கொடுத்து வாங்கக்கூடியது அல்ல. எப்படி நம் கையில் இருக்கும் ரூபாய் நோட்டை விலை கொடுத்து வாங்க முடியாதோ அதே போன்று டிஜிட்டல் ரூபாயையும் வாங்க முடியாது. ஒரு பொருளையோ, சேவையையோ காகித ரூபாய் கொடுத்து பெறுவதை போன்று டிஜிட்டல் ரூபாயை செலுத்தி பொருள், சேவையை பெற முடியும். இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் நாணயங்களை வாங்க முடியும்.  

டிஜிட்டல் ரூபாய் பரிமாற்றத்தை எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, யெஸ் பேங்க் மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் ஆகியவற்றால் மட்டுமே தற்போது செயல்படுத்த முடியும். அடுத்த கட்டமாக ஹெச்டிஎஃப்சி, கோடக் மகேந்திரா வங்கி, பேங்க் ஆப் பரோடா மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய நான்கு வங்கிகள் பங்கேற்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை டிஜிட்டல் ரூபாய் வேலட்-க்கு மாற்றுவதன் மூலம் நீங்கள் டிஜிட்டல் ரூபாயை பெற முடியும். இந்த வங்கிகள் தங்களுடைய மொபைல் செயலிகள் மூலம், இ-வேலட் முறையில் வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் ரூபாயை சேமித்து பரிவர்த்தனை செய்வதற்கான கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளன. தற்போது, 50,000 ரூபாய்க்கு அதிகமான பணப் பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் தங்கள் பான் (நிரந்தர கணக்கு எண்) எண்ணை வெளியிட வேண்டும். டிஜிட்டல் ரூபாய் பரிவர்த்தனைகளுக்கு வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

image

டிஜிட்டல் ரூபாயை பிறருக்கு அனுப்ப முடியுமா?

டிஜிட்டல் ரூபாய் என்பது டிஜிட்டல் வடிவில் உள்ள உங்கள் பணமே தவிர வேறு ஒன்றும் இல்லை. எனவே டிஜிட்டல் ரூபாயை நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் எளிதாக அனுப்பலாம். தற்போது அறிமுகம் செய்யப்பட்டு உள்ள டிஜிட்டல் ரூபாயை மொபைல் போன் மூலமாக அனுப்பிக் கொள்ளலாம். ஒரு நபர் மற்றொரு நபருக்கும், ஒரு நபர் வியாபாரிக்கும் இந்த டிஜிட்டல் பணத்தை அனுப்ப முடியும். ஒரு வாடிக்கையாளரின் இ-வாலட்டிலிருந்து  இன்னொரு வாடிக்கையாளரின் இ-வாலட்டுக்கு டிஜிட்டல் ரூபாயை பரிவர்த்தனை செய்ய முடியும். இதுபோல் டிஜிட்டல் ரூபாயை பயன்படுத்துவதற்கு இணையதள இணைப்பு தேவை இல்லை.

image

ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய டிஜிட்டல் ரூபாயைப் பயன்படுத்தலாமா?

ரூபாய் கரன்சி நோட்டுகளை போலவே 500 ரூபாய், 200 ரூபாய், 100 ரூபாய், 50 ரூபாய், 20 ரூபாய், 10  ரூபாய் என பல்வேறு மதிப்புகளை கொண்ட டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி வெளியிட்டு, தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள வங்கிகளுக்கு அளித்துள்ளது. ஆன்லைன் ஷாப்பிங், கடைகளில் ஷாப்பிங் செய்யும்போது பணத்திற்கு பதிலாக டிஜிட்டல் ரூபாயை செலுத்திக் கொள்ள முடியும்.

டிஜிட்டல் ரூபாய் மூலம்  பண பரிவர்த்தனைக்கான செலவுகள் குறையும் என கருதப்படுகிறது. அத்துடன் வங்கிகளுக்கு டிமாண்ட் டிராப்ட் மற்றும் எலக்ட்ரானிக் ட்ரான்ஸ்பர் போன்ற  பணப்பரிவர்த்தனைக்காக  அளிக்கப்படும் கட்டணங்களும் குறையும் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

தவற விடாதீர்: கணவன், மனைவிக்குள் நடக்கும் குஸ்தி, நடிப்பில் மிரட்டிய லெஷ்மி -‘கட்டா குஸ்தி’ திரைப்பார்வை

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.