இந்தோனேசியாவில் சமீபத்தில் நடந்த ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் கலந்து கொண்டனர். ஜி-20 அமைப்பின் விதிமுறைகளின்படி, இந்த முறை ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கிறது. இதற்கான மாநாடு அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதன்படி, இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்காக பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் டிச.5-ம் தேதி(இன்று) டெல்லியில் நடைபெறுகிறது. முன்னதாக, இந்த அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து மாநிலங்களின் முதல்வர்களுக்கும், முக்கிய கட்சித் தலைவர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்தது.

இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ – இந்தியப் பிரதமர் மோடி

அதன்படி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில்தான், எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு, அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அனுப்பிய கடிதத்தில், “அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி” என்று குறிப்பிட்டுள்ளது.

அதாவது, ஜூலை 11-ல் நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட எடப்பாடியின் பதவியை, டெல்லி தலைமை இதுவரை ஏற்றுக் கொள்ளாமல் தான் இருந்தது. அதேபோல, பொதுக்குழு முடிந்து நான்கு மாதங்களில் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தாததால் அவரின் பதவி காலாவதியாகிவிட்டது என்று பன்னீர் தரப்பு கூறிவருகின்றனர். இந்நிலையில், இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு மத்திய அரசு கடிதம் எழுதியிருப்பது தமிழ்நாடு அரசியலில் புதிய ட்விஸ்ட்-ஆக கவனிக்கப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி& நிர்வாகிகள் கைது

இதுகுறித்து எடப்பாடிக்கு நெருக்கமான சில சீனியர் அமைப்பு செயலாளர்களிடம் பேசினோம்.

“எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க-வை ஏற்றுக் கொள்வதில் கூட்டணி கட்சியான பா.ஜ.க-விலேயே மாறுப்பட்ட கருத்து இருக்கிறது. சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி விவகாரம் தொடர்பாக, அக்டோபர் 19-ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தை நடத்தியபோது, எடப்பாடி உள்ளிட்ட சீனியர்களை கைது செய்தது தி.மு.க அரசு. அப்போது எடப்பாடியை நேரில் சந்தித்து கூட்டணி கட்சியினரான ‘புதிய தமிழகம்’ கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி. ‘தமிழ் மாநில காங்கிரஸ்’ கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், ‘தமிழக மக்கள் முன்னேற்றக் கழக’த் தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். ஆனால், தமிழக பா.ஜ.க தலைவர் சென்னையில் இருந்தும் நேரில் வந்தோ, போனில் தொடர்பு கொண்டோ ஆதரவு தெரிவிக்கவில்லை.

அதேபோல, கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க-வின் பலத்தை தி.மு.க-வினாலே ஒன்றும் செய்ய முடியவில்லை. நிலைமை இப்படி இருக்க, கொங்கில் அ.தி.மு.க-வை செயலிழக்க வைத்து, தன்னை முன்னிலைப்படுத்த தமிழக பா.ஜ.க தலைமையும் முயல்கிறது. அதற்காக வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து தமிழக பா.ஜ.க புள்ளிகள் டெல்லிக்கு சில தவறான தகவல்களை கொடுத்துள்ளனர். அதாவது ‘எடப்பாடிக்கு செல்வாக்கு இருந்திருந்தால் 2019 நாடாளுமன்றத் தேர்தலிலேயே நமக்கு வெற்றியை கிடைத்திருக்கும். அவருக்கென்று தனி செல்வாக்கு இல்லை.

மோடி – அமித்ஷா

எனவே, உட்கட்சி பிரச்னையை மையமாக வைத்து இரட்டை இலைச் சின்னத்தை முடக்கி, அவரை 10 சதவிகித வாக்குகளுக்குள் சுருங்கிவிடலாம். தே.மு.தி.க., த.மா.கா., பா.ம.க., அ.ம.மு.க., பன்னீர் அணி, இதர கட்சிகளை இணைத்து கூட்டணி அமைத்து தேர்தலை நாம் சந்திக்கலாம்’ என்பதுதான் அவர்கள் கணக்கு. இதுபோன்ற பல தவறான கருத்தை மேலிடத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எங்களிடம் எந்த விளக்கமும் கேட்கப்படவில்லை. இதை உண்மை என்று கருதியதாலோ என்னவோ, பிரதமர் மோடியையும், அமித் ஷாவையும் சந்தித்து பேச எடப்பாடி முயன்றபோதெல்லாம், அவர்கள் அதற்கு செவிகொடுக்கவில்லை.

இந்நிலையில்தான், அ.தி.மு.க-வின் உள்கட்டமைப்பு குறித்து பிரகடனம் செய்யும் விதமாக, நாமக்கல்லில் கடந்த மாதம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சுமார் ஒரு லட்சம் தொண்டர்கள் மத்தியில் ‘அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி’ என எடப்பாடி சூளுரைத்தார். எடப்பாடியின் இந்த சிக்னலை புரிந்து கொண்ட மேலிடம் எங்கள் தரப்பிடம் நேரடியாகவே பேசியது. `எங்களை பொறுத்தவரை 2026-ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல்தான் இலக்காக இருக்கிறது. உங்களுக்கு தான் நாடாளுமன்றத் தேர்தல் மிக முக்கியம்.

எடப்பாடி பழனிசாமி

இந்நேரத்தில், தவறான வழிகாட்டுதலால், இரட்டை இலைச் சின்னத்தை முடக்கி அ.தி.மு.க-வின் பலவீனப்படுத்த முயன்றால், அதனால் உங்களுக்குதான் பெரும் பாதிப்பு’ என்று கூறி, தேர்தல் புள்ளிவிவரங்களையும், ஓ.பி.எஸ்-ஸின் செல்வாக்கு குறித்த டேட்டாக்களையும் டெல்லிக்கு கொடுத்தோம். இந்நிலையில்தான் டெல்லி தலைமை இறங்கி வந்து, எடப்பாடிதான் இடைக்கால பொதுச்செயலாளர் என்று அங்கீகரித்திருக்கிறது.” என்றனர் விரிவாக…

எடப்பாடிக்கு சாதகமாக டெல்லியின் இந்த நகர்வு ஓ.பி.எஸ் மட்டுமல்லாது தமிழக பா.ஜ.க-வுக்கு பெரும் அதிர்ச்சியாகவே அமைந்துள்ளது என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தினர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.