கட்சி நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வத்திராயிருப்பு வந்திருந்தார். அப்போது அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்களில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டு வந்திருக்கிறது. அதுகுறித்து விளக்கம் தேவை என்ற பெயரால் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் காலம்தாழ்த்திக் கொண்டிருப்பது கண்டனத்திற்குரியது. அதேப்போல பிரதமர், குடியரசுத் தலைவர் ஓர் இடத்திற்கு செல்கிறார்கள்‌ என்றால் அந்த இடத்தை ஒரு வாரத்திற்கு முன்பாகவே உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் தங்களின் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவார்கள்.

கம்யூனிஸ்ட் முத்தரசன்

பிரதமர், குடியரசுத் தலைவர் என‌ யார் வந்தாலும் அவர்களுக்கான முழுப்பாதுகாப்பு பணியையும் மேற்கொள்வது உள்துறை அமைச்சகம்தான். எனவே, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகையின்போது பாதுகாப்பு குறைபாடு இருந்தது என தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை புகார் அளித்திருப்பது நியாயமாகாது. பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையும், ஆளுநர் ஆர்.என்.ரவியும் காவல்துறை அதிகாரிகளாக இருந்தவர்கள். அவர்களுக்கு பிரதமரின் பாதுகாப்பு நடைமுறைகள் என்னவென்பது நன்றாகத் தெரியும். ஆகவே, பாதுகாப்பு குறைபாடு தொடர்பான புகாரை அவர், அமித் ஷாவிடம் தான் தந்திருக்க வேண்டும்.

ஆனால் அதற்கு நேர்மாறாக தமிழக தலைமைச் செயலாளரிடம், ஆளுநர் விளக்கம் கேட்பது விந்தையாக இருக்கிறது. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றும் எந்த சட்ட மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் தருவதில்லை. அரசுடன் இணக்கமாக செயல்படுவதில்லை. ஆளுநர் ரவி, தமிழ்நாடு அரசாங்கத்திற்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்தி கொண்டிருக்கிறார். எனவே தமிழக ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழக எம்.பி.க்கள் குடியரசுத்தலைவரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதற்கும் பதிலில்லை. எனவே, ஆளுநர் ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி டிச.29-ம் தேதி ராஜ்பவன் முன்பு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்த இருக்கிறோம்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.