கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், அன்னூர் சுற்று வட்டார கிராமங்களில் தொழில் பூங்கா (சிட்கோ) அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘நமது நிலம் நமதே’ என்ற முழக்கத்துடன் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அன்னூரில் இருந்து கோவை புலியகுளம் வரை விவசாயிகள் நடைப்பயணத்தில் ஈடுபட்டனர்.

அதிகாலை பயணத்தைத் தொடங்கிய விவசாயிகள், 12 மணி நேர நடைப்பயணத்துக்கு பிறகு மாலை கோவை புலியகுளம் பகுதிக்கு வந்தனர். இதையடுத்து அங்குள்ள விநாயகர் கோயிலில் மனு அளித்து தங்களது பிரச்னையை முறையிட்டனர்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த விவசாயிகள், “நாங்கள் ஒன்றரை ஆண்டாக மனு கொடுத்து கொண்டிருக்கிறோம். இது விளையாட்டு அல்ல. எங்கள் வாழ்க்கை பிரச்னை. அன்னூரில் இருந்து பொழுதுபோகாமல் 35 கி.மீ நடக்கவில்லை. சட்டத்துக்குட்பட்டு போராடி வருகிறோம்.


இதை திசை திருப்புவது அரசாங்கத்தின் கையில்தான் உள்ளது. இந்தத் திட்டத்தை அரசாங்கம் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் விளைவுகள் மோசமாக இருக்கும். யாரோ சாப்பிடுவதற்காக விவசாயிகள் எங்கள் நிலத்தை விட்டுக் கொடுக்க முடியாது.
எட்டு வழிச்சாலை திட்டத்துக்காக விவசாய நிலத்தை எடுக்க அனுமதிக்க மாட்டோம் என முழங்கிய முதல்வர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார். யார் மீதும் நம்பிக்கை இல்லாமல் தான் சாமியிடம் முறையிட்டுள்ளோம். விவசாயிகள் உறுதியாக இருக்கிறோம். ஒருபிடி மண்ணைக் கூட இங்கிருந்து எடுக்க முடியாது.

எங்கள் உயிரை எடுத்தால் தான் நிலத்தை எடுக்க முடியும். எங்கள் பொறுமையை அரசாங்கம் சோதிக்க வேண்டாம். விவசாயிகளுக்கு விருப்பம் இல்லாத எந்தத் திட்டத்தை செய்ய மாட்டோம் என்றார் முதல்வர். இந்தத் திட்டத்தில் இங்கிருக்கும் எந்த விவசாயிக்கும் விருப்பம் இல்லை” என்றார்.