பூவெல்லாம் கேட்டுப்பார்.. பூ வளர்ப்பு பெண்களுக்கான பிரத்யேக தொழில் துறை. காந்தமாக இழுக்கும் மணமும், பூத்த அழகும் பார்த்தோரைக் கட்டிப்போடும் ஈர்ப்பும், பூக்களுக்கு மட்டுமே. அதிலேயும் நம் மதுரை மல்லிக்கு நிகரில்லாத ஒரு ஈர்ப்பும், வாசமும், கொள்ளை கொள்ளும் தோற்றமும் உள்ளது. அதனால்தானோ கண்ணதாசன் தொடங்கி, வைரமுத்து வரை பூக்களின் ஈர்ப்பைத் திகட்டாமல் வர்ணித்து வர்ணித்து, ஆயிரக்கணக்கான பாடலை எழுதியிருக்கிறார்கள்.

பூக்கள் வளர்ப்பு

உங்களுக்குத் தெரியுமா? Chanel-5 என்ற உலகப் புகழ் பெற்ற சென்ட் (French perfume) பற்றிய ஒரு கலக்கலான செய்தி… உலகளவில், ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் இந்த பிராண்ட் சென்ட் பாட்டில் விற்பனை ஆகிறது. இந்த ஈடில்லா வாசனைத் திரவியத்தை வாங்க பெண்மணிகள் ஏங்குகிறார்கள். டியூட்டிஃ ப்ரீ கடையில்கூட 50 யூரோவிற்கு விற்கப்படுகிறது இந்த சென்ட். (அம்மாடியோவ்!)

இந்த chanel-5 சென்ட்டில் அப்படி என்ன விசேஷம்..? ஒரு பெண் இந்த சென்ட் போட்டு உங்களைக் கடந்துபோனால், அதன் மல்லிகைப்பூ வாசம் நீண்ட நேரம் அங்கு மிதக்கும். அந்த வாசனைத் திரவியத்துக்கான அடிப்படையான மணம், கிலோ கணக்கில் மல்லிகைப் பூக்களை ரசாயன ரீதியாக டிஸ்டல் செய்தபின் உருவாகிறது…

சொல்ல மறந்து விட்டேனே… இந்த 100 வருட பாரம்பரியம் தாண்டிய, புகழின் உச்சியில் இருக்கும் பிரெஞ்சு கம்பெனிக்கு, இப்போதைய எம்.டி யார் தெரியுமா? லீனா நாயர். இந்திய வம்சாவளி பெண், நம்மூர் XLRI வணிகக் கல்லூரியில் பிசினஸ் பட்டம் பெற்றவர்.

அது சரி, பூக்களைப் பற்றியும் பிரத்யேகமாய் மல்லிகைப் பூ பற்றியும் ஏன் இவ்வளவு எடுத்துச் சொல்கிறேன் தெரியுமா?

பூ விற்பனை

தமிழ்நாடு இன்றைக்கு, பூக்கள் சாகுபடி, வாசனை மிகுந்த எண்ணெய்கள் மற்றும் மூலிகை மருந்து செடிகள் வளர்ப்பில் உச்சத்தில் உள்ளது. இந்த பூக்கள் சாகுபடி (Floriculture) வர்த்தகச் சந்தையின் மதிப்பு என்ன தெரியுமா? 2021-ஆம் ஆண்டு கணக்கு மதிப்பு, இந்திய ரூபாயில் 207 பில்லியன்; இது 2027-ஆம் ஆண்டு இந்திய ரூபாயில் 426 பில்லியன் டாலராக உயரப் போகிறது.

தற்போது 526 மெட்ரிக் டன் பூக்கள் சாகுபடி ஆகிறது. இதில் நம்ம மதுரை மல்லிக்கு உலக மேடையில் GI tag கிடைத்துவிட்டது. யாராவது மதுரை மல்லியை லேசில் டூப்ளிகேட் செய்து லாபம் பார்க்கலாம் என்ற குறுக்கு வழியைக் கண்டுபிடித்தால் மாட்டுவார்கள்.

GI tag என்ற குறியீடு பெற்ற எந்த பொருளும் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றது எனப் பொருள். உங்களுக்குத் தணியாத ஆர்வமும், குறையாத தெம்பும் சலிக்காத உழைப்பும் இருந்தால், எந்த பெண்ணும், இல்லத்து அரசியும், பூக்கள் வளர்த்து, அதற்கு ஏற்ற வணிக வர்த்தக முறைகளில் தேர்ச்சி பெற்று, முழு நேர தொழிலதிபராகவோ அல்லது பார்ட்டைம் பிசினஸ் விமனாகவோ, அபரிமித வளர்ச்சி அடையலாம். பூ சாகுபடி, பூ வணிகம், மதிப்பு கூட்டுதல் போன்றவை பெண்களுக்கென்று அமைந்த ஒரு கரியர். பூவே உனக்காக என்பது பெண்களுக்கு 100% பொருந்தும்.

ஆனால் நம் தமிழ்நாட்டில் இவ்வளவு கல்வி முன்னேற்றம் இருந்தும், floriculture-க்கேற்ப வழிநடத்தல், பயிற்சி, அடிப்படை திறன் வளர்ப்பு போன்ற ஊன்றுகோல்கள் மிகவும் குறைவு.

அதனால் என்ன? ஆர்வமும், வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்ற தாகமும் இருந்தால், எந்த முயற்சியும் ஜெயிக்கும். இதற்கு Floriculture Research station, TN Agriculture Research University, தோவளை என்ற மையத்தை அணுகவும். இந்த தோவளை எங்கே இருக்கு என்பதைக் கூகுளில் தேடுங்கள்.

பூக்கடை

முதலில் உங்கள் டார்கெட் மார்க்கெட்டை நிர்ணயுங்கள். ஆரம்பம் சிறியதாக இருக்கட்டும். தமிழ் கலாச்சாரத்தில் பூக்களின்றி எந்தவொரு சடங்கும், மங்கள நாளும், பண்டிகையும் நடக்காது. தினமும் தன்னை அழகுபடுத்திக்கொள்ள, ஒரு முழம் பூவைத் தேடாத பெண்ணும் உண்டோ…? லோக்கல் டிமாண்டுக்கு உங்கள் வட்டாரத்தில் உள்ள கோவிலில் பூ விற்பவர்களை அணுக வேண்டும். வேண்டிய தேவையைக் கேட்டுத் தெரிந்து, ஸ்பாட் டெலிவரி செய்யலாம். சாமந்தி, மல்லி, மரிக்கொழுந்து, ரோஜா, கனகாம்பரம், பாரிஜாதம், தாமரை, சூரியகாந்தி, செம்பருத்தி, அரளி, குட்டி மகிழம்பூ… இந்த நீண்ட பட்டியலில் உங்களால் சாகுபடி செய்து, அதை விற்பனைக்குத் தயார் செய்து, உங்க பிசினஸ் பிளான்/ மாடல், இவற்றை விரிவாக வகுத்து, வங்கியில் கடன் கேட்டு, சர்வே செய்து பாருங்கள்.

பெரிதாக் இடம் இருந்தால்தான், Floriculture செய்யலாம் என்கிற எண்ணம் வேண்டாம். வீட்டு மொட்டை மாடியிலோ, வீட்டைச் சுற்றியோ, வளர்க்கத் தொடங்கலாம்.

கேரளாவில் காயம்குளத்து, அஞ்சு கார்த்திக் என்ற இல்லத்தரசி, வெறும் 10 சென்ட் பூமியில் வர்த்தகம் செய்கிறார். தனது பிசினஸ் வளர்ந்து வருவதை கண்டு மிக்க மகிழ்ச்சி அவருக்கு. தட்டுங்கள், இதுபோன்ற கதவுகள் திறக்கப்படும்.

மல்லிப் பூ

இன்றைய அழகுசாதன மார்க்கெட்டில் எசென்ஷியல் ஆயில் என்ற எண்ணெய்க்கான தேவை மிகவும் வேகமாக வளர்கிறது. Jasmin Sambac என்ற மல்லியை டிஸ்டில் செய்த எண்ணெயும் Jojoba என்ற மற்றொரு எண்ணையையும் கலவையாக மாற்றி, அழகு நிலையங்களில், பெண்களுக்கும் மார்க்கெட் செய்யலாம்.

ட்ரை ஃப்ளவர் அரேஞ்ச்மென்ட் என்ற உலர்ந்த பூக்களுக்கு, வீட்டு அழகு செய்யும் இன்டீரியர் டெக்கரேஷனுக்கு டிமாண்ட் அதிகம். வாசனைப் பூக்களை உலர்த்தி, பிரஸ்டு ஃபிளவர் கிப்ட் செய்துபாருங்கள். மயில் இறக்கையை, இந்த உலர்ந்த பூங்கொத்துக்களுடன் சேர்த்து, உங்கள் கலை ரசனையை எங்கோ கொண்டு செல்லலாம்.

பிரான்ஸ் நாட்டிற்கு, ஒரு காலகட்டத்தில் பெர்ஃப்யூம் தயாரிப்புக்கு பெரிய அளவில் மல்லிகைப்பூ ஏற்றுமதி நம் நாட்டிலிருந்து சென்றது. காலப்போக்கில், இன்று எக்ஸ்பிரஸ் சென்ட் தயாரிக்கும் மாவட்டத்தில், பிரான்ஸ் நாட்டுக்காரர்களே ஏக்கர் ஏக்கராக மல்லி சாகுபடி செய்கிறார்கள். நம் நாட்டில் இருந்து பூக்கள் வருமோ, வராதோ என்ற வியாபார டென்ஷனை குறைத்துவிட்டார்கள்.

பூ

உங்களில் ஒருவர் மிகவும் நேர்த்தியாக மல்லிகை சாகுபடி செய்து, ஒரு புதிய கம்பெனிக்கு, சப்ளை செய்யலாமே? 8 முதல் 10 பெண்கள், ஒரு சிறு இடத்தைக் குத்தகைக்கு எடுத்து, சாகுபடி செய்யலாம். செங்கல்பட்டு மாவட்டத்தில் Orchid என்னும் அரிய பூவை சாகுபடி செய்து, சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்து இருக்கிறார்கள். ஆனால், வெறும் பூங்கொத்துப் பூக்கள், சாகுபடி செய்து போட்டியை எதிர்கொள்வது கடினம். ஹாலாந்து, நெதர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளின் பூக்கள் நம் ஏற்றுமதியை எங்கேயோ தள்ளிவிட்டார்கள். பூக்களை வேல்யூ அடிஷன் செய்து, அடுத்த கட்ட லெவலுக்கு மாற்றி விற்பனை செய்யுங்கள். அதற்கு இந்த கிரியேட்டிவிட்டி தேவை.

பூவின் வாசத்தை முகர்ந்து, ஈரமான ரோஜாவின் அழகை ரசித்துவிட்டு கடந்து போகாமல், நாமே இவைகளை வளர்த்து, ஒரு பூப்பந்தல் கட்டி, பணம் சம்பாதிக்க ஒரு இனிய வழியை ஏன் தேடக்கூடாது?

சிந்தித்துப் பாருங்கள் சிஸ்டர்ஸ்…

– பத்மா ராம்நாத்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.