காரைக்குடி என்ற சொல்லை கேட்டவுடனே, பெரும்பாலானோருக்கு நாவில் எச்சில் ஊற தொடங்கிவிடும். நம் அனைவருக்கும் பிடித்த செட்டிநாடு உணவுகளின் பிறப்பிடமே காரைக்குடிதான். காரைக்குடி செட்டிநாடு உணவுகளுக்கு மட்டுமல்லாமல் கண்டாங்கி சேலை, செட்டிநாடு கூடை, காரைக்குடி கொட்டான், மங்கு, மரவைச் சாமான்கள், கலைநயமிக்க மரச்சாமான்கள் என இன்னும் பல பல பொருட்களுக்கு பிரபலம்.

காரைக்குடி சந்தை

இந்த பட்டியலை கேட்பதற்கே மலைப்பாக இருக்கிறதே, நாம் இவை அனைத்தையும் ஒன்றாக ஒரே இடத்தில் பார்த்தால் எப்படி இருக்கும்? சுருக்கமாக சொன்னால் “சென்னையில் காரைக்குடி” என்றே சொல்லலாம். ஆம்! சென்னை காரைக்குடி நகரத்தார் சங்கம் சார்பில் வரும் டிசம்பர் 18-ம் தேதி எழும்பூர் ராணி மெய்யம்மை அரங்கில் “காரைக்குடி சந்தை” நடைபெற உள்ளது.

இதுகுறித்து காரைக்குடி சந்தை நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் விஜி பழனியப்பன் மற்றும் விசாலாட்சி கணேஷ் கூறியதாவது, “சென்னையில் காரைக்குடி நகரத்தார் சங்கம் 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சங்கம் சார்பாக முதன்முறையாக கடந்த 2019-ம் ஆண்டு காரைக்குடி சந்தை என்னும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 50 பெண் தொழில்முனைவோர்கள் பங்கேற்று ஸ்டால்கள் அமைத்திருந்தனர். மேலும் நிகழ்ச்சியில் 6,000 பொதுமக்கள் பார்வையாளர்களாக கலந்துகொண்டனர்.

விஜி பழனியப்பன் மற்றும் விசாலாட்சி கணேஷ்

எங்களது காரைக்குடி நகரத்தார் சங்கம் சார்பாக வரும் டிசம்பர் 18-ம் தேதி, காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை ஹாலில் “காரைக்குடி சந்தை” நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சந்தையில் ஸ்டால் அமைக்க சுமார் 80 பெண் தொழில்முனைவோர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

இந்தச் சந்தையில் செட்டிநாட்டுக் கொட்டான், கூடைகள், பித்தளை, மங்கு, மரவைச்சாமான்கள், கலைநயமிக்க மரச்சாமான்கள், செட்டிநாட்டுக் காட்டன் புடவைகள், பெரியவர்கள், சிறுவர்கள், மற்றும் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட ரெடிமேட் ஆடைகள், பை வகைகள், வெள்ளிச் சாமான்கள், தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள், செட்டிநாட்டிற்கே உரித்தாகிய மாவு வகைகள், பலகாரங்கள் ஆகியவை விற்பனை செய்யப்பட உள்ளது. தவிர பார்வையாளர்கள் உடனுக்குடன் சுடச்சுட செட்டிநாடு உணவுகளை சுவைக்க தனி ஸ்டால்களும் உள்ளது.

காரைக்குடி சந்தை

தற்போது வளர்ந்து வரும் பெண் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தி, வெளிநாடுகளிலும் அவர்களின் வர்த்தகத்தை பெருக்குவதே எங்களின் அடுத்த கட்ட நோக்கம்” என்று கூறுகின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.