‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் குறித்த தனது கருத்து யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய இயக்குநர் நடாவ் லாபிட், ஆனால் நான் அந்தப் படம் குறித்து கூறியது உண்மைதான் என்றும் தெரிவித்துள்ளார்.

53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவா மாநிலத்தின் தலைநகர் பனாஜியில் கடந்த மாதம் 20-ம் தேதி துவங்கி, 28-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 9 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில், 79 நாடுகளைச் சேர்ந்த 280 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் பேசிய, இஸ்ரேலிய இயக்குநரும், விழாவின் நடுவர் குழுத் தலைவருமான நடாவ் லாபிட், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் வெறுப்புணர்வைத் தூண்டும் மோசமான பிரச்சாரப் படம் என்றும், இதுபோன்ற திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்திருந்தார்.

இவரின் இந்தக் கருத்துக்கு அப்படத்தின் இயக்குநர் விவேக் அக்னி ஹோத்ரி, நடிகர்கள் அனுபம் கெர், பல்லவி ஜோஷி ஆகியோர் எதிர்ப்பு காட்டியிருந்தனர். இதனைத் தொடர்ந்து இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலோன் வருத்தம் தெரிவித்திருந்தார். இதேபோல் சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) நடுவர் குழு உறுப்பினர் சுதிப்தோ சென்னும், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் குறித்த நடாவ் லாபிட்டின் கருத்து, முற்றிலும் அவரது தனிப்பட்டக் கருத்து என்று விளக்கம் அளித்திருந்தார்.

image

கடந்த இரண்டு நாட்களாக இந்த சர்ச்சை குறித்தே அதிகளவில் பேசப்பட்டு வந்தநிலையில், தற்போது இஸ்ரேலிய இயக்குநர் நடாவ் லாபிட், மன்னிப்புக் கோரியுள்ளார். அவர் சி.என்.என். நியூஸ்18-க்கு தெரிவித்துள்ளதாவது, “யார் மனதையும் எனக்கு புண்படுத்தும் நோக்கம் இல்லை. பாதிக்கப்பட்ட மக்களையோ, அவர்களது உறவினர்களையோ அவமதிக்கும் நோக்கில் நான் அப்படி சொல்லவில்லை. அவ்வாறு புரிய வைக்கப்பட்டிருந்தால் அதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

அதேநேரத்தில், நான் படம் குறித்து என்னக் கருத்தை சொல்லியிருந்தேனோ, அது முற்றிலும் மறுக்க முடியாத உண்மை. இது நடுவர் குழுவின் உறுப்பினர்களுக்கும் தெரியும். கௌரவமான திரைப்பட விழாவில் இதுபோன்ற பிரச்சாரப் படத்தை திரையிட்டது தேவையில்லாதது. இதைத் தான் நான் மீண்டும், மீண்டும் கூறி வருகிறேன். துயரத்தை அனுபவித்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், உயிர் பிழைத்தவர்கள் மற்றும் அங்கு பாதிக்கப்படுபவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. எனது கருத்துக்கள் இதைப் பற்றியது அல்ல.

நான் திரைப்படத்தைப் பற்றி மட்டுமே பேசினேன், மேலும், நான் கூறிய கருத்துக்கள், அது தனிப்பட்ட கருத்து அல்ல. மோசமான கையாளுதல் மூலம் வன்முறை மற்றும் வெறுப்புணர்வைப் பயன்படுத்தி, சமூகத்தில் விரோதம், வன்முறை மற்றும் வெறுப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு செய்தியை இந்தப் படம் கடத்துவதாக இருந்ததாக நடுவர் குழு உறுப்பினர்கள் அனைவருமே கருதினோம்.

image

இந்தப் படத்தின் இயக்குநர் கோபத்தில் இருக்கிறார் என்பது உறுதியாக தெரிகிறது. என் படத்தைப் பற்றி யாராவது இப்படிப் பேசினால் எனக்கும் கோபம் வரும். எனது படங்கள் பெரும்பாலும் சர்ச்சைக்குரியதாகவும், எதிர்ப்புக்குரியதாகவும் பார்க்கப்படுகின்றன. எனது திரைப்படங்களைப் பற்றி சிலர் மிகவும் கடுமையான மற்றும் பயங்கரமான விஷயங்களைச் சொல்லியுள்ளார்கள்.

உண்மைகள் என்ன என்பது கேள்வி அல்ல என்பது ஒரு திரைப்படத் தயாரிப்பாளருக்கு நன்றாகத் தெரியும். எங்களில் யாரும் (ஜூரியில்), குறிப்பாக நான், உண்மைகளை ஒருபோதும் சந்தேகிக்கவில்லை. காஷ்மீரில் என்ன நடந்தது என்று சொல்லும் திறன் என்னிடம் இல்லை. நான் திரைப்படத்தின் சாரம் பற்றிதான் பேசுகிறேன் என்பதை அவர் (இஸ்ரேல் தூதர் நவோர் கிலான்) முற்றிலும் அறிந்திருந்தாலும், காஷ்மீரில் நடந்த சோகத்தைப் பற்றி அவமரியாதையாகப் பேசியதற்காக அவர் என்னைக் குற்றம் சாட்டினார். இது முற்றிலும் முட்டாள்தனமானது. ஒரு திரைப்பட தயாரிப்பாளராக நான் திரைப்படத்தை மட்டுமே மதிப்பிடுகிறேன் என்று அவருக்குத் தெரியும்.

image

என்னை இந்த விழாவுக்கு அழைத்ததற்கு நன்றி. கேன்ஸ், பெர்லின் மற்றும் மற்ற சர்வதேச திரைப்பட திருவிழாக்களில் நான் எனது கடமையை செய்ததைப் போலவே, நான் ஜூரியின் தலைவராக பணியாற்றுவதற்காக கோவாவுக்கு அழைக்கப்பட்ட விழாவிலும் எனது உண்மையான கருத்தை கூறி எனது கடமையை ஆற்றினேன். நான் படத்தில் என்னப் பார்தேனோ, பார்த்தபடி உண்மையைச் சொல்ல வேண்டும். அதுதான் எனது கடமை” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய நாட்டில் தற்போது இந்த நிலை ஏற்படும் என அஞ்சுவதாக தெரிவித்த அவர், அப்போது இது போன்ற ஒரு திரைப்பட விழாவிற்கு தன் நாட்டிற்கு வரும் ஒரு வெளிநாட்டு நடுவர், தான் பேசியதை போல் உண்மையை பேச வேண்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். சிலர் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ விவகாரத்தில் எனக்கு எதிராக இந்த மலிவான பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.