கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள், மும்பையின் தாஜ் ஹோட்டல் உட்பட பல்வேறு முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில் கொடூர தாக்குதலில் 26 வெளிநாட்டவர் உட்பட 166 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 10 தீவிரவாதிகளில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டு கடந்த 2012 நவம்பர் 11-ல் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதில் காவலர்கள் மற்றும் ராணுவ வீரர்களும் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவமானது மும்பைவாசிகள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்றுடன் 14 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் ஆண்டுதோறும் 26/11, இந்திய வரலாற்றில் கருப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

நவம்பர் 26,2008: கராச்சியிலிருந்து மும்பைக்கு விசைப்படகுகள் மூலமாக வந்த 10 பேரில் இருவர் ட்ரைடன்ட் ஹோட்டலுக்கும், இருவர் தாஜ் ஹோட்டலுக்கும், 4 பேர் நாரிமான் ஹவுஸிக்கும் துரிதமாக பிரிந்துசென்றனர். கசாப் மற்றும் மற்றொரு தீவிரவாதியான இஸ்மாயில் கான் இருவரும் CST பகுதியில் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி பெரும்புயலையே கிளப்பினர். இதில் ஏற்பட்ட மரணத்தால் மக்கள் பீதியடைந்தனர். பின்னர் அங்கிருந்து காமா மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அசோக் காம்தே, விஜய் சலாஸ்கர் மற்றும் பயங்கரவாத தடுப்பு படையின் தலைவர் ஹேமந்த் கர்கரே உட்பட 6 காவல் அதிகாரிகளை சுட்டுக்கொன்றனர்.

image

ஜீப்பை கடத்தி ஓட்டிச்சென்றவர்களை போலீசார் ஒருவழியாக மடக்கிப்பிடித்தனர். அப்போது மாறிமாறி நடத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதலில் கசாப் உயிருடன் பிடிப்பட்டாலும், கான் கொல்லப்பட்டார். அதில் மற்றொரு போலீஸ் அதிகாரியும் மரணமடைந்தார். அந்த நாளில் தாஜ் ஹோட்டலில் இருந்து கிளம்பிய புகை ஒட்டுமொத்த நாட்டையே அச்சத்திற்குள் தள்ளியது.

4 தீவிரவாதிகளில் அப்துல் ரகுமான் பாடா மற்றும் அபு அலி ஆகிய இருவரும் பிரதான நுழைவுவாயிலுக்குச் சென்று அங்கு, கச்சா RDX குண்டு வைத்தனர். பின்னர் ஏ.கே 47 ரக துப்பாக்கிகள், வெடிமருந்து மற்றும் கிரேனடுகள் பயன்படுத்தியதுடன் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். மற்ற இரண்டு தீவிரவாதிகளான சோயாப் மற்றும் உமெர் இருவரும் ஹோட்டலின் மற்ற கதவின் வழியாக சென்று நீச்சல் குளம் பகுதியில் இருந்தவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் 4 வெளிநாட்டவர் கொல்லப்பட்டனர். அன்று நள்ளிரவில் ஹோட்டலை சூழ்ந்த மும்பை போலீசார் தங்கியிருந்த விருந்தினர்களை சிறிய அறையில் பதுக்கிவிட்டு, ஹோட்டலின் கோபுரத்தின் குண்டு வைத்து தகர்த்தினர்.

image

நவம்பர் 27, 2008: மறுநாள், ராணுவ வீரர்களும் கடற்படை கமாண்டோக்களும் தாஜ், ட்ரைடென்ட் மற்றும் நாரிமன் ஹவுஸை சுற்றி வளைத்தனர். ஹோட்டலின் நான்காவது மாடியில் உள்ள ஒரு அறைக்கு பயங்கரவாதிகள் தீ வைத்தபோதும், அங்கு துப்பாக்கிச் சண்டைகள் நடந்ததாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

நவம்பர் 28, 2008: ட்ரைடென்ட் மற்றும் நார்மன் ஹவுஸில் கமெண்ட்டோக்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு அங்கு பிரச்னைகளை ஒருவழியாக் முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

நவம்பர் 29,2008: தாஜ் ஹோட்டலில் பதுங்கியிருந்த எஞ்சிய தீவிரவாதிகளை பிடிக்க தேசிய பாதுகாப்பு காவலர்கள் வரவழைக்கப்பட்டனர். இந்த சண்டையில் மீதமிருந்த தீவிரவாதிகள் ஒருவழியாக கொல்லப்பட்டனர். தொடர்ந்து, கமாண்டோ சுனில் யாதவை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டபோது மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் சுட்டுக் கொல்லப்பட்டார், நாரிமன் ஹவுஸில் நடந்த இந்த நீண்ட துப்பாக்கிச் சண்டையில் சார்ஜென்ட் கஜேந்திர சிங் பிஷ்ட்டும் கொல்லப்பட்டார்.

image

எப்போதும் ஆறாத காயம் அது – ஃபட்னாவிஸ்

மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இந்த சம்பவம் குறித்து பேசுகையில், 26/11 தீவிரவாத தாக்குதலானது எப்போதும் ஆறாத காயம் என்றார். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் தனது அரசில் இனி எப்போதும் நடக்காது எனவும் உறுதியளித்தார். அதேசமயம் இதில் புலனாய்வு துறையின் ஈடுபாடு இருப்பதால் மாநில அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது எனத் தெரிவித்தார். தொடர்ந்து, “அந்த தாக்குதலுக்கு பிறகு சிசிடிவி பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டுக்கு பிறகு ஒப்பந்தங்கள் மாற்றப்பட்டாலும் பாதுகாப்பு திட்டமானது கைவிடப்படவில்லை. 2014ஆம் ஆண்டு நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, ஒரே ஆண்டில் இந்த திட்டத்தை முடித்தோம்” என்றார்.

image

சர்வதேச சமூகம் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும் – பேபி மோஷே

மும்பை தாக்குதலில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ராப்பி கேபிரியேல் ஹோல்ட்ஸ்பெர்க் மற்றும் அவரது மனைவி ரிவ்கா ஹோல்ட்ஸ்பெர்க் இருவரும் உயிரிழந்தனர். ஆனால் அவர்களுடைய 2 வயது சிறுவன் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டான். தனது பெற்றோரை இழந்த மோஷே ஹோல்ட்ஸ்பெர்க், தனக்கு நேர்ந்ததைப் போன்ற சம்பவம் வேறு யாருக்கும் நேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என சர்வதேச சமூகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

26/11 மும்பை தாக்குதலில் உயிர்பிழைத்தவர்களில் மோஷேதான் சிறியவர். நாரிமன் ஹவுஸ்லிருந்து மோஷேயின் இந்திய செவிலித்தாயான சாண்ட்ரா சிறுவனை மார்போடு அணைத்தபடி வெளியே கொண்டுவந்த புகைப்படங்களானது அப்போது உலகளவில் பரவி பலரின் கவனத்தையும் பெற்றது. தற்போது மோஷேக்கு வயது 16. தனது உயிரையே பணயம் வைத்து தன்னை காப்பாற்றிய செவிலித்தாய் சாண்ட்ராவின் துணிச்சல் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார் மோஷே.

image

2008 தாக்குதலை நாம் மறந்துவிடக்கூடாது – ஐ.நா தூதர்

ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருசிரா காம்போஜ் இதுகுறித்து கூறுகையில், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பயங்கரவாதம் தொடர்ந்து “கடுமையான அச்சுறுத்தலாகவே” இருந்து வருகிறது. ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய மற்றும் ஈர்க்கப்பட்ட குழுக்கள், குறிப்பாக ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில், தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இவை பொதுமக்களை குறிவைத்து செயல்படுகின்றன என்று கூறியுள்ளார். மேலும், 2008 நவம்பரில், 10 தீவிரவாதிகள், பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக மும்பை நகருக்குள் நுழைந்து, 4 நாட்கள் நகரை சூறையாடினர். அதில், 26 வெளிநாட்டவர் உட்பட, 166 பேர் கொல்லப்பட்டனர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது என்று தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.