Press "Enter" to skip to content

‘சுவாரஸ்யமான ஹிட் மெட்டீரியலை, எக்ஸ்பரிமெண்டலாக…’ – ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ சாதித்ததா?

மர்மமான எந்த விஷயத்தையும் துப்பறிந்து கண்டுபிடிக்கும் ஒரு டிடெக்டிவ் ஏஜெண்ட், எதிர்பாராமல் ஒரு கேஸ் அவருக்கு கிடைக்க, அதை எப்படி சால்வ் செய்கிறார் என்பதே `ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தின் ஒன்லைன்.

தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாஸ் ஆத்ரேயா’ படத்தின் தழுவலாக இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் மனோஜ் பீதா. படத்தின் நிறைய காட்சிகளையும் கதாபாத்திரங்களையும் சேர்த்தும், மாற்றியுமிருக்கிறார்.

நகரத்தில் சின்னச் சின்ன கேஸ்களை டீல் செய்து, அதைவைத்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார் டிடெக்டிவ் ஏஜெண்ட் கண்ணாயிரம் (சந்தானம்). திடீரென அவரது அம்மா இறந்த தகவல் தெரிந்ததும், சொந்த ஊரான கோவைக்கு செல்கிறார். அவர் செல்வதற்குள் அவரது தாய்க்கு எல்லா சடங்கும் செய்து முடிக்கப்பட்டிருந்தாலும், ஒரு சொத்து தகராறு காரணமாக அந்த ஊரிலேயே சில நாட்கள் தங்கும்படியாகிறது.

அந்த சமயத்தில் ஊரின் இரயில்வே பாதைக்கு அருகில் அனாதைப் பிணங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த தகவலை அறிந்து கொள்ளும் கண்ணாயிரம், அந்தக் கேஸை துப்பறிய ஆரம்பிக்கிறார். உடன் ஆவணப்பட இயக்குநர் ஆதிரை (ரியா சுமன்), திடீரென சேரும் உதவியாளர் புகழ் ஆகியோரும் இணைந்து கொள்கிறார்கள். இந்தப் பிணங்கள் எப்படி இங்கே வருகிறது, இதை செய்வது யார்?, இதற்குப் பின்னால் இருக்கும் மர்மங்கள் என்ன?, இதற்கும் சந்தானத்திற்கும் இருக்கும் தொடர்பு என்ன?, இவை எல்லாம் தான் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’.

image

படத்தின் பாசிட்டிவான விஷயம் எனப் பார்த்தால், ஏற்கெனவே இருக்கும் ஒரு கதையை, இங்கே ஒரு புதிய களத்தில் அமைத்து, அதே சமயம் ஸ்டைலிஷாகவும் கொடுத்திருக்கிறார் இயக்குநர். சில காட்சிகளை அவர் உருவாக்கியிருக்கும் விதம் சுவாரஸ்யமாக இருந்தது. நடிகர் சந்தானம் சில எமோஷனலான காட்சிகளில் சிறப்பாக நடித்திருந்தார். தன்னுடைய அம்மா பற்றி பேசும் காட்சிகள், தன்னுடைய குடும்பத்தைப் பற்றிக் கூறும் காட்சி போன்றவற்றில் அதை உணர முடிகிறது.

அடுத்த பலம் யுவன் சங்கர் ராஜா. இந்தப் படத்தை ம்யூசிக்கலாக ட்ரீட் செய்திருந்த விதம். படத்தில் பாடல்கள் பெரிதாக இல்லை, பின்னணி இசை மட்டும் தான். அதில், ரெட்ரோ ஸ்டைலில் அவர் கொடுத்திருந்த பின்னணி இசை சிறப்பு. அடுத்த பலம் படத்தின் ஒளிப்பதிவாளர்களான தேனி ஈஸ்வர், சரவணன். இவர்களின் ஒளிப்பதிவு படத்திற்கு வித்யாசமான டோனைக் கொடுத்திருக்கிறது.

image

படத்தின் குறைகளாக தெரிவது, ஒரு படத்தை அடாப்ட் செய்வதும், ஒரு இயக்குநர் தன்னுடைய ஸ்டைலில் மாற்றுவதும் கவனிக்க வேண்டியதுதான். ஆனால் சொல்லப்படும் கதைக்கு அது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்பதுதான் முக்கியம். படத்தின் நிறைய காட்சிகளில் ஒரு முழுமை இல்லாத உணர்வே எழுகிறது. ஒரிஜினலில் வந்தது போல ப்ளாக் ஹூமரை நம்பி செல்வதா, அல்லது சந்தானத்தின் பாணியிலான கவுண்டர் டயாலாக்குகளை வைத்துப் போவதா என்ற தடுமாற்றம் படம் முழுக்க இருக்கிறது. சந்தானம் முடிந்த அளவு ஷட்டிலாக நடிக்க முயற்சிக்கிறார், அவரையும் மீறி டப்பிக்கில் அவர் சேர்த்திருக்கும் கவுண்டர்கள் பெரிதாக சிரிக்க வைக்கவில்லை. அம்மா செண்டிமெண்ட், சஸ்பென்ஸ், ஹூமர் என மூன்று ஸ்ட்ராங்கான விஷயங்கள் படத்திற்குள் இருந்தாலும், அதை பார்வையாளர்களுக்கு முழுமையாக கடத்தாமலே நகர்கிறது படம்.

ஒரு சுவாரஸ்யமான ஹிட் மெட்டீரியல் கையில் இருந்தும், அதை எக்ஸ்பரிமெண்டலாக கொடுக்க முயன்றிருக்கும் இயக்குநரின் முயற்சி புரிகிறது, ஆனால் அவுட்புட்டாக பார்க்கும் போது பெரிய அளவில் நம்மைக் கவராதா படமாகவே இருக்கிறது. மொத்தத்தில் ஏமாற்றம் தரும் ஒரு படமாகவே தேங்கிவிட்டது `ஏஜெண்ட் கண்ணாயிரம்’.

– பா. ஜான்சன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM