காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் மீதான ஒழுங்கு நடவடிக்கை நிறுத்திவைக்கப்படுவதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மீது கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் விமர்சனம் செய்தனர். இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவையும், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சந்தித்து புகார் அளித்தனர்.

இது தொடர்பாக கட்சியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மற்றும் எஸ்.சி.பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் ஆகியோருக்கு கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது. அதில் வருகிற 24-ம் தேதி (இன்று) சத்தியமூர்த்தி பவனில் நடைபெற உள்ள ஒழுங்கு நடவடிக்கை குழுவில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக வந்து காங்கிரஸ் எஸ்.சி.பிரிவு தலைவர் ரஞ்சன்குமார் நேரில் ஆஜராகினார். ஆனால் ரூபி மனோகரன் நேரில் ஆஜராகவில்லை. அதற்கு பதில் கடிதம் அனுப்பி கூடுதலாக நேரில் ஆஜராக கால அவகாசம் கேட்டிருந்தார். இதையடுத்து காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, இதயத்துல்லா உள்ளிட்டோர் ரஞ்சன் குமாரிடம் விசாரணை நடத்தினர்.

image

கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி பேசுகையில், “இன்று நடைபெற்ற விசாரணையின் அடிப்படையிலும், ஒழுங்கு நடவடிக்கை குழு நடவடிக்கையின் அடிப்படையிலும் காங்கிரஸ் கட்சியிலிருந்து ரூபி மனோகரன் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுகிறார்.

கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு இடைநீக்கம் செய்ய முழு அதிகாரம் இருக்கிறது. இன்று ஆஜராக உத்தரவு உள்ள நிலையில் ரூபி மனோகரன் கடந்த நவம்பர் 17-ம் தேதி காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் கால அவகாசம் கேட்டும், அவருடைய சில கருத்துக்களை குறிப்பிட்டும் எழுதியிருந்தார். அவருடைய கருத்துக்கள் ஏற்கக்கூடியது அல்ல என காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு முடிவு எடுத்துள்ளது. அடுத்து நடைபெற உள்ள ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் ரூபி மனோகரன் நேரில் ஆஜராகி ஆதாரங்களுடன் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். அதுவரை இடைநீக்கம் தொடரும். அதே நேரத்தில் ரஞ்சன் குமார் மீது புகார் எதுவும் இல்லை.

கடந்த வாரம் நடைபெற்ற சம்பவம் தொடர்பாகத்தான் ரஞ்சன் குமார் நேரில் நடைபெற்றதை இன்று விளக்கமளித்தார். சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற சம்பவம் குறித்து 62-க்கும் மேற்பட்ட மாவட்ட தலைவர்கள் அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு புகார் மனு அனுப்பி இருந்தனர். அதன் அடிப்படையில் கட்சி தலைமை உத்தரவிட்டதை அடுத்து ஒழுங்கு நடவடிக்கை குழுவும் கூடி இந்த முடிவை எடுத்துள்ளது” என்றார். இந்த நடவடிக்கைக்கு ரூபி மனோகரன், கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

image

இது தொடர்பாக புதிய தலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த ரூபி மனோகரன் பேசியிருந்தபோது, “என்னிடம் விசாரணை நடத்தப்படாமலேயே கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளேன். கட்சிக்காக என் தொழிலையும் விட்டுள்ளேன். மனது கஷ்டமாக உள்ளது. 20 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்துள்ளேன். இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவரிடம் புகார் அளிக்கப்படும்” என விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் மாநில பொருளாளர், சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அறிக்கை விடுத்துள்ளார். அதில், ரூபி மனோகரன் மீதான ஒழுங்கு நடவடிக்கை நிறுத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.