தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நாமக்கல் மாவட்டத்தில் நடந்த கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில், மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை அளித்தும், சாகும் வரை சிறையில் இருக்கவும் தீர்ப்பளித்தது.

மதுரை உயர் நீதிமன்றக் கிளை

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி யுவராஜ் உள்ளிட்டவர்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் 5 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சி.பி.சி.ஐ.டி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல்செய்யப்பட்டது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, “கீழமை நீதிமன்றத்தின் விசாரணை அறிக்கையை பார்க்கும்போது, விசாரணையின் தொடக்க காலத்தில் சுவாதி நட்சத்திர சாட்சியாக இருந்துள்ளார்.

கோகுல்ராஜ்

ஆனால் அதற்கும், 164 வாக்குமூலங்கள் வழங்கியதற்கும் இடையில் ஏதோ நிகழ்ந்துள்ளது. கீழமை நீதிமன்றமும் அதனை பெரிய அளவில் எடுத்துக் கொள்ளாமல் சுவாதியின் சாட்சியை நிராகரித்துள்ளது.

மேல்முறையீட்டு நீதிமன்றம் துறவிகளைப்போல தவற்றுக்கு எதிராக சமநிலையைப் பேண இயலாது. நீதித்துறையின் மனசாட்சியை திருப்திப்படுத்தும் வகையில் சுவாதியை மீண்டும் சாட்சியாக விசாரிக்க விரும்புகிறது.

உயர் நீதிமன்ற உத்தரவு

இது கட்டாயம் தேவையானது, தவறினால் நீதித்துறையின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிடும் எனவும் தோன்றுகிறது. நாமக்கல் காவல் கண்காணிப்பாளர், போதுமான காவல்துறை பாதுகாப்பை சுவாதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வழங்க வேண்டும். சுவாதியை யாரும் சந்திக்கவோ, தொலைபேசியில் பேசுவதோ கூடாது. சுவாதியின் பெற்றோருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும். சாட்சி சுவாதி பயமின்றி இந்த நீதிமன்றத்திற்கு வருவது உறுதி செய்ய வேண்டும். விசாரணை அதிகாரி, சாட்சி சுவாதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 25-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.