சென்னையில் தொடர் மழை பெய்துவந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக திடீரென கடும் குளிர் நிலவிவருகிறது. நாம் இருப்பது சென்னைதானா? என சென்னைவாசிகள் பலரும் தங்களுக்குள்ளேயே கேள்விகளை எழுப்பி இணையத்தையே மீம்ஸ்களால் வைரலாக்கி வருகின்றனர். வங்கக்கடலில் காற்றழுத்தம் உருவாகி இருப்பதால் தான் குளிர் நிலவுகிறது என்று கூறப்பட்டாலும், திடீர் குளிருக்கான தெளிவான காரணத்தை பலராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்த குளிருக்கு பின்னால் கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதா? என்று பல கேள்விகள் எழும்பிய நிலையில், திடீர் குளிருக்கான காரணம் என்ன? கனமழை வாய்ப்புகள் உள்ளதா? என்பது குறித்த கேள்விகளுக்கு விளக்கமளித்துள்ளார் வெதர்மேன் பிரதீப் ஜான்.

image

சென்னையில் திடீர் குளிர் ஏன்?

”சென்னையில் தற்போது நிலவும் குளிரானது பனிகாலத்திற்கான குளிர் அல்ல; மே மாதத்தில் ஒரு புயல் உருவானால் அது எப்படி ஈரப்பத காற்றை எடுத்தபிறகு வெப்பநிலை 40 டிகிரிக்கு மேல் அதிகரிக்குமோ, அதேபோலத்தான் இப்போதும் நடந்துள்ளது. நவம்பரில் ஒரு புயல் வரும்போது, அதுவும் சென்னைக்கு அருகில் ஒரு புயலோ அல்லது காற்றழுத்த மண்டலமோ உருவாகும்போது(குறிப்பாக மேகங்கள் கடலின் உள்பகுதிக்குள் இருக்கும்போது), மழைமேகங்கள் ஊருக்குள் வராமல் இரண்டு மூன்று நாட்கள் அருகிலேயே இருக்கும்போது, வட பகுதியிலிருந்து குளிர்ந்த காற்ற இழுக்க பார்க்கும். அப்படி இழுக்கும்போது ஏற்கெனவே குளிர்ந்துள்ள பகுதிகள் வழியாக கடந்து வரும்போது நமக்கும் அந்த குளிரின் தாக்கம் ஏற்படுகிறது.

இதற்குமுன்பே 2018, டிசம்பரில் ’பெதாய்’ புயல் உருவானபோது, வெப்பநிலையானது, 25 டிகிரிக்கும் குறைவானதை நாம் உணர்ந்தோம். அதேபோலத்தான் நேற்றும் சென்னையில் பகல்நேர வெப்பநிலையே 25 டிகிரிக்கும் குறைவாக பதிவாகி இருந்தது. பொதுவாக வெப்பநிலை 25 டிகிரிக்கும் குறைவாக இருக்கவேண்டுமென்றால் நாள் முழுவதும் மழை பெய்யவேண்டும் அல்லது இதுபோல் கடலுக்கு பக்கத்தில் காற்றழுத்தம் உருவாகி மேகங்கள் அங்கேயே இருக்கவேண்டும். அது வட பகுதியிலிருந்து தென் பகுதிக்கு குளிர்ந்த காற்றை இழுக்கும். இதனால்தான் தற்போது சென்னையில் குளிர்ந்த வானிலை நிலவுகிறது.


நமக்கும், கடலுக்குமான இடைவெளி மிகவும் குறைவு. இதனால் மழை மேகங்கள் ஊருக்குள் வரவில்லை. அவை உள்ளே வராததால் காற்றழுத்த பகுதி உருவாகியிருக்கும். காற்றழுத்த பகுதி உருவாவது நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. ஈரப்பதம் அதிகமாக இருந்தாலே குளிர் அதிகமாக இருக்கும். தற்போது நிலவியுள்ள குளிரானது உயர் அழுத்தத்தால் உருவான பனிப்பொழிவால் ஏற்பட்டதல்ல. மிக அருகில் புயல் சூழல் உருவாகி அது குளிர்ந்த காற்றை இழுப்பதால் உருவான நிலை இது. இதனை காலநிலை மாற்றம் என்று சொல்லமுடியாது”.


குளிருக்கு பிறகு மழை பொழியும் வாய்ப்பிருக்கிறதா?

”வடகிழக்கு பருவமழை என்றாலே அது குளிரும் மழையும் சேர்ந்ததாகத்தான் இருக்கும். தென்மேற்கு பருவமழையைப் போன்று காலநிலையானது சூடாக இருக்காது. இதுபோன்ற குளிர் கலந்த மழைப்பொழிவானது நவம்பர், டிசம்பர் மாதங்களில் பொதுவாக நிகழக்கூடியதுதான். நேற்று(21-11-2022) இரவு கூட சென்னையில் ஆங்காங்கே மிதமான மழை பெய்தது. ஆந்திராவின் நெல்லூர் பகுதிகளில் இன்று நல்ல மழை பெய்துவருகிறது. இரவு நேரங்களில் மழைமேகங்கள் மீண்டும் உருவாகி வருகிறது. இது மிக கனமழை, கனமழை கடலிலேயே சென்றுவிட்டதால், தற்போது பெய்யும் மழையானது பொதுவான பருவமழையாக இருக்கும். இந்த காற்றழுத்தத்தின் எதிரொலியாக ஆங்காங்கே இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மழை பெய்யும். அதன்பிறகு படிப்படியாக மழை குறைந்துவிடும்.

அதன்பிறகு கிட்டத்தட்ட இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு டிசம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் மீண்டும் மழைப்பொழிவு தொடங்கும் வாய்ப்புகள் உள்ளது” என்று விளக்கியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.