Press "Enter" to skip to content

`விஜயானந்த்’… கர்நாடக முதல்வர் வெளியிட்ட சினிமா ட்ரைலர்… யார் இந்த விஜய் சங்கேஸ்வர்?

கன்னடத் திரையுலகில் சமீப காலமாக சிறப்பான, வித்தியாசமான கதைகளைக்கொண்ட திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், கர்நாடகாவின் தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வரரின் வாழ்க்கை வரலாறு குறித்து, ‘விஜயானந்த்’ என்ற ‘பயோபிக்’ திரைப்படம் வரும் டிசம்பர் மாதம், 9–ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

‘பான் இந்தியா’ திரைப்படமாக, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் திரையிடப்பட உள்ள இந்த படத்தை, கன்னட இயக்குனர் ரிஷிகா ஷர்மா இயக்கியுள்ளார். விஜய் சங்கேஸ்வர் மகன் ஆனந்த் சங்கேஸ்வர் இப்படத்துக்குத் தயாரிப்பாளராக உள்ளார்.

டிரெய்லர் ரிலீஸ் செய்த முதல்வர் பசவராஜ் பொம்மை.

பெங்களூரில் நடந்த இப்படத்தின், ‘டிரெய்லர்’ வெளியீட்டு விழாவில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பங்கேற்று டிரெய்லரை வெளியிட்டு, ‘‘1985–ல் இருந்து விஜய் சங்கேஸ்வர் எனது நண்பர். அவர் ஒரு சாகசக்காரர், ‘கிரியேட்டிவாக’ யோசிப்பவர். சாதிக்க வேண்டுமென்ற  தாகம் எப்போதும் அவரிடம் இருக்கும்; முடிக்காததையும் முடித்துக்காட்டுவதே அவரின் பாணி. அவரது கடின உழைப்பால், அவர் துவங்கிய தொழில்களில் எல்லாம் வெற்றி பெற்று இந்த உயரத்தை அடைந்துள்ளார். எம்.பி–யாகவும் இருந்துள்ளார்’’ என விஜய் சங்கேஸ்வரரைப் புகழ்ந்தார்.

விஜய் சங்கேஸ்வர்

யார் இந்த விஜய் சங்கேஸ்வர்?

விஜய் சங்கேஸ்வர் யார் என சிம்பிளாக சொல்ல வேண்டும் எனில், ‘ஒரே ஒரு லாரியின் மூலம் தொழில் பயணத்தைத் துவக்கி இன்று, ‘லாஜிஸ்டிக்’ தொழிலில் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய ஒரு ‘டிரீம் கேட்சர்’ எனலாம். ஆனால், அவர் கடந்து வந்த பாதை நீண்டது. அவர் கடந்து வந்த பாதையைப் பார்ப்போம்…

கர்நாடக மாநிலம் கடாக் பகுதியில் பிறந்து, பி.காம்., பட்டம் பெற்றவர். 19-வது வயதில் தந்தையின் கடும் எதிர்ப்புக்களை கடந்து, 1976-ல், ஒரே ஒரு லாரியை விலைக்கு வாங்கி, ‘விஜய் டிரான்ஸ்போர்ட்’ என்ற போக்குவரத்து சேவை நிறுவனத்தைத் துவங்கினார். நேரம், காலம் பார்க்காத கடுமையான உழைப்பு, நேரம் தவறாமை, ‘கஸ்டமர்களை’த் திருப்திப்படுத்துவதே முதன்மைப்பணி என சுற்றிச் சுழன்று வேலை பார்த்தார்.

விளைவு, கைநிறைய வருமானம், மனதெல்லாம் பெருங்கனவு. ‘சரி அடுத்த கட்டத்துக்கு போவோம்,’ என, சில ஆண்டுகளிலேயே புதிய வாகனங்கள் வாங்குவது, கர்நாடகாவின் பெங்களூரு, ஹப்ளி, பெங்காம் பகுதிகளுக்கு போக்குவரத்துச் சேவை வழங்குவது என அவரின் கனவைப் போல, தொழிலும் விரிவடைந்தது.

விஜய் சங்கேஸ்வர் கம்பெனி

நிறுவனத்துக்கு ‘வி.ஆர்.எல் லாஜிஸ்டிக் லிமிடெட்’ என, பெயரையும் மாற்றினார், தனது மகன் ஆனந்த் சங்கேஸ்வரரை தொழிலில் இழுத்தார். தந்தையும், மகனும் இணைந்து இந்தியா முழுவதிலும் தற்போது 956 கிளைகள் வாயிலாக, 15 ஆயிரம் பணியாளர்களை வைத்து, 4,816 சரக்கு வாகனங்கள், 295 பயணியர் வாகனங்கள் என ஆண்டுக்கு, 2,100 கோடிக்கு மேல் ‘டர்ன் ஓவர்’ செய்து, போக்குவரத்துச் சேவை உலகில் கொடி கட்டி பறக்கிறார்.

நாடு முழுவதிலும் இவரது வாகனங்கள், சரக்கு போக்குவரத்து மற்றும், சென்னை – பெங்களூரு, கோவா, கேரளா உள்பட நாட்டின் பல பகுதிகளை இணைக்கும் மக்கள் போக்குவரத்து சேவை வழங்கி வருகின்றனர். வி.ஐ.பிக்களுக்குத் தனி விமான சேவையும் வழங்கி வருகின்றனர்.

மூன்று முறை பா.ஜ.க எம்.பி!

ஆரம்பம் முதலே தனது பகுதியில் அதீத செல்வாக்குடன் வலம் வந்த விஜய் சங்கேஸ்வர், பா.ஜ.க கட்சியில் இணைந்து மாவட்ட பொறுப்புகளைப் பெற்றார். இவரின் தொழில் வளர்ச்சி, செல்வாக்கைப் பார்த்து பா.ஜ.க கட்சியினர், கர்நாடகாவின் வடக்கு தார்வாடு பகுதிக்கு லோக்சபா எம்.பி வேட்பாளராக அறிவித்தது.

1996, 1998 மற்றும் 1999 ஆகிய மூன்று தேர்தல்களிலும் இதே இடத்தில் நின்று தொடர் வெற்றியை பெற்று, கர்நாடக பா.ஜ.கட்சியில் தனக்கென நிரந்தர இடத்தைப் பெற்றார். போக்குவரத்து சேவைத் தொழிலில் அசுர வளர்ச்சியை அடைந்து வரும் இவரை கெளரவிக்க, 2020-ல் பத்ம ஸ்ரீ விருது வழங்கியது மத்திய அரசாங்கம்.

பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

ரயில் போல, தொழில் மற்றும் அரசியல் ஆகிய இரண்டு தண்டவாளங்களிலும், அதிவேகத்தில் பயணித்து வரும் இவரது வாழ்க்கை, இவருடன் இணைந்து பயணிக்கும் இவரது மகன் வாழ்க்கையின் வரலாற்றைக் கூறுவது தான் ‘விஜயானந்த்’ திரைப்படம்.

கன்னடத் திரையுலகில் இது முதல் `பயோபிக்’ திரைப்படமாக வெளியிடப்பட உள்ள நிலையில், மறைந்த நடிகர் புனித் ராஜ் குமார் வாழ்க்கை வரலாறும், ‘பயோ பிக்’ ஆக விரைவில் படமாக்கப்பட உள்ளதாக, கன்னடத் திரையுலகினர் தெரிவித்துள்ளனர்.