டி20 தொடரை வென்ற இந்திய அணி

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை வகித்தநிலையில், இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டி டை ஆனது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 160 ரன்கள் எடுக்க, பின்னர் விளையாடிய இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி ஆட்டம் டை என அறிவிக்கப்பட்டது. இதனால் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றது.

மீண்டும் சொதப்பிய பேட்டிங் வரிசை!

இந்திய அணி கொஞ்சம் சொதப்பி இருந்தாலும் தோல்விதான் பரிசாக கிடைத்திருக்கும். தொடரும் சமனில் முடிந்திருக்கும். இதற்கு முக்கிய காரணம் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட போதும், பேட்டிங்கில் சொதப்பியதுதான். 161 ரன் இலக்கு என்பது சராசரியானதுதான். ஆனால், இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மீண்டுமொரு முறை சொதப்பினர். தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் 10, ரிஷப் பண்ட் 11 ரன்களில் ஏமாற்றினர். ஷ்ரேயாஸ் ஐயர் முதல் பந்திலே டக் அவுட் ஆனார். கடந்த போட்டியில் இஷான் கிஷன் 36 ரன்கள் எடுத்திருந்தாலும், ரிஷப் 6, ஸ்ரேயாஸ் 13 ரன்களில் நடையைக் கட்டியிருந்தனர்.

image

சொதப்பினாலும் ஏன் மீண்டும் மீண்டும் வாய்ப்பு

மூன்றாவது போட்டியில் நிச்சயம் பெஞ்சில் அமர வைக்கப்பட்டுள்ள மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. குறிப்பாக சஞ்சு சாம்சன், உம்ரான் மாலிக் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று பேசப்பட்டது. ஆனால், அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே இருந்தது. வாஷிங்டன் சுந்தருக்கு பதில் ஹர்ஷல் படேல் சேர்க்கப்பட்டார். ஆனால், தொடர்ச்சியாக சொதப்பி வரும் ரிஷப், ஸ்ரேயாஸ்க்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிட்டவில்லை. இதுதொடர்பாக மீண்டும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

சஞ்சு சாம்சனுக்காக பொங்கும் ரசிகர்கள்!

சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணி தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இந்திய அணியில் ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்பட்டு வருவதாகவும், சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுவதாகவும் அவர்கள் பதிவிட்டு வருகிறார்கள். இரண்டு போட்டிகளில் வாய்ப்பு கொடுத்து விட்டு 10-15 போட்டிகளில் பெஞ்சில் உட்கார வைக்கப்படுவதாக ஆதங்கப்படுகிறார்கள்.

சஞ்சு சாம்சனை ஏன் எடுக்கவில்லை – ஹர்திக் பாண்டியா சொன்ன விளக்கம்

போட்டிக்கு பின் பேசிய ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சனை ஏன் எடுக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், ”துரதிருஷ்டவசமாக சஞ்சு சாம்சன் இன்றையப் போட்டியில் விளையாட முடியவில்லை. உண்மையில் அவரை அணியில் சேர்த்து விளையாட வைக்க வேண்டும் என்றே நினைத்தோம். ஆனால், சில உத்திகளின் காரணமாக அவரை இன்றைய போட்டிக்கான அணியில் சேர்க்கவில்லை. தொடர்ச்சியாக பெஞ்சில் அமர வைக்கப்பட்டால் என்ன வலி இருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த விவகாரத்தை பேசுவது மிகவும் சிக்கலானது. இருப்பினும் அணியில் சுமூகமான சூழலை தக்க வைக்க வேண்டும்” என்றார்.

image

இந்திய அணிக்காக சஞ்சு சாம்சன் இதுவரை!

2015 ஆம் ஆண்டில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் அறிமுகமாகி இருந்த போதும், அதிகப் போட்டியில் அவர் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 294 ரன்கள் எடுத்துள்ளார். 16 டி20 போட்டிகளில் விளையாடி 296 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை வாய்ப்பு வழங்கப்படவில்லை. மொத்தமே இந்திய அணிக்காக 26 போட்டிகளில்தான் விளையாடியுள்ளார்.

சஞ்சு சாம்சன் குறித்து ரவிசாஸ்திரி சொன்னது!

ஒருமுறை சஞ்சு சாம்சன் குறித்து ரவிசாஸ்திரி கூறுகையில், “சீனியர் வீரர்கள் அனைவரையும் பெஞ்சில் அமர வைத்துவிட்டு, சஞ்சு சாம்சனுக்கு குறைந்தபட்சம் 10 போட்டிகளில் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுங்கள். ஒவ்வொரு முறையும் வாய்ப்பு கொடுத்த இரண்டு போட்டிகளுக்குப் பின் அவரை நீக்காதீர்கள். 10 போட்டிகளுக்குப் பின்னர் அந்த முடிவை எடுங்கள். அத்துடன், பேட்டிங்கில் முறையான வாய்ப்பினையும் கொடுங்கள்” என்று கூறியிருந்தார்.

image

சஞ்சு சாம்சன் கிரிக்கெட் கேரியர்!

கேரள மாநிலத்தை சேர்ந்தவரான சஞ்சு சாம்சன் தொடக்கத்தில் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். தன்னுடைய 17வது வயதில் விதர்பா அணிக்கு எதிராக முதல் தரப் போட்டியில் அறிமுகம் ஆனார். இரண்டாவது சீசனிலேயே 5 போட்டிகளில் விளையாடி இரண்டு சதம், ஒரு அரைசதம் அடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். பின்னர், 2012 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக ஒப்பந்தமானார். ஆனால், ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சென்றார்.

இதனிடையே, ஐக்கிய அமீரகத்திற்கு சென்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பைக்கான இந்திய ஜூனியர் அணியில் இடம்பிடித்திருந்தார். அந்த தொடரில் மூன்று அரைசதங்களுடன் டாப் ரன் குவித்து அசத்தினார். இருப்பினும் அந்தப் போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு போகவில்லை.

7வது ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆலோசகராக ராகுல் டிராவிட் இருந்தபோது சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் பெரிய எதிர்காலம் இருக்கிறது என புகழ்ந்து பேசியிருந்தார். பின்னர் 2015 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சன் தன்னுடைய முதல் சர்வதேச போட்டியில் விளையாடினார். அந்த டி20 போட்டியில் 19 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின்னர், டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக டிராவிட் இருந்தபோது 2016ம் ஆண்டில் சஞ்சு சாம்சனை ஏலத்தில் எடுத்தார். இந்திய கிரிக்கெட் அணியில் தோனிக்கு பிறகு விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. 2018 முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.