தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளால் வியாபாரம் நாடு முழுவதும் விரைவாக நடைபெற்றுள்ளதால், அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வருவாய் கணிசமாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

மத்திய நிதி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, அக்டோபர் 2022-க்கான ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1,51,718 கோடியாக அதிகரித்துள்ளது. அதிகரிக்கும் பணவீக்கம், எரிபொருள் மற்றும் உணவுப்பொருட்களின் தொடர் விலையேற்றத்தையும் கடந்து, இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப்பாதையில் பயணிப்பதை இந்த மறைமுகவரி வருவாய் பிரதிபலிக்கிறது. ஏப்ரல் 2022க்கு அடுத்தபடியாக 2-வது அதிகபட்ச வருவாய் ஈட்டிய மாதமாக அக்டோபர் 2022 திகழ்கிறது. இந்த ஆண்டில் ரூ.1.50லட்சம் கோடிக்கு மேல் மொத்த ஜிஎஸ்டி வருவாய் வசூலாகியிருப்பது, இது 2-வது முறையாகும்.

image

கோவிட் கால பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு..

அக்டோபர் மாத வசூலில், மத்திய அரசின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.26,039 கோடியாகவும், மாநில அரசுகளின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.33,396 கோடியாகவும், மத்திய- மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.81,778 கோடியாகவும், செஸ் வரிவருவாய் ரூ.10,505 கோடியாகவும் உள்ளது என்றும் இருப்பதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாதாந்தர ஜிஎஸ்டி வரி வருவாய் ஒன்பதாவது முறையாக அக்டோபர் மாதத்தில் ரூ1.4 லட்சம் கோடியைத் கடந்துள்ளது. கோவிட் பாதிப்பிலிருந்து இந்திய பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில் கடந்த எட்டு மாதங்களாக  ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ1.4 லட்சம் கோடியை விட அதிகாமாக வசூலாகியுள்ளது.

image

தமிழகத்தில் வசூல் எவ்வளவு?

அக்டோபர் மாதத்தில் தமிழகத்தில் 9,540 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூலானதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் 25 சதவீதம் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. சென்ற வருடம் அக்டோபர் மாதத்தில் தமிழகத்தில் ரூ. 7,642 கோடி ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டது.

இந்த வருடம் அக்டோபர் மாதத்தில் புதுச்சேரியில் 204 கோடி ஜிஎஸ்டி வரி வசூலானதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் அக்டோபர் மாதத்தில் 34 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்ற வருடம் அக்டோபர் மாதத்தில் புதுச்சேரியில் 152 கோடி ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டது.

image

மூன்றாவது இடத்தில் தமிழகம்!

ரூ.23,037 கோடி ஜிஎஸ்டி வருவாயை ஈட்டி, அக்டோபர் மாதம் அதிக வருவாய் ஈட்டிய மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் கர்நாடக மற்றும் மூன்றாவது இடத்தில தமிழ்நாடு உள்ளன. இந்த வருடம் அக்டோபர் மாதத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. பொதுவாக நவம்பர் மாதத்தில் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இவ்வருடம் அக்டோபரிலேயே தீபாவளி மட்டுமல்லாது, நவராத்திரி, தன்தேரஸ், சட் மற்றும் கர்வாச்வத் ஆகிய பண்டிகளும் கொண்டாடப்பட்டுள்ளது.

பண்டிகைகளே காரணம்!

இரண்டு வருட கோவிட் பாதிப்புக்கு பிறகு, இந்த வருடம் இந்த பண்டிகைகளை கோலாகலமாக கொண்டாடக்கூடிய சூழல் உருவானதால், புத்தாடைகள், நகைகள், பாத்திரங்கள், இனிப்புகள், பரிசுப்பொருட்கள், வாகனங்கள், அலங்காரப்பொருட்கள் உள்ளிட்டவற்றை மக்கள் இந்த வருட பண்டிகைக்காலத்தில் அதிகம் வாங்கியுள்ளனர் என்று சொல்லப்படுகிறது. இதனாலேயே ஜிஎஸ்டி வருவாய் அக்டோபர் மாதத்தில் உயர்ந்துள்ளதுள்ளது என்றும் இது இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் எனவும் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.