திருவாரூர் அருகே புதிய சாலை போடாமலேயே போடப்பட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் புதுப்பத்தூர் ஊராட்சி சத்திரக்கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தி. வார்டு உறுப்பினரான இவர், மாங்குடியில் இருந்து பெரியதும்பூர் செல்லும் சாலை உள்ள சத்திரக்கட்டளையில் இருந்து புதுப்பத்தூர் ஆற்றுபாலம் வரை 1.5 கிலோ மீட்டர் தூரம் வரை சாலை அமைக்கப்பட்டது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விவரம் கோரியிருந்தார்.

image

அதற்கு திருவாரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 2020 – 21 நிதியாண்டில் உலக வங்கி நிதிஉதவியுடன் நெடுஞ்சாலை துறையினரால் தார்சாலை அமைத்து தரப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூர் மாவட்ட ஊராட்சி நிதியின் மூலமாக தார்சாலை போடப்பட்டுள்ளது. அதன் பிறகு எந்தவித சாலையும் போடப்படவில்லை.

தற்போது இந்த சாலை மண் சாலையாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சாலை போடப்படடுள்ளதாக வெளியான தகவலால் சத்திரக்கட்டளை கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து கிராம மக்கள் கூறும் போது… புதுப்பத்தூர் ஊராட்சி சத்திரக்கட்டளை கிராமத்தில் இருந்து ஆந்தக்குடி மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், புதுப்பத்தூர் பள்ளி செல்லும் மாணவர்கள், விவசாய வேலை செய்யும் தொழிலாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் மண் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை மழை காலங்களில் சேறும், சகதியுமாக இருப்பதால் பயன்படுத்த முடியாமல் அனைத்து தரப்பினரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக மினி பேருந்து கூட இயக்கப்படுவதில்லை.

image

இப்பகுதி மக்கள் சாலை அமைத்துத் தர வேண்டுமென நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் சாலை அமைக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படுவது அதிர்ச்சியாக உள்ளது. சாலை அமைப்பில் பெரும் முறைகேடு நடந்துள்ளது. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அதே சமயம் சாலை அமைக்கும் பணியை போர்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.