முன்னாள் காதலனின் தொடர் தொல்லையால் 5 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு, பிரபல இந்தி சின்னத்திரை நடிகை வைஷாலி டக்கர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டம் மஹித்பூரைச் சேர்ந்தவர் வைஷாலி டக்கர். கடந்த 2015-ம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட ‘Yeh Rishta Kya Kehlata Hai’ சீரியலில் சஞ்சனா சிங் என்ற கதாபாத்திரத்தின் மூலம், சின்னத்திரையில் அறிமுகமான வைஷாலி டக்கர், பின்னர் பல்வேறு தொடர்களில் நடித்து வந்தார். அதன்பிறகு, கடந்த 2010-ம் ஆண்டு முதல், 2018-ம் ஆண்டு வரை கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பான ‘Sasural Simar Ka’ என்ற தொடரில், சீமா மற்றும் பிரேமின் மகளாக அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்ததன் வாயிலாக மிகவும் பிரபலமடைந்தார். இந்தத் தொடர் இந்தியில் வரவேற்புப் பெற்ற நிலையில், தமிழில் தனியார் சேனலில் ‘மூன்று முடிச்சு’ என்றப் பெயரில் வெளியாகி இங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

image

அதன்பிறகு ‘சூப்பர் சிஸ்டர்ஸ்’ உள்பட பல சீரியல்களில் நடித்து பிரபலமடைந்த நிலையில், கொரோனா காரணமாக தனது தந்தை மற்றும் சகோதரனுடன் இந்தூரில் உள்ள சாய்பாக் காலனியில், 29 வயதான வைஷாலி டக்கர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 15-ம் தேதி தனது அறையில் உள்ள மின்விசிறியில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அவரது அறைக் கதவு வெகுநேரமாகியும் திறக்காததை அடுத்து, வைஷாலியின் குடுபத்தினர் கடந்த 16-ம் தேதி கதவை உடைத்து பார்த்தபோது, வைஷாலி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாகத் தெரிகிறது. பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டுசென்று பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவரின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், வைஷாலியின் அறையில் சோதனையிட்டபோது 5 பக்க கடிதம் சிக்கியுள்ளது. அதில் அவரின் முன்னாள் காதலனும், தற்போது அவரது வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசித்துவரும் ராகுல் நவ்லானி என்ற இளைஞர், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொல்லை கொடுத்து வந்ததால் இந்த முடிவை வைஷாலி எடுத்துள்ளதாக காவல்துறையினர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார். ராகுல் நவ்லானியின் தந்தையும், வைஷாலி டக்கரின் தந்தையும் ஒன்றாக இணைந்து வியாபாராம் செய்து வந்துள்ளனர். இதனால் மிக நீண்ட காலமாக இரு குடும்பங்களும் பழகிவந்த நிலையில், ராகுல் மற்றும் வைஷாலி இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

image

பின்னர் சில காரணங்களால் வைஷாலி அவரை விட்டு விலகியுள்ளார். அதன்பிறகு ராகுலுக்கு, திஷா என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. எனினும், ராகுல் மனரீதியாக தனது முன்னாள் காதலியும், நடிகையுமான வைஷாலியை துன்புறுத்தி வந்துள்ளார். இதற்கிடையில் கடந்த ஆண்டு கென்யாவை சேர்ந்த பல் மருத்துவர் அபிநந்தன் சிங் என்பவருடன், வைஷாலிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில், அது நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு காரணம் ராகுல் நவ்லானி என்பதும் தற்கொலை கடிதம் மூலம் தெரியவந்துள்ளது.

வைஷாலி எழுதியுள்ள கடிதத்தில், “ராகுல் நவ்லானி என்னை உணர்வு ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சுரண்டி வந்தார். கடைசியாக யாரும் உன்னை திருமணம் செய்து கொள்ள விடமாட்டேன் என்று கூறி அதையும் செய்தார். ராகுலின் மனைவி திஷாவுக்கும் இந்த உண்மை தெரியும் என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ஆனால் அவர் தனது குடும்பத்தை காப்பாற்ற விரும்பியதால், அனைவரின் முன்னிலையிலும் என்னைப் பற்றி மோசமாகப் பேசுவார்.

image

இதை ராகுல் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். நான் அவரை ஒன்றும் செய்யமுடியாது என்று அவர் அறிந்திருந்தார். ராகுல் என் வாழ்க்கையை சிதைத்தார். என்னால் அவர்களை தண்டிக்க முடியாது. ஆனால் சட்டமும் கடவுளும் தண்டிக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ராகுல் இருக்கும் வரை தனக்கு திருமணம் நடக்காது என்று வைஷாலி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

வைஷாலியின் திருமணம் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம், அவருக்கு பேசியுள்ள மணமகனிடம், வைஷாலியின் தவறான புகைப்படங்களையும், வீடியோக்களையும் ராகுல் நவ்லானி பகிர்ந்து, வைஷாலிக்கு திருமணம் நடக்கவிடாமல் தடுத்து வந்ததாக, அவரின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனையடுத்து, ராகுல் நவ்லானி மற்றும் அவரது மனைவி திஷா மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகிய தம்பதியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.