உலகக் கோப்பையின் முதல் போட்டியில் நமீபியா அணியிடம் 55 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது இலங்கை அணி. பெரிய அணிகளை வீழ்த்தி ஆசியக் கோப்பையை வென்ற அணியால் கத்துகுட்டி அணியான நமீபியாவை தோற்கடிக்க முடியாமல் போனதற்கு காரணம் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

2022 டி20 உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்பு இருக்கும் அணிகளில் முதல் இடங்களில் இருக்கும் இந்தியா, பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி ஆசியக் கோப்பையை வென்றதால், இலங்கை அணி மீதான கவனமும் இந்த உலகக் கோப்பையில் இருந்து வந்தது. ஆனால், இன்று தொடங்கிய உலகக் கோப்பையின் முதல்ப் போட்டியில் நமீபியாவிடம் 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்து இருக்கிறது இலங்கை அணி. கத்துக்குட்டி அணியான நமீபியாவை இலங்கை அணி எளிதாக வீழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடரின் முதல் போட்டியிலேயே வெற்றியை ருசித்திருக்கிறது நமீபியா.

image

கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவாக பார்க்கப்படும் ஒரு போட்டி வடிவம் என்றால் அது டி20 கிரிக்கெட் வடிவம் தான். கிரிக்கெட் வீரர்கள் குறுகிய வடிவத்தில் எப்படி அவர்களது திறமையை வெளிப்படுத்தி வெற்றியை தக்கவைத்துகொள்கிறார்கள் என்பதையும், தனது விருப்பமான அணியின் வெற்றிதோல்வி முடிவை விரைவிலேயே பார்க்க போகிறோம் என்பதை சுவாரசியத்துடன் உணர்ச்சி பெருக்காக கொண்டு சேர்ப்பது டி20 கிரிக்கெட் வடிவம் தான்.

image

அந்தவகையில் கிரிக்கெட் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று கோலாகலமாக தொடங்கியது. தொடரின் முதல் ஆட்டத்தில் (குரூப் சுற்று) ஆசியக் கோப்பை சாம்பியன் அணியான தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை, கத்துக்குட்டி அணியான நமீபியாவை இன்று சந்தித்தது. தகுதிச்சுற்று போட்டியான இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்தது. அந்த அணி தரப்பில் பிரைலின்க் 28 பந்துகளில் 44 ரன்னும், கிரிக்கெட் தரவரிசையில் க்ளென் மேக்ஸ்வெல்லுக்கு முன்னிலையில் இருக்கும் ஜே.ஜே.ஸ்மித் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அவுட் ஆகாமல் 16 பந்துகளில் 2 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் விளாசி 31 ரன்கள் எடுத்து அசத்தினார்.

image

இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியினர் நமீபியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்து திணறினர். 92 ரன்கள் இருந்த நிலையில் 9 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 100 ரன்கள் கூட எட்டாது என்ற நிலையில் இறுதி விக்கெட்டுக்கு 16 ரன்கள் சேர்த்து 100 ரன்களை எட்டியது இலங்கை அணி. பின்னர் 19 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி 108 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் நமீபியா அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

image

1. களத்தின் தன்மையை கணிக்கவில்லை:

போட்டியை தொடங்கிய நமீபியா அணி தொடக்கத்தில் தடுமாறி விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும் பிறகு ஆடுகளத்தின் தன்மையை கணித்து அதற்கு ஏற்றார் போல் இறுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால், இலங்கை இரண்டாவதாக பேட்டிங் ஆடினாலும் கூட ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப விளையாடாமல் தொடர்ந்து அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

2. அதிரடியாக விளையாடி விக்கெட்டை பறிகொடுத்த இலங்கை:

நமீபியாவின் வீரர்களான பிரைலின்க் மற்றும் ஜே.ஜே.ஸ்மித் இருவரும் பிட்சில் இருந்து பந்து நின்று வந்ததால் அதற்கேற்ப பந்து பிட்ச் ஆகும் இடத்திலிருந்தே அடித்து ஆடினர். ஆனால் இலங்கை வீரர்கள் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்று தோல்வியை சந்தித்துள்ளனர். ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் பிட்சுகளின் தன்மை மற்றும் தட்பவெப்பநிலை பொறுத்து ஆட வேண்டியது முக்கியமாக உள்ளது.

image

3. நமீபியாவை குறைத்து மதிப்பிட்டது

நமீபியாவை குறைத்து மதிப்பிட்டதுதான் இலங்கை தோற்க முக்கியமான காரணமாக அமைந்துவிட்டதாக தெரிகிறது. ஏற்கனவே நமீபியா அணி 2021 உலகக்கோப்பைத் தொடரில் அயர்லாந்து, நெதர்லாந்தை வீழ்த்தி ‘சூப்பர்-12’ சுற்றுக்கு முன்னேறியதை மறந்துவிடக் கூடாது. அத்துடன், சமீபகாலமாக நமீபியா அணியின் ஆட்டங்களும் சிறப்பானவையாகவே இருந்து வருகிறது. இந்த வெற்றியின் மூலம் இந்த உலகக் கோப்பையிலும் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு அந்த அணிக்கு பிரகாசமாக உள்ளது. மேலும், குரூப் A அணியில் இருக்கும் நெதர்லாந்தும் கடந்த 10 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் நிலையில் இலங்கை தவறை சரிசெய்துகொண்டு வெற்றி பெற வேண்டிய இடத்தில் இருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.