ஒரு நடிகர் தன்னுடைய கதாபாத்திரத்திற்குள் ஒன்றி அதில் கலந்துவிட்டாலே போதும்; மற்றவை தானாக நடக்கும்.

எப்பொழுது திரைப்படமோ அல்லது படைப்போ வெற்றி அடைந்ததாக சொல்ல முடியும். அந்த திரைப்படத்தை பார்த்த பின்பு சில நாட்களுக்காகவாது அதன் தாக்கத்தில் இருந்து மீளாமல் இருந்திருக்க வேண்டும். அதில் நடித்த நடிகர்களை அவர்களது இமேஜை தாண்டி அந்த கதாபாத்திரங்களின் வழியாக மட்டுமே மனதில் நிற்க வேண்டும். மீண்டும் அந்தப் படத்தை பற்றி நினைக்கும் பொழுதெல்லாம் ஒரு உணர்வு நம்மை உலுக்கிச் செல்லும். இப்படியான அம்சங்களை கிட்டதட்ட நிறைவு செய்கிற படம் மட்டும்தான் ‘அசுரன்’. வெற்றிமாறன் இயக்கத்திலே மிகவும் குறைவான நாட்களில் படமாக்கப்பட்டு திரைக்கு வந்த படம் இதுதான். ஆனால், கருத்தளவில் அவர் நினைத்ததை இந்தப் படத்தில் எட்டியிருக்கிறார் என்றே சொல்லலாம். படமாக்கலில் சில குறைகள் இருந்தாலும் கதையின் கருவின் முன்னால் அவையெல்லாம் தூசுபோல் பறந்திருக்கும்.

image

அனுபவம் எனும் ஆசான்!

இந்தப் படம் நமக்கு நிறையவே கற்றுக் கொடுத்திருக்கிறது. இதில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து க்ளைமேக்ஸில் சிவசாமி பேசும் வசனம் இன்றளவும் பரவலாக எல்லோர் மனதிலும் நின்றுவிட்டது. சாதிக் கொடுமைகள் குறித்து அதற்கான எதிர்வினைகள் குறித்தும் வரும் காட்சிகளும் பெருமளவு பேசப்பட்டு விட்டது. இந்தப் படத்தில் நாம் பார்க்க வேண்டிய முக்கியமான அம்சம், வாழ்வின் அனுபவம். 40 வயதினை கடந்த ஒரு தந்தையின் பக்குவம். அதுவரை அவருக்கு கடந்து வந்த வாழ்க்கையில் இருந்து அவர் பெற்ற அனுபவம், நிச்சயம் நமக்கு ஆகச் சிறந்த பாடமே. ஏனென்றால், தற்காலத்தில் வயது முதிர்ந்தவர்களின் அனுபவங்களை யாரும் காது கொடுத்து கேட்கவே, உற்று கவனிக்கவோ தயாராக இல்லை. அப்படியான ஒரு இயல்பைத்தான் இன்றைய தலைமுறையினர் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் ஒரு சாபக்கேடு.

ஒரு தந்தையாக சிவசாமி பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நமக்கு பாடமே. வார்த்தைகளில் மட்டுமல்ல அவரது செயலிலும். அவர்கள் காவல் காக்கும் ஒரு காட்சி போதும் அதனை புரிந்து கொள்ள. யார் வருகிறார்கள் என்பதை சத்தத்தை கேட்டே சிவசாமி சொல்லிவிடுவார். மூத்த மகன் தந்தையின் அனுபவத்தை கவனிப்பான். அதனால்தான் அவனுக்கு கேள்வி எழுகிறது, தந்தையிடம் அது குறித்து உரையாடுகிறான். ஆனால், இளையவன் சிதம்பரமோ அலட்சியமாக இருப்பான். அவனது அலட்சியமே அங்கு தொல்லையாக மாறிவிடும். ஆனால், அதுகூட அவனுக்கு புரியாது. அதாவது, வெள்ளாமையை மேய காட்டு பன்றி உள்ளே வந்துவிடும். பன்றியை வேட்டையாட அவர்கள் குத்து வேலுடன் தயாராவார்கள். அப்பொது நிலத்தில் எப்படி நடக்க வேண்டும் என்பது ஒரு அனுபவம். சருகு, மெலார் மேல் கால்கள் பட்டால் சத்தம் வரும். அதனை தவிர்க்க சிவசாமி பாதத்தை பார்த்து பார்த்து வைப்பார். ஆனால், சிதம்பரம் அதனை அறியாமல் கால்களை சிறிய குச்சிகள் மேல் வைப்பதால் வரும் சத்தத்தை பன்றி அறிந்துவிடும். அதன்பின் அவர்கள் திட்டமே கெட்டுப்போகும்.

மலை உச்சியில் வெளிச்சம் உண்டாக்கக் கூடாது அது தங்களை பின் தொடர்பவர்களுக்கு வழி காட்டுவது போல் ஆகிவிடும் என்பதை சிதம்பரத்திற்கு சிவசாமி சொல்வான். அதனை சிதம்பரம் சரியாக புரிந்திருக்க மாட்டான். அதனால்தான் பின்னால் அதேபோன்ற ஒரு செயலால் தன்னை விரட்டி வந்தவர்களிடம் மாட்டிக் கொள்வான். நிலைமையின் தன்மையை முழுமையாக உணர்ந்து கொண்டதால் மட்டும்தான் சிவசாமி அவ்வளவு படத்தில் இருப்பார். ஆனால், ஒருமுறை கத்தியால் ஒருவரை வெட்டிவிட்டதாலோ என்னவோ ’என்னை பார்த்துக்க எனக்கு தெரியும்’ என்ற தெனாவட்டில் இருப்பான். அதுதான் இளம்பருவக் கோளாறு.

’செவப்பி போச்சேனு அவன் நினைக்குறா.. நான் சிவப்பியோட போச்சுனு நிம்மதியா இருக்கேன்’.. ‘புள்ளைங்க உசுரு போனதுக்கு அப்புறம் கௌரவத்தை வச்சிட்டு என்னடி பண்றது’ இதுபோன்று சிவசாமி உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையிலும் அனுபவத்தின் உச்சம் இருக்கும்.

image

நடிப்பின் உச்சத்தில் தனுஷ்!

என்னதான் இந்தப் படத்தின் மாஸ்டர் வெற்றிமாறன் என்றாலும் ஏதோ ஒரு விதத்தில் ஒரு படி மேலே இந்த கதைக்கு உயிர் கொடுத்தவர் தனுஷ் என்றால் நிச்சயம் அது மிகைப்படுத்தலாக இருக்காது. இது இயக்குநரின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடுவதற்காக சொல்வதல்ல, சிவசாமி கதாபாத்திரத்தின் உயிர் தனுஷின் உடலில் கொஞ்ச நாள் வாழ்ந்திருப்பது போலவே அப்படி நடித்திருப்பார் தனுஷ். எல்லா காட்சிகளிலும் தனுஷ் நடிப்பில் ஒரு உச்சத்தை தொட்டதை பார்க்க முடியும். குடித்துவிட்டு தள்ளாடும் காட்சிகளில் அப்படி பின்னி எடுத்திருப்பார். அவரது நடிப்பை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம். ஒரு நடிகர் தன்னுடைய கதாபாத்திரத்திற்குள் ஒன்றி அதில் கலந்துவிட்டாலே போதும். மற்றவை தானாக நடக்கும். இதனை இயக்குநர் வெற்றிமாறனும் பல பேட்டிகளில் வெளிப்படுத்தி இருக்கிறார். இந்தப் படத்திற்கு தனுஷ் கொடுத்த ஒத்துழைப்பு அளப்பரியது என்று அவர் சொல்லியிருந்தார். தனுஷும் சிவசாமி கதாபாத்திரம் குறித்து அவ்வளவு சிலாகித்து பேசியிருக்கிறார்.

image

அசுரன் உடைத்தது எதை?

அசுரன் திரைப்படமான காத்திரமான ஒரு கருவை கொண்டிருந்தது. வெக்கை நாவலையும் தாண்டி அவர் சொல்ல வந்த விஷயத்தில் தன்னுடைய கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருந்தார். நாவலுக்கும் படத்திற்கு இடையில் அவ்வளவு இடைவெளி உண்டு. ஒரு 5 முதல் 10 சதவீதம் மட்டுமே நாவலை சேர்ந்தது. மற்றவை எல்லாம் வெற்றிமாறன் கிரியேட்டிவ் தான். அசுரன் திரைப்படம் வெளிப்படையாக சாதி ரீதியான ஒடுக்குமுறைகளை பற்றி பேசுகிறது. சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிர்வினைகளையும் படத்திலேயே ஆற்றுகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அசுரன் படத்திற்கு முன்பாக சாதிய தீமைகளை முன்வைத்து நிறைய படங்கள் வந்தன. சமீப காலமாக பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்களால் தான் அவர்களுடைய வாழ்க்கை குறித்த படங்களை அழுத்தமாக சொல்ல முடியும் என்ற கருத்து உருவாகி வந்தது. பரவலாக இல்லையென்றால் இப்படியொரு கருத்து முன்வைக்கப்பட்டு வந்தது. ஆனால், அதையெல்லாம் அசுரன் உடைத்தது. ஒரு தீமையை, கொடுமையை சொல்வதற்கு ஒருவர் அதே சமூகத்தில் பிறந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதனை உணர்ந்து கொண்டாலே போதுமானது. நன்கு ஆராய்ந்து தேவையான விஷயங்களை உள்வாங்கிக் கொண்டு முடிந்தவரை தவறுகள் இல்லாமல் அந்த படைப்பை உருவாக்கினாலே போதுமானது. அந்த வகையில் அசுரன் தனித்துவமானதே!!

(அசுரன் 2019ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி ரிலீஸ் ஆனது)

இதையும் படிக்கலாமே: தீபாவளி வரை ‘பொன்னியின் செல்வன்’ தானா? – புதுப்படங்களின் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுகிறதா?!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.