பணவீக்கத்தை கட்டுப்படுத்த, வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ ரேட் என அழைக்கப்படும் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மீண்டும் அதிகரித்துள்ளது. இதுவரை 5.4 சதவிகிதமாக இருந்த ரெப்போ ரேட் இனி 5.9 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது என வெள்ளிக்கிழமை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்தா தாஸ் அறிவித்தார்.

இதன் விளைவாக வங்கிகளிடம் வாங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் மீண்டும் அதிகரிக்க உள்ளன என வல்லுனர்கள் கருதுகின்றனர். மேலும் வாகன கடன், வீட்டுக்கடன், கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு விதமான கடன்களுக்கு வட்டி அதிகரிக்கும் எனவும் வாடிக்கையாளர்கள் கூடுதல் EMI கட்ட வேண்டியிருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு வருடமாக உலகம் முழுவதும் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டு வருகின்றன. இதனால் டாலருக்கு நிகரான பல்வேறு கரன்சிகளின் மதிப்பு சரிவை கண்டுள்ளது. இந்திய ரூபாயின் டாலருக்கு நிகரான மதிப்பும் அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகரிப்பு காரணமாக சரிந்துள்ளது. ஆகவே, ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது.

இந்த வருடம் மே மாதம் வரை ரெப்போ ரேட் 4 சதவிகிதமாக இருந்தது. தற்போதைய உயர்வுடன் 5.9 சதவிகிதம் என்கிற அளவில் மூன்று வருடமாக காணாத உச்சத்தை தொட்டுள்ளது. இந்த வருடத்தில் இது நான்காவது ரெப்போ ரேட் அதிகரிப்பாகவும். ஒவொரு முறை ரெப்போ ரேட் அதிகரிக்கும்போதும் வங்கிகள் வாடிக்கையாளர்களின் வட்டி சுமையை அதிகரிக்கின்றன. பணவீக்கம் கட்டுக்குள் வராத நிலையில், ரிசர்வ் வங்கி அதிரடி வட்டி உயர்வுகள் இதுவரை எப்படி இருந்துள்ளது என்பதை பார்க்கலாம்:

image

கடந்த மே மாதத்தில் 40 புள்ளிகள்;
ஜூன் மாதத்தில் 50 புள்ளிகள்;
ஆகஸ்ட் மாதத்தில் 50 புள்ளிகள்;
தற்போது மீண்டும் 50 புள்ளிகள் என
இதுவரை 1.9 சதவிகிதம் ரெப்போ ரேட் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த வருட இறுதிக்குள் ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை கட்டுப்படுத்த மீண்டும் ரெப்போ ரேட்டை மேலும் 50 புள்ளிகள் அதிகரிக்கலாம் என கருதப்படுகிறது. விலைவாசி உயர்வு ஏழை மக்களை அதிகம் பதிக்கும் என்பதால், ரிசர்வ் வங்கி பொருளாதார வளர்ச்சி குறையும் அச்சம் இருந்தபோதிலும் வட்டி அதிகரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

ரெப்போ ரேட் அதிகரிப்பும்.. விளைவுகளும்..

கோவிட் பெருந்தொற்று தாக்கம் மற்றும் உக்ரைன் போரால் விலைவாசி உயர்வு ஆகியவற்றை தொடர்ந்து உலக பொருளாதாரம் சிக்கலான சூழலில் உள்ளதாக சக்திகாந்தா தாஸ் தெரிவித்தார். ’’ரிசர்வ் வங்கி இந்திய பொருளாதாரம் இந்த நிதியாண்டில் 7.2% வளர்ச்சி ஆதாயம் என கணிக்கப்பட்டிருந்த நிலையில் அது தற்போது 7% என குறைக்கப்பட்டுள்ளது. இந்திய பொருளாதாரம் உலக சவால்களை எதிர்கொள்ள வலுவான நிலையில் உள்ளது’’ என சக்திகாந்தா தாஸ் மும்பையில் பேசினார்.

image

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தை கட்டாயம் உயர்த்தும் என வல்லுனர்கள் கணித்திருந்தனர். இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக தொடர்ந்து சரிந்து வருகிறது. ஒரு டாலர் 81 ரூபாயை கடந்து வணிகமாகும் நிலையில், இந்த சரிவுக்கு அமெரிக்கா வட்டி விகிதங்களை மீண்டும் 75 புள்ளிகள் சமீபத்தில் உயர்த்தியதுதான் காரணம் என கருதப்படுகிறது. பிரிட்டிஷ் பவுண்ட், யூரோ, ஜப்பானிய கரன்சி ஆகியவை சமீபத்தில் அமெரிக்க டாலருக்கு நிகராக கடும் சரிவை கண்டுள்ளன. துருக்கி, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் மட்டுமல்லாது, வளர்ந்த பொருளாதரங்களாக கருதப்படும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும் பணவீக்கம் கடுமையாக உள்ளது.

ரெப்போ ரேட் உயர்வு அடிப்படையில் வங்கிகள் அவசரத்துக்கு நகைகளை அடகு வைத்து வங்கிகளில் இருந்து பெரும் கடன்; மற்றும் டிவி, ஏசி, பிரிட்ஜ் போன்ற பொருட்களை தவணை முறையில் வாங்குவதற்கான கடன் ஆகியவையும் அதிகரிக்கும் என கருதப்படுகிறது. அதேபோல் தொழில் முனைவோர் வங்கிகளில் இருந்து பெரும் கடனுக்கான வட்டியும் மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோவிட் பாதிப்பு மற்றும் பொதுமுடக்கம் காரணமாக 2020 மற்றும் 2021 ஆகிய வருடங்களில், மத்திய அரசு பல்வேறு கடன்களுக்கு வட்டி விகிதத்தை குறைக்க மானியம் அளித்து வந்தது. பொருளாதார மந்த நிலை காரணமாகவும் வட்டிகள் குறைந்த அளவிலேயே இருந்தன.

image
கோவிட் பெருந்தொற்றுக்கு பின் பல்வேறு பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை மற்றும் உக்ரைன் போர் காரணமாக தற்போது பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பண்டிகை காலத்தில் கடன் வாங்கினால் கூடுதல் வட்டி செலுத்தக்கூடிய நிலையும் சாமானியர்களுக்கு உண்டாகியுள்ளது.

–  கணபதி சுப்ரமணியம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.