வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

‘ஷெட்யூல்ப் படி ரயில் போனாலே மதியம் ஒண்ணரை மணி ஆயிடும் வீடு போய்ச் சேர;

அதுக்கப்பறம் குளிச்சி ரெடியாகி சரஸ்வதி பூஜை முடிக்கணும்;

நேத்தும் லோலோன்னு அலைச்சல்;

புது இடம்ங்கறதால சரியாத் தூக்கமுமில்லை;

‘பர்த்’ ஏதாவது கிடைச்சா சௌகரியமா இருக்கும்’. கொஞ்சம் உடம்பைச் சாய்க்கலாம். விஸ்ராந்தி எடுத்கலாம்.

என்றெல்லாம் நினைத்தபடி ‘பி ஒன்’ கோச் நோக்கிச் சென்றாள் மிஸ் ரேவதி.

-********-

‘அப்பாவே காலா காலத்தில் பூஜையை முடித்துவிடலாம்;

பிடிவாதமாக “நீ வந்ததும்தான் பூஜை…” என்கிறார்;

வயது ஆக ஆக பக்குவம் வரும் என்பார்கள்;

‘எரிக் எரிக்ஸன்’ சொல்றதைப் போல சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய வயசு அப்பாவுக்கு;

ஞானம் வரவேண்டிய வயசு;

ஆனால் அப்பாவுக்கோ பிடிவாதம்தான் அதிகமாறது…’

‘பெற்ற மகள்மீது பாசத்தைக் கொட்டுவது என்பது இதுதானோ…?’

“இதுதான் யதார்த்த நிலையோ…?”

‘சுய அனுபவமில்லாததால் அப்பாவின் செயலை விமர்சிக்கிறோமோ…?’

இப்படியெல்லாம் எண்ணங்கள் அலை பாய

‘அவர் வயசுக்கு நாம எப்படி இருப்போமோ…?’ என்ற எண்ணமும் வராமல் இல்லை மிஸ் ரேவதிக்கு.

-******-

ஆயிற்று, ரேவதிக்கும் வயது நாற்பத்தைந்து தாண்டிவிட்டது.

அப்ரகாம் மாஸ்லோவின் தேவைப் படியமைப்புக் கோட்பாட்டின்படி ‘தாழ் தேவை’களான சரீரத் தேவை, பாதுகாப்புத் தேவை, கௌரவத் தேவை போன்ற படிகள் அனைத்தையும் கடந்துவிட்டவள்.

‘உயர்ப் படி’யான ‘தன்னலத் தேவை’ எனும் படியை நெருங்கி அதில் நகர்கின்றவள்.

Representational Image

‘எரிக் எரிக்ஸனின்’ பார்வைப்படி ரேவதி ஞானக் கோவிலின் முதல் படியில் நின்று, சமூக வளர்ச்சிக்கான ஆற்றலை வெளிப்படுத்தவேண்டிய கால கட்டமிது.

எத்தனைதான் படித்திருந்தாலும், புரட்சிகரமான எண்ணங்கள் தோன்றினாலும், எதையுமே நடைமுறைப்படுத்தாமல் செக்குமாட்டு வாழ்க்கை வாழும் தன்னையே எண்ணிக் கழிவிரக்கம் கொண்டாள் ரேவதி.

-*******-

“என் வரவுக்காகக் காத்திருக்காம நீங்களே பூஜையை முடிச்சிடுங்கப்பா.”

சொல்ல மனமிருந்தாலும், உள்ளத்தில் துணிவில்லை.

ரத்த உறவின் மரணத்தால் பூஜையே செய்யாமலிருந்த நான்கைந்து நவராத்திரி தவிர விவரம் தெரிந்த நாள் முதல் ரேவதி தன் அப்பாவுடன்தான் சரஸ்வதி பூஜை கொண்டாடியிருக்கிறாள்.

பூஜை என்பது மனச் சாந்தியையும், நிம்மதியையும் தரும் ஒன்றாகவே ஆன்மீகவாதிகள் அறிமுகப்படுத்தியிருந்தபோதிலும், தன் வீட்டு பூஜை ஒரு இயந்திரத்தனமான சடங்காகவே தோன்றியது ரேவதிக்கு.

-*******-

“அந்த பர்த் எடுத்துக்கங்க…”

விரல் சுட்டினார் ‘டிடிஈ.’

டாக்டர் ரேவதி எம் ஏ., பி எட்., பிஎச்டி.,

பட்டதாரி ஆசிரியை.

என் சி இ ஆர் டி., ரிசோர்ஸ் பர்ஸன்.

பெரிய மனது வைத்து, கூடுதல் கட்டண ரசீதுடன் ‘ட்டூ டயர் ஏசி பெட்டியில் லோயர் பர்த் ஒதுக்கிக் கொடுத்த டிக்கெட் பரிசோதகருக்கு மனப்பூர்வமாக நன்றி சொன்னார்.

எதிர் லோயரில் தாறுமாறாய்க் கிடந்தது தலையணை.

கார்பெட் கசங்கிய நிலையில் கிடந்தது.

சைடு லோயரில் கீச் மூச் என்று கத்திக்கொண்டும் கையில் கிடைத்ததைப் பிடித்து இழுத்துக்கொண்டும் குறும்பு செய்துகொண்டிருந்தது நான்கு வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை.

குழந்தை செய்யும் குறும்புகளை ரசித்தபடி கால் நீட்டி அமர்ந்திருந்தாள் பார்வைக் குறைபாடுடைய தாய்.

அவ்வப்போதுகுழந்தையின் உச்சந்தலையில் பாசத்தோடு முத்தமிட்டாள்.

பத்து சதவீதப் பார்வைதான் இருந்தது அவளுக்கு.

அவள் காலடியில் ஜன்னல் மூலையில், ஒரு-சாய்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான் முழுப்பார்வையற்ற அவள் கணவன்.

குழந்தையின் முதுகை தந்தைப் பாசத்தோடு வருடிக்கொடுத்துக்கொண்டிருந்தான்.

“ஹாய்… கத்தக்கூடாது…”

“ஊஹூம் கூச்சல் போடக்கூடாது…”

செல்லமாகச் சொல்லியபடி குழந்தையின் குறும்புகளை ரசித்துக்கொண்டிருந்தார்கள் பெற்றோர்.

ஒரு 200, ரெண்டு 100, ஒரு 50, ஒரு 20, ஒரு 10 என்று சொல்லிக்கொண்டே டீ வியாபாரி கொடுத்த பாக்கிப் பணத்தை மாற்றுத் திறனாளிக்கே உரிய முறையில் தடவிச் சரிபார்த்து சட்டைப் பையில் செருகிக்கொண்டார்.

“தாங்க்ஸ்”

ஒரு முறுவலுடன் கூறினார்.

இடைவிடாமல் குறும்பு செய்தது குழந்தை.

கடிந்தேக் கொள்ளாமல், அவர்கள் சமாளித்த பாங்கு ரசிக்கத்தக்கதாக இருந்தது.

-********-

“ப்ளே ஸ்கூல்ல போட்டாச்சா பையனை..?”

“இல்லீங்க…”

இருவரும் ஒருமித்துச் சொன்னார்கள்.

“வாட்டர் பாட்லேய்… கூல் வாட்டரேய்….”

“கொய்யாப்…பழம்…”

“டக…டக…டக…டக…பேபி டாய்…பேபிடாய்…”

“காப்பி…கா…ப்பி….காப்……பி…”

“டீடீடீடீடீடீடீ மசாலா டீடீடீ”

“…மசால் வடேய்…ய்…ய்….சூடான சமூசா…..”

“…பாதாம்….பால்.. சூடான பாதாம்…பால்….”

“டப்…டப்…டப்…டப்…”

காசு கேட்டு திரு நங்கைகள்.

ரயில் அதற்கே உரிய பாணியில் இயங்கிக்கொண்டிருந்தது.

பார்வையற்றோரின் குழந்தை காதில் வாங்கியதையெல்லாம் மிமிக்ரி செய்தது.

-********-

“வர்றியா ஆன்ட்டிகிட்ட…”

இரு கைகளையும் நீட்டி குழந்தையை அழைத்தாள் ரேவதி.

“…ம்…போ…” என்றாள் பெற்றவள்.

“ஆன்ட்டி கதை சொல்லுவாங்களாம்…”

குழந்தையின் தந்தை தன் பார்வையற்றக் கண்களை அகலத் திறந்தபடி சொன்னார்.

ரேவதியின் மனது நேற்று நடைபெற்ற கல்வியியல் கருத்தரங்கப் பதிவுகளை அசைபோட்டன.

-********-

என் சி இ ஆர் டி மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது அந்தக் கருத்தரங்கை.

கருத்தரங்கின் தலைப்பு

‘தாய்மொழிக் கல்வியின் சிறப்பு.”

செமினார் ஹால் வரவேற்பறையில் வருகைப்பதிவேடு nவைக்கப்பட்டிருந்தது.

பதிவேட்டில் கையொப்பமிட்டு தங்கள் வருகையை உறுதி செய்துகொண்டார்கள் அழைப்பாளர்கள்.

கையெழுத்துப் போட்டவர்களுக்கு ‘ஸிப்’பால் மூடித்திறக்கும் வசதியுள்ள ஃபைல் கொடுத்தார்கள்.

பேனா, லெட்டர் பேட், நான்கைந்து ஏ4 பேப்பர்கள் எல்லாம் அதனுள்ளே இருந்தன..

-********-

கல்வியியலில் கரைகண்டவர்கள் எல்லோரும் மேடையில் அமர்ந்திருந்தார்கள்.

Representational Image

எல்லோரும் மேடைக்கு முன்னே போடப்பட்ட நாற்காலிகள் கரைகாணவேண்டிய அழைப்பாளர்களால் நிறம்பியிருந்தன.

நிகழ்ச்சித் தொகுப்பாளர் புலவேந்திரனார் அவர்கள் கணீரென்ற வெண்கலக் குரலில், “இறை வணக்கம்” என்று அறிவித்தார்.

இறை வணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்ததும் “பர்……………..டர்…………..” என பிளாஸ்டிக் நாற்காலிகளின் கால்களால் சத்தமெழுப்பிக்கொண்டே அமர்ந்தார்கள்.

-********-

“நிர்வாக இயக்குநர் தமிழ் வேந்தன் அவர்கள், அன்று ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாகவும், இன்றைய மயிலாடுதுறை மாவட்டத்திலும் இருக்கும் அன்னப்பன்பேட்டை என்ற கிராமத்தில் தன் ஆரம்பக் கல்வியைக் பெற்றவர்.”…………………… என்று தொடங்கி, இன்றைய அவரின் உயர் பதவி வரை சுருக்க- விரிவான அறிமுகம் செய்தார் ஒருங்கிணைப்பாளர் திரு புலவேந்திரன் அவர்கள். நானும் அன்னப்பம்பேட்டையைச் சேர்ந்தவன்தான் என்றும் பெருமையுடன் கூறி பலத்தக் கைதட்டலும் பெற்றார்.

“முதல் நிகழ்ச்சியாக வரவேற்புறை. இந்தப் பயிற்சிப் பட்டரையின் தலைவராக வீற்றிருக்கும் நிர்வாக இயக்குநர் தமிழ்வேந்தன் அவர்களை பணிவுடன் அழைக்கிறேன்.”

அறிவித்தார் நிகழ்ச்சித் தொகுப்பாளர் புலவேந்திரன்.

பலத்த கை தட்டலுக்கு நடுவே திரு தமிழ் வேந்தன்’ அவர்கள் மைக் முன் வந்து நின்றார்.

“குட் மார்னிங் எவ்ரிபடி”

தமிழ்வேந்தனின் கணீர் குரலோடு நிகழ்ச்சித் தொடங்கியது.

இங்கிலாந்தில் இருப்பதைப் போல் ஒரு ‘ஃபீல்’ நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே உருவாகிவிட்டது.

நிறைய பி எச் டீ க்கள்…

ஏகப்பட்ட எம்.ஃபில்கள்…

நிறையப் பேசினார்கள்.

உலகின் தலைகீழ் மாற்றத்திற்கெல்லாம் அவர்களிடம் வழிவகை இருந்தது…

ஆங்கிலத்தில் சொன்னார்கள்.

ஆங்கிலம் கலந்து சொன்னார்கள்.

பார்வையாளர்கள் எல்லோரும் தங்களிடம் கொடுக்கப்பட்ட வெள்ளைக் காகிதங்களை கருப்பாக்குவதும் கை தட்டுவதுமாக காலம் கடந்தது.

-********-

நடுவில் மூளைச் சோர்வை நீக்கி புத்துணர்வை அளிக்க டீ, பிஸ்கட் விநியோகிக்கப்பட்டது.

அடுத்து மதிய உணவு இடைவேளை.

பிற்பகல் முதல் நிகழ்ச்சியாக ‘குரூப் டிஸ்கஷன்.’

‘வடை மற்றும் ..டீ’ யோடு அடுத்த இடைவேளை.

அடுத்த ப்ரொக்ராம்

‘ப்ரெய்ன் ஸ்ட்ராமிங் செஷன்’

பேச்சு…பேச்சு…பேச்சு…பேச்சு

கை தட்டல், கை தட்டல்

பேச்சு

கைதட்டல்.

கடைசியில் ஃபீட் பாக் செஷன்.

“மிகவும் பயனுள்ள கருத்தரங்கு’’ என தேவையான ஃபீட் பேக் எழுதி வாங்கிக் கொண்டாகிவிட்டது.

லாக் புத்தகத்தில் மிகச் சிறப்பான, பயனுள்ள கருத்தரங்கம் எனக் குறிப்புப் பதியப்பட்டது.

தலைமைக்கு அறிக்கை, மீடியாவுக்கு ரிப்போர்ட் எல்லாம் ஒகே.

தேசிய கீதம்.

சரியாக 5 மணிக்கு பட்டரை முடிந்தது.

வளாகத்துக்கு ஒரு பர்லாங் தூரத்திலிருந்த ஒன்று விட்ட அக்கா வீட்டில் இரவு வந்து தங்கினாள் ரேவதி.

ஊருக்கு ரயிலேறிவிட்ட ரேவதிக்கு உடல் சோர்வாக இருந்தாலும் அந்தக் குழந்தையின் துருதுருப்பை ரசித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

கருத்தரங்கத்தில் கொடுத்த கவரைப் பிரித்தாள்.

நேற்றைய உழைப்புக்காகத் தனக்குக் கிடைத்த பணத்தை எண்ணினாள்.

அதோடு, தன் கல்வியியல் ஆராய்ச்சிக்கான களம் எதிலேயே அமைக்கப்பட்டுள்ளதையும் எண்ணிப் பார்த்தாள்.

-*******-

“படக்கதைகள், மருத்துவம், ஆன்மீகம், அரிச்சுவடி, வாய்ப்பாடு, கலர் நோட்டு, கோல நோட்டு, காப்பி நோட்டு…” என்று வண்ண வண்ணப் புத்தக அடுக்கை, விரல்களே இல்லாத வலது கையால் மார்பில் அணைத்தபடி சுமந்து வந்து ரேவதியின் இருக்யையின் ஓரமாக வைத்தார் நடமாடும் புத்தக வியாபாரி.

ரேவதி புத்தகங்களை ஒவ்வொன்றாய் எடுத்துப் பார்க்கத் துவங்கினாள்.

வியாபாரியோ, அடுத்த பெட்டியில் வைத்துள்ள மற்றப் புத்தகங்களை கொண்டுவரச் சென்றுவிட்டார்.

-********-

அந்தக் குழந்தை வேற்று முகம் பாராமல் ரேவதியிடம் வந்தது.

ரேவதி புத்தகத்தை எடுத்துப் பார்த்தபோது அந்தக் குழந்தையும் புத்தகத்தைப் பிடித்து இழுத்தது.

“இது வேணுமா செல்லம்…”

“இருடா தங்கம்…”

என்றெல்லாம் கொஞ்சிக்கொண்டு அந்தக் குழந்தைக்கு புத்தகங்கள், க்ரேயான்கள், வண்ணம்தீட்டும் புத்தகங்கள் என வாங்கினாள்.

அந்தக் குழந்தை ரேவதியோடு ஒட்டி உறவாடியது.

குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்று தெரியாமலாச் சொன்னார்கள்.

-********-

ரேவதிக்கு தன் வீட்டில் வழக்கமாக நடைபெறும் சரஸ்வதி பூஜை பற்றிய சிந்தனை வந்தது.

வழக்கமாகப் பூஜை முடிய மதியம் 1.00 மணி ஆகிவிடும்.

“பண்டிகை நாளும் அதுவுமா காலாகாலத்துல பூஜையை முடிப்போம்னு இல்லாம பீரோ பீரோவா இருக்கற புத்தகங்களையெல்லாம் பரத்திப் போட்டுண்டு, அடுக்கிண்டு… இது என்ன வேலை… கொழந்தைக்குப் பசி வந்துடுமேங்கற எண்ணமே இல்லையா உங்களுக்கு…?”

காலை முதல் ஆயிரம் முறை புலம்பிவிடுவாள் அம்மா.

“ரேவதி இதைப் பாரு, உன் கொள்ளுத்தாத்தா படிச்ச ஓலைச்சுவடி… இது பூஜைல வைக்கணும்.”

“அப்பா நீ படிப்பியாப்பா இதை..?”

“ம்ஹூம்..கட்டுக் கூட பிரிச்சதில்லை;

என் அப்பா எனக்குச் சொன்னார்;

நான் உனக்குச் சொல்றேன்..”

இப்படியாக… பரம்பரை பரம்பரையாகப் படிக்கப்படாத ஓலைச் சுவடிகள்.

க்ரந்தம், தேவநாகரி, சமஸ்கிருதம், தெலுங்கு என பல தலைமுறைகளாக பயன்படுத்தப்படாதப் பாராயணப் புத்தகங்கள்.

பல வருஷ பஞ்சாங்கங்களின் தொகுப்பு.

அப்பாவின் கலர் பேலட், தூரிகைகள், கலர் குப்பிகள்….

Representational Image

அம்மாவின் ஸ்ரீராமஜெயம் நோட்டு, பால் கணக்குச் சிட்டை

அதோடு ரேவதியின் அனைத்துப் புத்தகங்கள், நோட்டுக்கள், ஜாமெட்ரி பாக்ஸ்…இத்யாதிகளை எடுத்து, அதைப் பற்றி ஒரு கதை சொல்லி, பிறகு அவைகளை லே அவுட் செய்து அடுக்கி வைக்கும்போதே சூரியன் உச்சியைத் தாண்டிவிடுவான்.

அதற்குப் பிறகு குளித்துவிட்டு சந்தனக் கட்டையை வைத்து எலுமிச்சம் பழம் அளவுக்கு சந்தன விழுது அரைத்து எடுப்பது ரேவதியின் வேலை.

“அந்தக் குழந்தையை போட்டு இந்த பாடு படுத்தறேளே… கடைல விற்கற சந்தனப் பவுடரை வாங்கப்படாதா.?”

அம்மா ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் சொல்வதும் அப்பா அதை காதில் வாங்காமல் அலட்சியம் செய்வதும் நினைவில் வந்து மோதியது.

சரஸ்வதி பூஜையன்று ‘படிக்கவேக் கூடாது’ என்பது அப்பாவின் வாதம்.

அந்த நாளில் பூஜை மட்டும்தான் செய்ய வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பார்.

ஒரு சரஸ்வதி பூஜை நாளில் புத்தக பீரோவை தூசு தட்டுகிற போது கிடைத்த ‘இரும்புக் கை மாயாவி’ என்ற புத்தகத்தை எடுத்துப் படித்தபோது அப்பா செய்த ரகளை; இப்போது ரயிலில் புத்தகங்களைப் புரட்டிக்கொண்டிருந்த ரேவதியின் நினைவில் பளிச்சிட்டது.

-********-

அரிச்சுவடிப் புத்தகத்தின் அட்டையை ‘சரட்…’ என்று, எதிர் சீட்டுக் குழந்தை இழுத்தபோது சுயநினைவுக்கு வந்தாள் ரேவதி.

கலர் கலராய் புத்தகங்களைக் கண்டதும் மகிழ்ந்தது அக்குழந்தை.

குழந்தையை அருகில் ஒட்டி உட்கார வைத்துக்கொண்டாள் ரேவதி.

அ… அம்மா…

படத்தைப் பார்த்துச் சொல்லியது குழந்தை.

தன் அம்மாவைச் சுட்டிக்காட்டி அம்மா என்றது.

அதைக் ‘கேட்ட’ அப்பா, அம்மாவின் சந்தோஷம் அவர்களின் முகத்தில் வெளிப்படையாகப் பிரதிபலித்தது.

“ஆ…ஆடு” என்று சொல்லிக்கொடுத்தாள் ரேவதி.

ரயில் ஜன்னல் வழியாக வயல்வெளிகளில் மேயும் ஆடுகளைக் காட்டினாள்.

ரேவதியை குழந்தைக்கு மிகவும் பிடித்துப்போயிற்று.

நிறைய கற்றுக்கொண்ட களைப்பில் புத்தகத்தை மார்போடு அணைத்தபடியே ரேவதியின் மடியில் தலைவைத்துத் தூங்கிவிட்டது குழந்தை.

-********-

“எங்கே வந்துண்டிருக்கே..?”

அரை மணிக்கொருதரம் செல் போனில் அப்பாவின் கேள்வி.

“நாலு மணி தாண்டிதான் வரும்படியா இருக்கும் போலப்பா…வண்டி ரொம்ப லேட். எனக்காகக் காத்திருக்காம பூஜையை முடிங்கப்பா..”

“சரிம்மா..என்றார் அப்பா சுரத்தே இல்லாமல்.

தன் மடியில் புத்தகத்தை மார்போடு அணைத்தபடி தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையைப் பாசத்தோடு பார்த்தாள் ரேவதி…

தன் வாழ்நாளில் முதன் முதலில் நிறைவான சரஸ்வதி பூஜை கொண்டாடிய நிறைவில் சற்றே கண் அயர்ந்தாள்.

***********************************

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.