ராமநாதபுரத்தில் பா.ஜ.க ஆதரவாளராக அறியப்படுபவர் டாக்டர் மனோஜ்குமார். கடந்த 23-ம் தேதி இவருடைய தனியார் கிளினிக் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்களுக்கு மர்மநபர்கள் மூன்று பேர் தீ வைத்து சென்றனர். இதே போல் மாநிலம் முழுவதும் பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் இந்து அமைப்பினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. இது குறித்து விசாரிக்க பா.ஜ.க சார்பில் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டன. அதில் ஒரு குழுவினர் ராமநாதபுரத்தில் டாக்டர் மனோஜ் குமார் காருக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக வந்தனர்.

அந்த குழுவில் சசிகலா புஷ்பா, பொன் பாலகணபதி மற்றும் முன்னாள் சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ,மாணிக்கம் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். காருக்கு தீ வைத்த சம்பவம் குறித்து மனோஜ் குமாரிடம் விசாரித்து தகவல்களை பெற்றுக் கொண்டனர்.

முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம்

அதனை தொடர்ந்து அக்குழுவில் உள்ள முன்னாள் சோழவந்தான் எம்.எல்.ஏ மாணிக்கம் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசும்போது, “தமிழகத்தில் தி.மு.க ஆட்சியில் தீவிரவாதிகள் உள்ளே நுழைந்த அச்சுறுத்தும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது. ராமநாதபுரத்தில் காருக்கு தீ வைத்த நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் எந்த இயக்கத்தைச் சார்ந்தவர்கள், அவர்களுக்கு தூண்டுதலாக இருப்பவர்கள் யார் என்பதை நடுநிலையோடு விசாரித்து அவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் மீண்டும் மீண்டும் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருக்குமானால், பா.ஜ.க அதனை பார்த்து சும்மா இருக்காது என்பதை தமிழக முதல்வர் உணர்ந்து, இந்த தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தமிழக முதல்வர் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பெட்ரோல் குண்டு வீச்சுக்கு ஆதரவாக இருப்பவர்கள் தமிழக மக்களுக்கு எதிரானவர்கள்” என கூறினார்.

வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்ட பா.ஜ.க நிர்வாகிகள்

பின்னர் தீ வைக்கப்பட்ட காரையும், கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுப்புறத்தையும் விசாரணைக் குழுவினர் ஆய்வு செய்தனர்.

அப்போது பா.ஜ.க மாவட்ட தரவு மேலாண்மை பிரிவு துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் என்பவருக்கும், மாநில மகளிர் அணி துணைத் தலைவர் கலாராணி என்பவருக்கும் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது. எனினும் அதற்கான காரணம் முழுமையாக வெளியாகவில்லை. பின்னர் மாவட்ட தலைவர் கதிரவன் கூட்டத்தில் புகுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் விசாரணை குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.