ஆசிய கோப்பையிலிருந்து இந்திய அணி பெற்றுவரும் தொடர் தோல்விக்கு காரணம் என்ன என்பதை கண்டறிந்து, அதனை உலககோப்பைக்கு முன்கூட்டியே சரிசெய்ய வேண்டிய பொறுப்பு ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மா இருவருக்கும் அதிகமாகவே இருக்கிறது.

அனுபவ வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் உட்பட பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் என அனைத்து கட்டங்களையும் டிக் செய்து வலிமையான அணியாக தெரிந்தாலும், தொடர்ந்து இந்திய அணி தோல்வியையே தழுவி வருகிறது. அணி வீரர்கள் ஆடும் விதத்தில் ஒரே அணியாக ஆடுவதுபோல் இல்லாமல் ஒவ்வொருவரும் தனித்தனி திறன்களை வெளிகாட்டவும், எதிர்வரும் உலககோப்பைக்கான அணியில் இடம்பெற மட்டுமே முயற்சி செய்வதுபோலவும் ஆடிவருகின்றனர். தொடர்ந்து இப்படியே சொதப்பி வந்தால் ஆசியகோப்பையில் வெளியேறியது போன்றே பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் உலககோப்பையிலும் வெளியேற வேண்டிய இடத்தில் தான் நிச்சயம் இந்திய அணி இருக்கும் நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது. இதை களைய வேண்டிய பெரிய பொறுப்பு தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா இருவருக்கும் இருக்கிறது. தோல்விக்கான காரணங்களாக இருப்பவற்றை பற்றி பார்ப்போம்.

ராகுல் டிராவிட்டின் பயிற்சி சோதனைகள் :

image

தலைமை பயிற்சியாளராய் பொறுப்பேற்றதிலிருந்தே ராகுல் டிராவிட் அணித்தேர்வில் பல அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தியதே இந்திய அணி சந்திக்கும் தோல்விகளுக்கு முதல் காரணமாக பார்க்கப்படுகிறது. ராகுல் டிராவிட்டின் சோதனை முயற்சிகள் நீண்ட காலம் எடுத்துகொண்டதாகவே தெரிகிறது. சோதனை முயற்சிகளின் முடிவில் அணித்தேர்வுக்கான 11 வீரர்களின் தேர்வு முழுமையடைந்து இருக்க வேண்டும். ஆனால், மாறாக இன்னும் ஆடும் 11 அணி வீரர்கள் யார் என்பது முடிவு நிலைக்கே எட்டாமல் இருப்பது அணிக்கு மிகப்பெரிய பாதிப்பாக அமைந்திருக்கிறது. உலககோப்பைக்கு இன்னும் 20 நாட்களே இருக்க கூடிய நிலையில் அணித்தேர்வில் தடுமாற்றம் இருப்பதற்கு தலைமை பயிற்சியாளர் மட்டும் தான் காரணமாக இருக்கிறார். ஏனெனில் அவர் டி20 அணித்தேர்வில் அதிக வீரர்களை பயன்படுத்தியிருக்கிறார். இலங்கை, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டிஸ், இங்கிலாந்து மற்றும் ஜிம்பாபே அணிகளுக்கு எதிராக அவர் களமிறக்கிய வீரர்களின் எண்ணிக்கையை எடுத்துக்கொண்டால் 3 விதமான ஆடும் இந்திய அணியை உருவாக்கிவிடலாம். அந்தளவிற்கு சோதனை முயற்சிகளை மேற்கொண்டு விட்டு இன்னும் ஆடும் 11 வீரர்கள் யார் என்பது தெரியாமல் இருப்பது வேடிக்கையாகவே இருக்கிறது.

ரோகித் சர்மாவின் கேப்டன்சி:

image

தோல்விகளுக்கு மற்றொரு பெரிய காரணமாக இருந்து வருவது ரோகித் சர்மாவின் கேப்டன்சியாக தான் இருக்கிறது. ஐபிஎல்லில் மும்பை அணியில் அனைவரும் அனுபவ வீரர்களாகவும் மேட்ச் வின்னர்களாகவும் இருந்ததனால் தான், அவரால் மும்பை அணியில் பல அதிரடி வெற்றிகளை பார்க்க முடிந்திருக்கிறது என்பதை தற்போது அணி வீரர்களிடம் அவர் ஆடுகளத்தில் வெளிக்காட்டும் அணுகுமுறையும், அவரது பீல்டிங் செட்டப் அனுகுமுறையும், பந்துவீச்சாளர்களின் சுழற்சிமுறையும் வெட்டவெளிச்சமிட்டு காட்டுகின்றன. அணி வீரர்கள் தவறிழைத்துவிட்டால் அங்கேயே வீரர்களை திட்டுவதும், பழிப்பதுமாகவே களத்தினில் இருந்து வருகிறார் ரோகித் சர்மா. ஒரு கேப்டன் பொறுப்பென்பது போட்டியில் நடக்கும் தவறுகளை சரிசெய்து வெற்றிக்கு என்ன செய்யவேண்டும் என்பதில் தான் கவனம் செலுத்த வேண்டுமே தவிர அணி வீரர்களை திட்டிவிடுவதால் ஒன்றும் நடக்கப்போவதில்லை. அதற்கும் மேலாக கடந்த நான்கு போட்டிகளில் செய்த அதே தவறை தான் அணி வீரர்கள் திரும்பவும் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால், அணி வீரர்களுக்கிடையே அணுகுமுறை சரியாக இல்லை என்றே அப்பட்டமாக தெரிகிறது. அதனால் ரோகித் சர்மா தனது அனுபவத்தை பயன்படுத்தி தானொரு கேப்டன் என்பது மட்டுமில்லாமல் ஒரு மூத்த வீரர் என்பதையும் உணர்ந்து அணிவீரர்களை ஒருங்கிணைத்து தட்டிக் கொடுத்து அணிக்கு தேவையானதை வெளிக்கொணர முயற்சிக்க வேண்டும்.

பந்துவீச்சாளர்களின் தேர்வு:

image

வெற்றி பெற தேவையான ரன்களை தாண்டி இந்திய அணி நல்ல இலக்கை நிர்ணயித்தாலும் தொடர்ந்து வெளிப்பட்டுவரும் மோசமான பவுலிங்கால் இந்திய அணி படுதோல்வியை சந்தித்து வருகிறது. மூத்த வீரரும் அனுபவ வீரருமான புவனேஷ்வர் குமார் தொடர்ந்து மோசமான பந்துவீச்சையே வெளிக்காட்டி வருகிறார். அனுபவ வீரர்களே சொதப்பினால் இளம் பந்துவீச்சாளர்கள் எப்படி சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொணர்வார்கள். ஒரு அணியின் வெற்றிக்கு பேட்டிங்கில் எப்படி சிறந்த பார்ட்னர்சிப் முக்கியமோ அதேபோல் பந்துவீச்சிளும் பார்ட்னர்சிப் என்பது முக்கியமான ஒன்று. அப்படியிருந்தால் தான் அணிக்கு தேவையான நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்ற புரிதல் பந்துவீச்சாளர்களிடம் இருக்கும். போட்டியின் டெத் ஓவர்களில் 20 ரன்கள் அடிக்க வேண்டியிருந்தாலும் சுலபமாக ரன்களை விட்டுக் கொடுத்துவிடுகின்றனர். ஒரு போட்டியில் என்றால் பரவாயில்லை ஆடும் அத்தனை போட்டியிலும் சொதப்பி வருவது இந்திய அணிக்கு பந்துவீச்சுக்கான பயிற்சியாளர் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வியையே எழுப்புகிறது. 

இந்திய அணியின் சொதப்பல் கிரவுண்ட் ஃபீல்டிங்:

image

பந்துவீச்சாளருக்கான பயிற்சியாளர் தான் இல்லை என்று யோசித்தால், இந்திய அணியின் ஃபீல்டிங் கோச்சும் இருக்கிறாரா இல்லையா என்றே தெரியவில்லை. ஒருவேளை போங்கடா நீங்களும் உங்க ஃபீல்டிங்கும் என்று வடிவேலு காமெடி சுடலை கேரக்டர் மாதிரி வேலையே வேண்டாமென்று சென்றுவிட்டாரா என்று தெரியவில்லை. ”கேட்ச்சஸ் வின்ஸ் த மேட்ச்சஸ்” என்ற ஒரு வாக்கியத்தை இந்த இந்திய அணிவீரர்கள் இதற்கு முன்னர் கேட்டிருக்கிறார்களா இல்லையா, இல்லை மேட்ச்சுக்கு முன்னர் செய்ய வேண்டிய கேட்சிங் பயிற்சிகளை மறந்து போய் களத்தில் செய்து கொண்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை. இப்படியே போனால் பீல்டிங் செய்வதற்காகவே கூடுதலாக 11 சப்ஸ்டியூட் வீரர்களை நியமிக்க வேண்டியிருக்கும் போல.. அந்தளவிற்கு மோசமான கிரவுண்ட் பீல்டிங்கை வெளிக்காட்டி வருகிறது இந்திய அணி.

முகமது ஷமி, பும்ரா ஆடும் அணியில் இல்லாமல் இருப்பது:

image

ஐபிஎல் என்ற ஒன்று வந்ததிலிருந்து அதில் பங்கேற்கும் மற்ற நாட்டு வீரர்கள் ஐபிஎல்லில் சரியாக விளையாடாமல் அவரவர் அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டி வருகிறார்கள். ஆனால், இந்திய அணி வீரர்கள் மட்டும் தங்களுடைய ஃபிரான்சைஸ் அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டிவிட்டு இந்திய அணி என வரும்போது மிகவும் மோசமாக சொதப்பி வருகின்றனர். அப்படி இருக்கும் போது அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்களை, பல்வேறு உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களுக்கு கடினமான சவாலாக இருப்பவர்களை வெளியில் வைத்துவிட்டு அனுபவமில்லாத வீரர்களை எடுத்து செல்வது எந்தவிதமான அனுகுமுறை என்று தெரியவில்லை.

ஐபிஎல் என எடுத்துகொண்டாலும் கூட இதுவரை 5 ரன்கள் இலக்கை டிஃபண்ட் செய்த வீரர்கள் பும்ரா மற்றும் ஷமி இருவர் மட்டும் தான். அதுவும் அதிரடி வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸலை களத்தில் நிற்கும் போது 5 ரன்களை டிஃப்ண்ட் செய்திருந்தார். மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாகவும் இருந்தது ஷமி தான். மேலும் தற்போது அணியில் இடம் பிடித்திருப்பவர்களில் பும்ராவை தவிற ஒருவரும் 140 கிமீ வேகத்தில் வீசக்கூடியவர்கள் யாரும் இல்லை. வேகம் அதிகம் இல்லாத காரணத்தாலும், பந்துவீச்சில் வேரியேசன்கள் இல்லாத காரணத்தாலும் தான் இந்திய அணி தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் ஷமி மற்றும் பும்ராவை உடனடியாக அணிக்குள் சேர்க்க வேண்டியது முக்கியமானதாகவே இருக்கிறது.

இதெல்லாம் விட ஒரு இந்திய அணிபெறும் ஒவ்வொரு தோல்வியும் அணிக்குள் ஒருவிதமான எதிர்மறை உணர்வுகளை ஏற்படுத்தும். பாசிட்டிவ் வைப்ரேஷன் உடன் ஒரு அணியை உலகக் கோப்பை தொடருக்கு அழைத்துச் செல்வது முக்கியமான ஒன்று. அதனால், அடுத்து வரும் போட்டிகளில் தவறுகளை சரி செய்து இந்திய அணி வெற்றியை பதிவு செய்ய வேண்டும்.

வேங்கையன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.