திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி தொடக்கவிழா உட்பட கடந்த சில நாள்களாக நடந்த அரசு விழாக்கள் எதிலும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொள்ளவில்லையாம். கட்சிக்காரர்கள் விசாரித்தால், “அமைச்சருக்கு உடல்நிலை சரியில்லை” என்று காரணம் சொல்லப்படுகிறதாம். உண்மையில், அமலாக்கத்துறை அனுப்பிய நோட்டீஸ் தந்த கவலையால்தான் அமைச்சர் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

அனிதா ராதாகிருஷ்ணன்

வடமாநிலங்களில் அமலாக்கத்துறை அடித்து ஆடுவதால், அதேபோல நம்மையும் ‘செய்து’விடுவார்களோ என்று அமைச்சர் விரக்தியில் இருப்பதாகச் சொல்கிறார்கள் உடன்பிறப்புக்கள்.

கட்சி வலுவாக இருக்கும் மண்டலம் என்பதால், தமிழ்நாடு பா.ஜ.க-வில் கொங்கு மண்டல நிர்வாகிகளின் ஆதிக்கம் தூக்கலாக இருப்பது வழக்கம். மாநிலத் தலைவர் அண்ணாமலை, டெல்லியில் உச்சபட்ச அதிகாரம்கொண்ட கட்சி மேல்மட்டக்குழுவான ‘பார்லிமென்ட்டரி போர்டி’ல் வானதி சீனிவாசன் என்று பலர் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார்கள். ‘இப்படி நானும் ஒருநாள் பெரிய பதவிக்குப் போவேன்’ என்று சொல்லித்திரியும் கொங்கு மண்டல பெண் நிர்வாகியின் அரசியலைச் சமாளிக்க முடியாமல் சக நிர்வாகிகள் திக்கித் திணறுகிறார்கள். இத்தனைக்கும் சமீபத்தில் தி.மு.க-வில் இணைந்த மாநில நிர்வாகி ஒருவர் மூலம்தான் இவர் கட்சியிலேயே இணைந்தாராம். குறுகியகாலத்திலேயே மாநிலப் பதவி வாங்கியவர், இப்போது மாவட்டத்திலும் பவர்ஃபுல்லான பதவியை வாங்கிவிட்டார். அடுத்து வானதி சீனிவாசன் விட்டுச்சென்ற பதவியைப் பிடிப்பதே அம்மணியின் இலக்காம்.

திருநள்ளாறு தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ சிவா

‘புதுச்சேரி சட்டமன்றத்தில் பி.ஜே.பி-க்கு ஆதரவு தருகிற காரணத்தால், சுயேச்சை எம்.எல்.ஏ-க்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் தர மறுக்கிறார் முதல்வர்’ என்ற குற்றச்சாட்டு எம்.எல்.ஏ-க்கள் மத்தியில் புகைந்துகொண்டிருக்கிறது. ஆனால், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ-வான சிவா, ஆளும் என்.ஆர்.காங்கிரஸுக்குத்தான் ஆதரவாக இருக்கிறார். “முதல்வருக்கு முழு ஆதரவு தருகிற என் தொகுதியிலும்தான் சட்டமன்ற அலுவலகம் இல்லை. கோயில்களிலும், குளக்கரைகளிலும் தொகுதி மக்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. இதை எங்கு போய்ச் சொல்வது?” என்று சோகமாகச் சொல்கிறாராம் அவர்.

வெயில் மாநகராட்சியின் பெண் மேயர், சொந்தக் கட்சியினராலேயே பகிரங்கமாக மிரட்டப்பட்டு சிறுமைப்படுத்தப்பட்டது சர்ச்சையாகியிருக்கிறது. ஆகஸ்ட் 30-ம் தேதி மாமன்றக் கூட்டம் நடந்தபோது, துணை மேயரும், ஒரு மண்டலக்குழுத் தலைவரும் சில தி.மு.க கவுன்சிலர்களுடன் சேர்ந்துகொண்டு மேயரை ஒருமையில் பேசி அவமதித்தார்களாம். துணை மேயர் ஒரு படி மேலே போய், மேயரை அரங்கிலிருந்து வெளியேற்றிவிட்டு அவையை நடத்த முயன்றாராம். அவரின் இந்த அடாவடிக்கெல்லாம் காரணம், சீனியர் அமைச்சரின் வாரிசு கொடுக்கும் தைரியம்தான் என்கிறார்கள் மாவட்ட உடன்பிறப்புகள்.

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளத்தில், துர்கா ஸ்டாலினின் குடும்பக் குலதெய்வமான அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைந்திருக்கிறது. இந்தக் கோயில் திருப்பணியை துர்கா ஸ்டாலின் தொடங்கிவைத்ததிலிருந்து, தி.மு.க மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டது அந்தக் கோயில். கிரானைட் தளத்துக்கான செலவுகள் முழுவதையும் தி.மு.க அமைச்சர் ஒருவர் ஏற்றுக்கொள்ள, புதிதாக ராஜ்ய சபா எம்.பி-யான ஒருவரோ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சில லகரங்களை வாரி வழங்கியிருக்கிறாராம்.

துர்கா ஸ்டாலின்

மேடத்திடம் நற்பெயர் எடுப்பதற்காக தி.மு.க பிரபலங்கள் போட்டி போட்டுக்கொண்டு வழங்கும் நிதியால் புதுப்பொலிவு பெற்றிருக்கும் இந்தக் கோயிலுக்கு செப்டம்பர் 5-ல் கும்பாபிஷேகமும் நடைபெறவிருக்கிறது. அதற்கும் நன்கொடைகளை வாரி வழங்கி ‘அம்பாளின்’ அருளாசியைப் பெற ஆவலாக இருக்கிறார்களாம் உடன்பிறப்புகள்!

முதல்வரான பிறகு மு.க.ஸ்டாலின் முதன்முதலாக அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு இப்போதுதான் வரவிருக்கிறார். செப்டம்பர் 7, 8-ம் தேதி என்று முதலில் முடிவுசெய்யப்பட்டிருந்த நிலையில், ராகுலின் நடைப்பயண நிகழ்ச்சியால் முதல்வரின் வருகை தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் முதன்முறையாக வருகைதரும் ஸ்டாலினை அசத்திவிட வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, இன்றைய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தரப்பினரிடையே கடும் போட்டி நிலவுகிறது.

ஆ.ராசா

வரவேற்பு தொடங்கி நிகழ்ச்சி ஏற்பாடுகள் வரையில் ஒவ்வொன்றிலும் முதல்வரை ஈர்த்துவிட வேண்டுமென்று பார்த்துப் பார்த்து வேலை செய்கிறார்கள் அவர்கள். “ஆ.ராசாவைவிட ஏற்பாடுகளைச் சிறப்பாக நடத்தினால் உங்களுக்கு இனி எல்லாமே சிறப்புதான்” என்று சில சீனியர் அமைச்சர்கள் வேறு தூபம் போட்டிருப்பதால், பிரமாண்டம் காட்டத் தயாராகிறாராம் அமைச்சர் சிவசங்கர்.

குளுகுளு மலை மாவட்டத்தில் கவர்ன்மென்ட் வேலை பார்ப்பது பனிஷ்மென்ட் டூட்டிக்குச் சமமானது எனப் புலம்பும் அதிகாரிகள், டிரான்ஸ்ஃபர் வாங்கி ஓட வரிசையில் காத்துக் கிடக்கிறார்களாம். இதைச் சாதகமாக்கிக்கொண்ட ஆளுங்கட்சி மாவட்டச் செயலாளர், ‘இங்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிக் கொடுக்கப்படும்’ என்று போர்டு வைக்காதது ஒன்றுதான் குறையாம். சீனியர் நிர்வாகி என்ற முறையில் பல அமைச்சர்களுடன் நட்பில் இருப்பதால், பிட் நோட்டீஸ் கொடுப்பதுபோல, ஒவ்வொரு துறைக்கும் லெட்டர் பேடில் டிரான்ஸ்ஃபர் சிபாரிசுக் கடிதத்தை அனுப்பிவருகிறாராம் மா.செ. டிரான்ஸ்ஃபருக்கு ஸ்டார்ட்டிங் ரேட் இரண்டு லட்டுகள்தான் என்று சொல்லியே கல்லாகட்டும் அவர்மீது, உச்சகட்ட கடுப்பில் இருக்கிறாராம் உள்ளூர் அமைச்சர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.