கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியாமூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் படித்த மாணவி மரண விவகாரத்தில், அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். அந்த புகாரின் அடிப்படையில், சின்னசேலம் போலீஸார், தனியார் பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர், வேதியல் ஆசிரியர், கணித ஆசிரியர் ஆகிய ஐந்து பேரைக் கைதுசெய்த, சிறையில் அடைத்தனர். அதையடுத்து, முதல்வர் உத்தரவின் பேரில் இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில், பள்ளியின் தாளாளார், செயலாளர் உட்பட 5 பேரும், ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி கலவரம்

அவர்களின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் அவர்கள் ஐந்து பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும், விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தது.

இந்த சூழலில், வழக்கின் தீர்ப்பு விவரங்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன. அந்தத் தீர்ப்பில், “ஜிப்மர் மருத்துவக் குழுவினரின் ஆய்வறிக்கையின்படி, அந்த மாணவி கொலையோ, பாலியல் வன்கொடுமையோ செய்யப்படவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் மதுரையிலும், 2 ஆசிரியைகள் சேலத்திலும் தங்கியிருக்க வேண்டும். மாணவ-மாணவிகளை படிக்க அறிவுறுத்துவது ஆசிரியர் பணியின் ஒரு அங்கம். மாணவியை படிக்க அறிவுறுத்தியதற்காக ஆசிரியர்கள் சிறைவாசம் அனுபவிப்பது துரதிஷ்டவசமானது. படிப்பில் சிக்கல்களைச் சந்தித்ததால் மாணவி தற்கொலை செய்துகொண்டது வருத்தமளிக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றம்

ஆசிரியர்கள் மாணவியை தற்கொலைக்குத் தூண்டியதாக எந்த ஆதாரங்களும் இல்லை. பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டிய துரதிஷ்டமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். உயிரிழந்த மாணவியின் தற்கொலைக் குறிப்பில்கூட, ஆசிரியர்கள் தற்கொலைக்கு தூண்டியதாக எந்த ஆதாரமும் இல்லை. எனவே , மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக மனுதாரர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு பொருந்தாது. எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது” என சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.