சுதந்திரம் கிடைத்ததில் இருந்து இன்று வரை வெளியிடப்பட்டுள்ள 4,000 தபால் தலைகளை சேகரித்து வைத்திருக்கிறார் விழுப்புரம் பள்ளி ஆசிரியர் ஒருவர். மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆர்வத்தை தூண்டவும் நீண்ட நாட்களாக இந்த பணியை செய்து வருவதாக பெருமிதம் கொள்கிறார் அவர்.

தகவல் பரிமாற்றம் என்று சொன்னாலே அது கடிதப் போக்குவரத்தாக இருந்த காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி இப்போது அது எங்கே என்று தேடும் நிலைக்கு வந்துவிட்டோம். இப்படி கடிதப் போக்குவரத்து இருந்த காலங்களில் கடிதங்களை கொண்டு செல்ல அரசாங்கத்திற்கு ஒரு தொகை செலுத்தவேண்டி இருந்தது. ஒவ்வொரு கடிதத்திற்கும் அதன் எடைக்கு ஏற்ப, தன்மைக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்பட்டது, அந்த விலையை கடிதம் அனுப்புபவரும், பெறுகிறவரும் தெரிந்துகொள்ளும் விதமாக அந்த கடிதத்தின் மீது தபால் தலைகள் ஒட்டப்பட்டு கடிதம் கொண்டு செல்லப்படுவது வழக்கமாய் இருந்தது.

image

அப்படி கடிதங்களில் ஒட்டப்படும் தபால் தலைகள் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த இயற்கை காட்சிகளாகவோ, தேசப்பற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்களின் புகைப்படங்களாகவோ, விடுதலைப் போராட்டத்தில் தங்களை முன்னிலைப்படுத்தி கொண்டவர்களாகவோ, இலக்கியம், சுய தொழில் உள்ளிட்ட தளங்களில் பணியாற்றிய தலைவர்களின் புகைப்படங்களாகவோ இருந்தது.

image

தற்போது தபால் தலைகளை காண்பது மிகவும் அரிதான ஒன்றாக இருக்கிறது. தபால் தலைகளை மட்டுமல்ல; தபால்களை கூட பார்ப்பது அரிதான ஒன்றாக இருக்கிறது. அறிவியல் உலகில் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என தகவல் பரிமாற்றங்கள் தற்போது துரிதமாகிவிட்டது. அப்படி கடிதப் போக்குவரத்திற்கு பயன்பட்ட தபால் தலைகளை ஒவ்வொன்றாக சேர்த்து வைக்கிற ஆர்வத்தை ஒருவர் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார். அவர் வேறு யாரும் அல்ல; விழுப்புரத்தில் அரசு உதவி பெறும் ஒரு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் விஜயபாஸ்கர் தான்.

image

பள்ளி ஆசிரியர்களுக்கு பல வேலைகள் இருந்தாலும் இதுபோன்ற கூடுதல் ஆர்வங்களும் சில ஆசிரியர்களுக்கு இருந்து வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை வெளியிடப்பட்ட சுமார் 4000 தபால் தலைகளை சேகரித்து வைத்திருக்கிறார் ஆசிரியர் விஜயபாஸ்கர். இந்த தபால் தலைகளை காட்டி மாணவர்களிடையே கல்வி மீது அக்கறை கொள்ள செய்வதும் ஒரு ஆர்வத்தை தூண்டுவதும் அடையாளங்களை சேகரிக்கும் எண்ணத்தை உருவாக்குவதும் தான் தன்னுடைய வேலை என்கிறார் விஜய் பாஸ்கர்.

image

தேசத் தலைவர்கள், இயற்கை வளங்கள், தொழில் வளங்கள், விளையாட்டுகள், தமிழ் அறிஞர்கள், அறிவியல் ஆய்வாளர்கள் போன்ற தவிர்க்க முடியாத சில தபால் தலைகளை சேகரித்து மாணவர்களிடையே ஆர்வத்தை தூண்டி வருகிறார் விஜயபாஸ்கர். இப்படி சேகரிக்கப்படும் தபால் தலைகளை பள்ளி விழாக்களில் காட்சிப்படுத்தி மாணவர்களுக்கும் பள்ளிக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைத்து வருவதாக அவர் தெரிவிக்கிறார். தபால் தலைகளை சேகரிக்க நாட்டின் பல்வேறு மூளை முடுக்குகளில் எல்லாம் தொடர்பினை ஏற்படுத்தி ஒவ்வொருவரிடமாக பேசி தபால் தலைகளை சேகரித்து வைத்துள்ளார்.

image

விஜயபாஸ்கரின் இந்த செயல் விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பதாகவே இருந்து வருகிறது. இதுபற்றி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனை சந்தித்த ஆசிரியர் தபால் தலைகளை தான் சேகரித்து வைத்திருப்பது பற்றி விளக்கி கூறியுள்ளார். இதுபோன்று மாணவர்களிடையே தன்னம்பிக்கையை விதைக்கக்கூடிய பணிகளை தொடர்ந்து செய்யுங்கள் என ஆட்சியர் மோகன் அவரை ஊக்குவித்துள்ளார்.

– ஜோதி நரசிம்மன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.