தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள விவகாரம் தொடர்பான வழக்கில் நீர் நிலையை ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால் மாற்று இடம் வழங்கும் அரசாணை சாஸ்த்ராவுக்கு பொருந்தாது எனத் தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நீர் நிலைகளில் அமைந்திருப்பதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்யவும் அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இந்த நிலையில் சாஸ்த்ராவுக்கு எதிரான வழக்கில் அழுத்தமான வாதங்களை அரசு எடுத்து வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது.

ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடம்

இது குறித்து சமூக ஆர்வலரான வழக்கறிஞர் ஜீவக்குமார் பேசும் போதும், “தஞ்சாவூர்-திருச்சி சாலையில் உள்ள திருமலைச்சமுத்திரத்தில் புகழ்பெற்ற சாஸ்த்ரா பல்கலைக் கழகம் செயல்பட்டு வருகிறது. இதன் வேந்தராக சேதுராமன், துணை வேந்தராக அவரின் மகன் வைத்யசுப்ரமணியன் பொறுப்பு வகித்து வருகின்றனர். 1985-ல் பல்கலைக் கழகத்துக்கு அருகிலிருந்த அரசு நிலத்தை திறந்தவெளி சிறைச்சாலை அமைப்பதற்காக அரசு ஒதுக்கியது.

1986-ல் சிறைச்சாலைக்காக ஒதுக்கப்பட்ட இடம் சுமார் 31 ஏக்கரை சாஸ்த்ரா நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்தது. அதை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என வருவாய்த்துறை அப்போதே சாஸ்த்ரா நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. பின்னர், ஆக்கிரமிப்பு நிலத்தில் ஐந்து விடுதிகள், இரண்டு நூலகங்கள், சட்டக்கல்லூரி மற்றும் வகுப்பறைகள், அலுவலகங்கள் என பல கட்டடங்களை கட்டியதுடன் தற்போது வரை அவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர்.

சாஸ்த்ரா பல்கலைக்கழகம்

சாஸ்த்ரா ஆக்கிரமிப்பு செய்த இடத்தை அரசு மீட்க வேண்டும் என சி.பி.ஐ, சி.பி.எம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடந்த 30 வருடங்களாகப் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் சாஸ்தரா நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. அதன் தீர்ப்பும் அவர்களுக்கு எதிராகவே அமைந்தது.

மேலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. கடந்த அ.தி.மு.க ஆட்சியிலும், தற்போதைய தி.மு.க அரசும் ஆக்கிரமிப்பு இடத்தை மீட்பதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. ஆக்கிரமிப்பு இடம் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவில், நில சீர்திருத்த இயக்குனர் ஜெயந்தி ஐ.ஏ.எஸ் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.

சிறைச்சாலைக்கு ஒதுக்கப்பட்ட இடம்

இதையடுத்து ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்ட கட்டடங்களை இடித்து காலி செய்வதுடன் குறிப்பிட்ட இடத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தவறும் பட்சத்தில் அரசே ஆக்கிரமிப்பை அகற்றி அதற்கான செலவை பல்கலைக்கழக நிர்வாகத்திடமிருந்து பெறப்படும் என குறிப்பிட்டு சாஸ்த்ரா விவகாரத்தில் வேகம் காட்டியது அரசு.

ஆனால், அதன் பிறகு இடத்தை மீட்பதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. அத்துடன் சாஸ்த்ரா நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்துக்குப் பதிலாக மாற்று இடம் தருவதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தமிழக அரசின் வழக்கறிஞர்கள் இந்த வழக்கை முறையாக எதிர்கொள்ளவில்லை.

சாஸ்த்ரா பல்கலைக்கழகம்

இந்த நிலையில் தி.மு.க அரசு வருவாய்த்துறையின் விதிமுறைகளில் திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தது. வருவாய்த்துறை நிலை ஆணைகள் பிரிவு 26ஏ வின் படி நிலப்பரிவர்த்தனைகளில் பிரச்னை இல்லாமல் சுமூகமாக முடித்துக்கொள்வதற்காக ஆக்கிரமிப்பு இடத்தில் நடத்தப்படும் கல்வி நிலையங்கள் அரசு இடத்தை எடுத்துக்கொண்டு மாற்று இடம் தந்தால் அதை அரசு ஏற்றுக்கொள்ளும் என திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இதைத் தொடர்ந்து மாற்று இடம் வழங்கும் அரசாணை சாஸ்த்ராவுக்கு பொருந்தாது எனத் தமிழக அரசு நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்திருப்பது வரவேற்கக் கூடியது என்றாலும், அரசு இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் வலுவான வாதங்களை எடுத்து வைக்க தவறியிருக்கிறது. நீர்நிலையில் கட்டப்பட்டுள்ளதாக மட்டுமே அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டு வருகிறது.

ஜீவக்குமார்

சிறைச்சாலைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை ஆக்கிரமிப்பு செய்து 30 வருடங்களாகப் பயன்படுத்தி லாபம் ஈட்டி வருகின்றனர். இவற்றையெல்லாம் அழுத்தமாக முன்னெடுத்து வைக்கவில்லை. எதிர்காலத்தில் சாஸ்த்ரா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு எத்தனையோ கட்டடங்கள் நீர்நிலைகளில் அமைந்துள்ளன என்பதை மேற்கோள் காட்டி தங்களுக்கு சாதகமான தீர்ப்பை பெறக்கூடிய சூழல் ஏற்படலாம். அதற்கு உதவி செய்யும் வகையில் அரசின் செயல்பாடு இருக்கிறதோ என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு இடத்தைக் கையகப்படுத்த வேண்டும் என நீதிமன்றங்கள் உத்தரவிட்டிருந்த நிலையிலும், அரசு அதைச் செய்யவில்லை. குறிப்பிட்ட இடத்தைச் சுற்றி வேலி அமைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்தச் சூழலில் வழக்கு முடியும் வரை ஆக்கிரமிப்பு கட்டடம் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது மட்டுமே போராட்டக் காரர்களான எங்களுக்கு ஆறுதலைத் தருகிறது.

சிறைச்சாலைக்கு ஒதுக்கப்பட்ட இடம்

தமிழக அரசு வருவாய்த்துறையில் நில பரிவர்த்தனையில் கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தில் சாஸ்த்ரா நேரடியாகப் பயன் பெறுவதற்கான சூழல் ஏற்படும் என்பதால், அந்தச் சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். நீர்நிலையில் அமைந்து ள்ளதற்கான வலுவான ஆவணங்களை காலம் தாழ்த்தாமல் விரைந்து சமர்ப்பிக்க வேண்டும். ஆக்கிரமிப்பு இடத்தை மீட்பதற்கான நடவடிக்கையில் வேகம் காட்ட வேண்டும். இல்லை என்றால் அடுத்தகட்ட போராட்டத்தை நடத்துவதற்காக ஆயத்தமாக இருக்கிறோம். இடம் மீட்கப்படும் வரும் நாங்கள் ஓயப்போவதில்லை” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.