கோவை மாவட்ட மதிமுக அலுவலகத்தில் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய வைகோ, “மதிமுக புத்துணர்ச்சி பெற்று, மீண்டும் தமிழக அரசியல் திசையை தீர்மானிக்கும் சக்தியாக வளர்ந்து வருகிறது. மேலும் கொரோனாவுக்கு பிறகான எனது சுற்று பயணத்தை மதிமுக-வின் ஜிப்ரால்டர் கோட்டையான கொங்கு மண்டலத்தில் இருந்து தொடங்குகிறேன். மதிமுக திமுகவுடன் லட்சிய ரீதியாக உடன்பாடு கொண்டுள்ளோம். நாங்கள் இணைந்து சனாதனம் மற்றும் ஏகாதிப்பத்திய பாசிச சிந்தனைகளை கொண்ட காட்சிகளை வீழ்த்துவோம். திராவிட மாடல் ஆட்சி நடத்தும் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினின் ஆட்சி கொள்கை மற்றும் லட்சிய ரீதியான ஆட்சி. எங்களிடையே நல்ல புரிதலும், ஒன்றிணைப்பும், தோழமையும் இருக்கிறது. அந்த வகையில் நாங்கள் வெற்றி பெற்று எங்களது பயணத்தை தொடர்வோம்” என்றும் கூறினார்.

அவரிடம் ஜி.எஸ்.டி விலை உயர்வு குறித்து கேட்டபோது, “ஜி.எஸ்.டி-யால் பொதுமக்கள் மிகப்பெரிய பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். உணவு பண்டங்களுக்குக்கூட ஜி.எஸ்.டி விதித்திருக்கிறார்கள். ஜி.எஸ்.டியால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். அம்பானிகளும், அதானிகளும் அல்ல. இந்த விலை உயர்வால் கூலித்தொழிலாளர்களும், மாத சம்பளம் வாங்குபவர்களும் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்” என்றார்
மேலும் பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலை உயர்வை குறித்து கேட்டபோது, “இந்த விலை உயர்வால் அனைத்து பொருள்களின் விலையும் உயர்கிறது. இதனால் அடித்தட்டு மக்கள் பாதிப்படைகின்றனர். மேலும் இந்த விலை உயர்வு, மத்திய மோடி அரசின் மீது மக்களுக்கு வெறுப்பை உண்டாக்குகிறது என்பதை கண்கூட காண்கிறோம்.” என்றார்
`எதிர்கட்சிகளையும் பேசவிட்டால் தான் ஆரோக்கியமான நாடாளுமன்றம் உருவாகும்’ என்ற வெங்கைய நாயுடு கூறிய கருத்தை பற்றி கேட்டபோது, “அவரின் கருத்து சரிதான். ஆளுங்கட்சி கூச்சல் போட்டு எதிர்கட்சிகளை பேசவிடாததால் தான் எதிர்ப்பு உருவாகுகிறது. இந்த கருத்தை அவர் நடுநிலையோடு கூறி இருக்கிறார். இதை ஆளும்கட்சி பின்பற்றினால் நல்லது” என்றார்.

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மூன்று நாள்கள் தேசிய கொடி ஏற்ற சொல்லி இருப்பது பற்றி கேட்டபோது, “தேசிய கொடியைத்தானே ஏற்ற சொல்லி இருக்கிறார்கள், கட்சி கொடியை அல்லவே. 75 ஆண்டுகள் சுதந்திர தினத்தை ஞாபகப்படுத்தும் முயற்சியாக தேசிய கொடியை ஏற்றச்சொல்லி இருப்பது வரவேற்கபட வேண்டிய விஷயம்” என்றார்.
ஆளுநருடனான நடிகர் ரஜினிகாந்தின் சந்திப்பை பற்றி கேட்டபோது, “ரஜினிகாந்த சொல்வது அவருக்கும் புரியவில்லை; யாருக்கும் புரியவில்லை. ஒரு நாள் அரசியலுக்கு வருகிறேன் என்கிறார். மறுநாள் உறுப்பினரை சேர்க்க சொல்லிவிட்டேன் என்கிறார். பிறகு அனைவரையும் வர சொல்கிறார். அனைவரும் வந்தபிறகு நான் அரசியலுக்கு வரவில்லை என்று பால்கனியில் இருந்து கையசைத்து சென்று விடுகிறார். அதனால் அவரை சீரியசாக எடுத்துக்க வேண்டாம்” என்றார்.