முல்லைப் பெரியாறு அணை குறித்து அவதூறு பரப்பும் வகையில் கேரளாவின் ஒரு குழுவினரால் வெளியிடப்பட்டுள்ள அனிமேஷன் பாடல் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியை தாண்டும்போது கேரளாவில் சர்ச்சைகளும், முல்லைப் பெரியாறு அணை குறித்த விவாதங்கள் எழுவதும் பேசுபொருள் ஆவதும் வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் தற்போது முல்லைப் பெரியாறு அணை நிரம்பி 139 அடியை நெருங்கியுள்ள நிலையில் கேரளாவைச் சேர்ந்த ஒரு குழுவினர் முல்லைப் பெரியாறு அணை குறித்து அவதூறு பரப்பும் வகையில் அனிமேஷன் பாடல் ஒன்றை ”கெட்டு” என்னும் தலைப்பில் தயாரித்து வெளியிட்டுள்ளனர்.

“கெட்டு ” என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்தப் பாடலை கேரளாவைச் சேர்ந்த அஸ்லின் என்பவர் இயக்கி இசையமைத்து அனிமேஷன் செய்துள்ளார். ராஜன் சோமசுந்தரம் என்பவர் பாடலை எழுதி பாடியுள்ளார். “SASA MEDIA HUB” எனும் நிறுவனம் பாடலை தயாரித்து வெளியிட்டுள்ளது.

image

இடி மின்னலோடு துவங்கும் இந்தப் பாடல் செங்கல்பொடி, சர்க்கரை, முட்டை மற்றும் வெல்லம் சேர்த்து, சுண்ணாம்பு, கருங்கல் தேய்த்து வைத்து கட்டிய அணைக்கட்டு என்றும் பிள்ளையார் பெரியார் சேர்த்து வைத்து கட்டிய முல்லைப் பெரியாறு என்றும் துவங்குகிறது. மேலும் முல்லைப் பெரியாறு அணையின் தூணில் ஏறி ஒருவர் வாசிப்பதுபோல அனிமேஷன் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. 50 ஆண்டுகளில் காலாவதி என்று சொல்லிவிட்டு அது முடிந்தும் கூட 999 ஆண்டுகள் குத்தகையை வைத்துக்கொண்டுள்ளது 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை என்று அனிமேஷன் நீள்கிறது.

image

மேலும் கட்டப்பட்டதோ கேரள மக்கள் பயந்து வாழட்டும், தமிழக மக்கள் தண்ணீர் குடிக்கட்டும் என்ற நோக்கில் என்று பாடலில் குறிப்பிடப்படுகிறது. காலத்திற்கு ஏற்ப கோலம் மாற வேண்டும் என்ற வேண்டுகோளும் வைக்கப்படுகிறது. முடிவில் ”அணைக்கட்டு உடையட்டும் எல்லாம் தகர்ந்து போகட்டும்” “கடைசியில் எல்லோரும் காண்போம் கடலின் அடித்தட்டை” என்று கூறி ” BREAK THE SILENCE AND SAVE YOURSELF LET THEM DRINK AND LET US NOT SINK” என்ற முழக்கங்களோடு பாடல் முடிகிறது.

தொடர்ந்து பாடல் முடிந்தும் ஒரு அறிவிப்பு வருகிறது. அதில் பெரியாரின் இரு கரைகளிலும் வசிப்போர் ஜாக்கிரதை கடைப்பிடிக்க வேண்டும். கவலை அடைய வேண்டாம் ஜாக்கிரதை மட்டும் கடைப்பிடித்தால் போதும் என்ற நாசுக்கான ஆறுதல் அறிவிப்போடு மூன்று நிமிடம் 26 செகண்ட் நீளமுள்ள அந்த பாடல் முடிவடைகிறது.

image

இந்த பாடலில் அணைக்கு எதிரான அவதூறான கருத்துகள் இடம் பெற்றுள்ளதோடு மட்டுமில்லாமல் அணையின் நீரால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து பச்சிளம் குழந்தை தத்தளிப்பது போன்றும், மனிதர்கள், காட்டு விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டும் விதத்தில் கற்பனையாக சித்தரிக்கப்பட்ட ஏராளமான கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த பாடல் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

-ரமேஷ் கண்ணன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.