‘இந்தியாவில் மட்டும் இல்ல’… வெளிநாடுகளையும் மிரள வைக்கும் ‘விக்ரம்’

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம் இந்தியாவைத் தாண்டி, வெளிநாடுகளிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருவது படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பெரும் இழப்பை சந்தித்த கோலிவுட் திரையுலகத்தில், அடுத்து அடுத்து முன்னணி நடிகர்களின் படங்களாக வெளியாகி வருகிறது. இதில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாஸ்டர்’, நெல்சனின் ‘டாக்டர்’, விக்னேஷ் சிவனின் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, சிபி சக்ரவர்த்தியின் ‘டான்’ ஆகியப் படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றன. இதேபோல் சிறுத்தை சிவாவின் ‘அண்ணாத்த’, ஹெச். வினோத்தின் ‘வலிமை’, நெல்சனின் ‘பீஸ்ட்’ ஆகியப் படங்கள் நல்ல வசூலையும் ஈட்டி இருந்தாலும் எதிர்மறை விமர்சனங்கள் பெற்றது.

image

இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் 26 நாட்களை கடந்தும் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனால் ஷங்கரின் ‘2.O’ படத்திற்குப் பிறகு, கோலிவுட்டில் ‘விக்ரம்’ படம் தான் வசூல் வேட்டையாடி வருகிறது. திரையரங்குகளில் இன்றும் வரவேற்பு கிடைத்து வரும்நிலையில், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரக நாடுகள், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில், கோலிவுட்டிலே அதிக வசூலை ஈட்டியப் படமாக ‘விக்ரம்’ படம் சாதனை படைத்துள்ளது.

image

குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் 24 நாட்களில் 24 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. மேலும் கேரளாவிலும் தொடர்ந்து வசூல் சாதனை செய்து வருகிறது ‘விக்ரம்’ படம். இதற்கிடையில், ஜூலை 8-ம் தேதி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாவதால், ஓடிடி தளத்திலும் அமோக வரவேற்பு பெறும் என்று படக்குழுவினர் எதிர்பார்த்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM