`வலியது பிழைக்கும்’ என்பது மாறி `வணிகமே பிழைக்கும்’ என்பதே தற்சமயம் கிரிக்கெட்டில் புதுமொழி. அதை நிருபிக்கும் வகையில் சர்வதேச கிரிக்கெட்டுக்கே சவால் விடுவது போன்ற ஒரு தகவலினை பிசிசிஐ பகிர்ந்துள்ளது.

இந்தியக் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்தச் செய்தி கொண்டாடக் கூடிய ஒன்றாகத் தோன்றலாம். பிசிசிஐ, ஐசிசி-யையே அடக்கி ஆள்வதாக, புளகாங்கிதம் அடையச் செய்யலாம். ஆனால், கிரிக்கெட் ரசிகர் என்னும் கண்கொண்டு கவனித்தால் இது ஏற்படுத்தப் போகும் எதிர்மறைத் தாக்கங்களில்தான் பலரது கவனமும் திரும்புகிறது.

ஜெய் ஷா – பிசிசிஐ

முதலில் பிசிசிஐயின் இந்த முன்னெடுப்புக்கு என்ன காரணம் என்று பார்ப்போம். ஐபிஎல்லுக்கு முன்பிருந்த ஆதரவில்லை, ரசிகர்களிடம் வரவேற்பும் குறைந்து வருகிறது. இரண்டு அணிகள் கூடுதலாக இணைந்துள்ள நிலையில் ரவுண்ட் ராபின் முறை மட்டுமே இழந்த செல்வாக்கை மீட்டுத் தரும் ஒரே வழி. அதிலும் ‘டபுள் ஹெட்டர்ஸ்’ எனப்படும் ஒரே நாளில் இரண்டு போட்டிகளை நடத்தும் முறையும் வேலைக்காகாது. ஏனெனில், பிற்பகல் போட்டிகளை ரசிகர்கள் பொதுவாகவே பெரிதாக விரும்புவதில்லை. வணிக நோக்கிலும் அது கைகளைச் சுடுவதாகவே அமைந்துள்ளது. அதேபோல் தொடரின் நடுவில் வரும், விலகும் ஓவர்சீஸ் வீரர்களும் சுவாரஸ்யத்தையும் அணிகளுக்கான ஸ்டார் வேல்யூவையும் தங்கள் கூடவே எடுத்துச் சென்று விடுகின்றனர். இதையெல்லாம் மனதில் நிறுத்தி கூட்டிக் கழித்துப் பார்த்து, பிசிசிஐ முன்வைத்திருக்கும் வியூகம்தான் இந்த இரண்டரை மாத ஐபிஎல் திருவிழாவும், அந்தச் சமயத்தில் எந்த சர்வதேச போட்டிகளும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வதுவும்!

அதாவது, ஒரே ஒரு நாடு சர்வதேச கிரிக்கெட்டின் கால்களை வருடத்தில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் நாள்கள் கட்டிப் போடப் போகும் நிகழ்வு. இது உலகக் கிரிக்கெட்டின் அழிவுக்கான ஆரம்பமா அல்லது புது மாற்றத்துக்கான முயற்சியா?

ஐபிஎல் ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் திரைமறைவில் தத்தளித்துக் கொண்டிருக்கும் இளம் வீரர்களின் மேல் வெளிச்சம் வீசுவதற்காகவும் சர்வதேச மேடைகளுக்காக அவர்களைத் தயார்படுத்துவதற்காகவும்தான். அது முழுமையாக நிறைவேறி விட்டதா, கடந்த சில ஆண்டுகளில் அப்படி எத்தனை வீரர்களை நாம் அடையாளம் கண்டோம், அதன் மூலமாக எத்தனை ஐசிசி கோப்பைகளை வாங்கி அடுக்கினோம் என்ற விவாதத்திற்குள் எல்லாம் செல்லாமல் ஓரளவு அந்த நோக்கம் நிறைவேறியது என்றேகூட கருத்தில் கொள்வோம். ஆம்! பல இளைஞர்களை ஐபிஎல் அடையாளம் காட்டியுள்ளதுதான். ஆனால், அதையும் மீறி ஒன்றிரண்டு பின்னடைவுகளும் இதனால் ஏற்படாமல் இல்லை.

சொந்த சோகங்களைத் தள்ளி வைத்து, உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக ஆடிய வீரரை நாம் பார்த்திருக்கிறோம், தலை வணங்கியிருக்கிறோம். ஆனால், தொடர்ந்து பல நாள்கள் ஐபிஎல் தொடரில் ஆடி, களைப்புற்று, சர்வதேசத் தொடரில் ஆடும் போது மட்டும் ஓய்வுக்குத் திரும்பும் வீரர்கள் எந்த வகையில் கிரிக்கெட்டிற்கு நியாயம் கற்பிக்கின்றனர்?! அடுத்த டி20 உலகக் கோப்பைக்கு இன்னமும் சில மாதங்களே எஞ்சியிருக்கும் நிலையில் ஒவ்வொரு தொடரும் முக்கியமானதே. அது எதிரிகளின் பலம், பலவீனத்தைக் கண்டறிய உதவும் களம். அதை மறந்து காலாண்டு, அரையாண்டுத் தேர்வெல்லாம் முக்கியமல்ல, நேரடியாக முழு ஆண்டுத் தேர்வை மட்டும் எழுதலாம் என்பது போலத்தான் இருக்கிறது இந்த அணுகுமுறையும்.

ரோஹித் & கோலி

ஐபிஎல் அனுகூலத்தால் சிலருக்கு ஓய்வு, இன்னும் சிலருக்குக் காயம் என ஏதோ ஒரு காரணத்தால் முக்கிய வீரர்கள் விலக, பெஞ்சில் உள்ள அடுத்தகட்ட வீரர்களுக்கான பயிற்சியாகவே இப்போது நடந்துவரும், நடக்கவிருக்கும் தொடர்கள் மாறியிருக்கின்றன. சரி, பயிற்சி செய்யும் இந்த வீரர்கள்தான் வரும் டி20 உலகக் கோப்பையில் ஆடப் போகிறார்களா என்று பார்த்தால் அதுவும் இல்லை. முக்கியப் பரிட்சை வரை ஆடும் பிளேயிங் லெவனிலும், வீரர்களின் பொஷிசனிலும் தெளிவின்றிதான் இந்தியா அணுக இருக்கிறது. ஒரே குறிப்பிட்ட வீரர்களைக் கொண்ட அணியாக, அதுவும் ஒருங்கிணைந்து ஒரே அணியாக உலகக் கோப்பைக்கான ரோட் மேப்புடன் ஆடினால் மட்டுமே கோப்பைக்கான கனவை நாம் காணலாம். மோசமான விளைவுகளைக் கண்ட கடந்த டி20 உலகக் கோப்பையில் இருந்துகூட பாடம் கற்காமல் அதே தவற்றைத்தான் இந்தியா திரும்பவும் செய்ய இருக்கிறது. உபயம்: ஐபிஎல்.

அப்படிப் பார்த்தால், ஐபிஎல் எந்த நன்மையும் பயக்கவில்லையா?

மேற்கிந்தியத் தீவுகள் போல் சொந்த கிரிக்கெட் வாரியத்தால் பாராமுகம் காட்டப்பட்டு சரியான ஊதியம் அளிக்கப்படாமல் சோதனைகளுக்கு உள்ளாகும் ஒருசில வீரர்களுக்கு இது விடிவெள்ளி எனக் கொண்டால் கூட, பாகிஸ்தான், ஐயர்லாந்து உள்ளிட்ட ஐபிஎல்லில் பங்கேற்காத நாடுகளுக்கு இந்த இரண்டரை மாதங்கள் ஆஃப் சீசன் போலத்தான் இருக்கும். அது அவர்களையும் முடக்கிப் போடும். ஏன், ஐபிஎல்லில் வீரர்கள் பங்கேற்கும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளின் ரசிகர்களுக்குக் கூட இந்தக் காரணத்தினால் சர்வதேசக் கிரிக்கெட் மறுக்கப்படுவது நியாயமான ஒன்றாக இருக்க முடியாது. உண்மையில், இது அந்நாட்டு ரசிகர்களையும் ஐபிஎல்லை கண்டிப்பாகப் பார்க்க வைக்கும் ரகசிய ராஜ தந்திரம்தான் என்றாலும், அது எந்த அளவு கிரிக்கெட்டின் வளர்ச்சிக்குக் கைகொடுக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

IPL

இந்தியா போலவே மற்ற கிரிக்கெட் வல்லரசுகளும் தங்கள் நாட்டில் நடத்தப்படும் டி20 லீக்குகளை பிரபலமாக்கி, இதே நடைமுறையைப் பின்பற்றினால் வருடம் முழுவதும் டி20 திருவிழாக்கள் மட்டுமே நடைபெறும். போதாக்குறைக்கு ஜெய் ஷா, Multiverse concept-ஆக முன்பு ஆடப்பட்ட சாம்பியன்ஸ் லீக் டி20 போல இந்திய ஐபிஎல் அணிகளை மற்ற நாட்டின் டி20 அணிகளுடனும் ஆடவைக்கவும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார்.

ஆக, இது இன்னமும் நீண்டு சிட்னி சிக்ஸர்ஸ் டூர் ஆஃப் சிஎஸ்கே, ஆர்சிபி – மும்பை இந்தியன்ஸ் பைலேட்டரல் சீரிஸ் என்பதுவரை சென்றால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. இவை எல்லாம் சேர்ந்து சர்வதேசக் கிரிக்கெட்டுக்கான காலத்தை நீர்த்துப் போகவே செய்யும். 2 1/2 மாதங்கள் ஐபிஎல், 9 1/2 மாதங்கள் சர்வதேசக் கிரிக்கெட் என்பது மாறி, ஒட்டுமொத்தமாக 8 மாதங்கள் வரை ஐபிஎல் உள்ளிட்ட டி20 லீக்குகள், ஒரு உலகக் கோப்பை, அதுபோக மிஞ்சியிருக்கும் இரண்டு மாதங்களில் வேண்டுமென்றால் நாடுகள் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொள்ளட்டும் என்றுதான் சென்று முடியும்.

ஆக மொத்தம் டி20 கிரிக்கெட், ஓர் அசகாய சூரனாக வடிவெடுத்து ராட்சத கரத்தால் உண்மையான கிரிக்கெட்டின் குரல்வளையை நெறிக்கப் போவதற்கான அச்சாரத்தைத்தான் பிசிசிஐ தொடங்கி வைக்கிறது. பெஸ்ட் கிரிக்கெட் எனப்படும் டெஸ்ட் கிரிக்கெட் கூட ஐந்து நாள்கள் நீண்டாலும், இறுதி இரண்டு நாள்களில் தான் ஒளித்து வைத்துள்ள ஏற்ற இறக்கங்களாலும், திருப்புமுனைகளாலும், கிரிக்கெட்டின் காதலர்களாலும் தப்பிப் பிழைக்கும். ஆனால், ஒருநாள் போட்டிகள்தான் இதனால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும்.

சமீபத்தில் ரவி சாஸ்திரி, டி20 போட்டிகள், லீக்குகளிலும், உலகக் கோப்பைகளிலும் மட்டுமே விளையாடப்பட வேண்டும், பைலேட்டரல் டி20 தொடர்கள் தேவையற்றவை எனக் கூறியிருந்தார். இதை அவர் டி20 கொண்டாட்டங்கள், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளை மென்று விழுங்கிவிடக்கூடாது என்ற பாசிட்டிவ் எண்ணத்தில் சொல்லியிருந்தாலும், இதனால் நாளடைவில் பைலேட்டரல் போட்டித் தொடர்களே காணாமல் போய், வெறும் டி20 லீக்குகள் மட்டுமே அதிகப்படியாக விளையாடுவது போல ஆகிவிடும். அதாவது ஒட்டுமொத்தமாக ஃப்ரான்ஸைஸ் கிரிக்கெட்டே முழுமையாக ஆதிக்கம் செலுத்துவதற்கான ஒரு பாதையாகத்தான் அவரின் யோசனை மாறும்.

ரவி சாஸ்திரி

ஆகாஷ் சோப்ரா, ரவி சாஸ்திரியின் கருத்துக்கு பதில் கருத்தாகச் சொல்லியிருக்கும் விஷயமும் இதைத்தான் அடிகோடிடுகிறது.

இந்நிலையில், ஐபிஎல் போட்டிகள் 94 வரை உயர்த்தப்படலாம் என்றும் ஜெய் ஷாவால் கூறப்பட்டுள்ளது. இன்னமும் ஒரு பார்வையாக ஐபிஎல் இரண்டு கட்டங்களாக நடைபெறலாம். 70 + 70 போட்டிகளாக இரண்டு சீசன்களாக ஒரே ஆண்டில் இருமுறை நடைபெறலாம் என்ற கருத்தும் உலவி வருகிறது.

கேட்கவே அதிர்ச்சியூட்டுவதாக இருந்தாலும், ‘அது நடக்குமா என்ன? அதற்கெல்லாம் வாய்ப்பில்லை’ என்று முன்னதாகக் கடந்து போக வைத்தாலும், தற்சமயம் மீடியா ரைட்ஸ் அள்ளியிருக்கும் கோடிகளும், ஜெய் ஷாவின் இந்த ஸ்டேட்மெண்டும் அதுவும் நிகழலாம், எதுவும் நிகழலாம் என்ற அச்சத்தை ஊட்டுகிறது.

அவரது வார்த்தைகள் உயிர் பெறும் பட்சத்தில், வெவ்வேறு நாடுகளின் லீக்குகள் அதிகமாகி ஐசிசி சார்பான போட்டிகள் குறைந்து போகும். கிரிக்கெட்டில் மேலே வரத் துடிக்கும் சின்ன சின்ன நாடுகளின் முயற்சிகளும் வீணாகும். ஒருநாள் போட்டிகள் மெல்லச் சாகும். டெஸ்ட் போட்டிகள்கூட முக்கியமான நாடுகளுக்கிடையே மட்டும் நடைபெறும் ஒன்றாக மாறிப் போகலாம். ஃபுட்பால் போல் லீக்குகளும், உலகக் கோப்பையும் மட்டுமே கொண்டதாக கிரிக்கெட்டும் மாறும். பணம் மட்டுமே பிரதானம் என கிரிக்கெட்டர்களும் உலகின் எல்லா மூலையில் நடைபெறும் லீக்குகளிலும் தேடிப் போய் பங்கேற்பார்கள்.

பிசிசிஐ தலைவர் கங்குலி

பிசிசிஐ, அணியின் உரிமையாளர்கள், வீரர்கள் என வணிக ரீதியாக இது எல்லோரையும் பண மழையில் நனைய வைக்கும் என்றாலும் புதைந்து போன சர்வதேச கிரிக்கெட்டின் விம்மலும், உண்மையான கிரிக்கெட் ரசிகர்களின் ஏக்கக் குரலும் ஏதோ ஒரு மூலையில் கேட்டுக் கொண்டேதான் இருக்கும்.

டி20 லீக்குகள் எனும் அதிவேகச் சுழலில் மற்றவைத் தப்பிப் பிழைக்குமா?! ஜெய் ஷா பேசியது குறித்து உங்கள் கருத்து என்ன? கமென்ட்டில் சொல்லுங்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.