விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க-வில், தகவல் தொழில்நுட்ப அணி வடக்கு மாவட்டச் செயலாளராகவும், அதன் பின்னர் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளராகவும் இருந்தவர் முகமது ஷெரிப். திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த இவர், முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் தீவிர ஆதரவாளராகச் செயல்பட்டு வந்தவர். அ.தி.மு.க., கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, தனது ஆதரவாளர்கள் சிலருடன் அண்மையில் சசிகலா தரப்பில் ஐக்கியமானார். இந்த நிலையில், இவருடைய மகளுக்கு இன்று காலை திண்டிவனம் அருகேயுள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெறவிருக்கிறது. இந்தத் திருமண நிகழ்ச்சிக்கு சசிகலா வருகைத் தருவதாக இருந்ததினால்… திண்டிவனம் அருகே, சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரமாக வழியெங்கும் அ.தி.மு.க கட்சிக் கொடி நடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

சசிகலா தரப்பினர் சாலை மறியல்

ஆனால், ‘சசிகலா வருகைக்காக அ.தி.மு.க கொடியை பயன்படுத்த கூடாது’ என்று திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள் சிலர், ஏ.எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், 3-ம் தேதி அன்று முகமது ஷெரிப் தரப்பில் காவல்துறையினர் விளக்கம் கேட்டு விசாரித்தனராம். அதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்திருந்த முகமது ஷெரிப், “என் மகள் திருமணத்திற்கு வருகை தரும் சின்னம்மாவை முறையாக வரவேற்பதற்காக… பதாகை மற்றும் கழக கொடியை வைப்பதற்கான ஆயத்தப்பணியை மேற்கொண்டோம். அப்போது, சி.வி.சண்முகத்தின் தூண்டுதலால்… ‘கழக கொடியை பயன்படுத்த கூடாது’ என்று சிலர் புகார் மனு அளித்துள்ளனர். அதனால், ஏ.எஸ்.பி அவர்கள் அழைத்ததன் பேரில் இன்று வந்தோம். சி.வி.சண்முகம் மட்டுமல்ல, யார் தடுத்தாலும் சரி கழகக்கொடி இன்னும் அதிகமாக பறக்கும். சின்னம்மா வருவது உறுதி… அதை தடுக்க எந்த முயற்சி வேண்டுமானாலும் அவர்கள் எடுக்கட்டும், இதை காவல்துறை முடிவிற்கே விட்டு விடுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

அதையடுத்து, நேற்றைய தினம் சசிக்கலாவை வரவேற்று விளம்பர பதாகைகள் மற்றும் அ.தி.மு.க கொடி கம்பங்கள் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக வைக்கப்பட்டுள்ளன. இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க தரப்பினர், திண்டிவனம் புறவழிச்சாலை சந்திப்பின் அருகே திரள துவங்கியுள்ளனர். இதற்கிடையில் நேற்று மாலை, திண்டிவனம் வருகை தந்த சசிகலா… புறவழிச்சாலை அருகே உள்ள தனியார் விடுதி ஒன்றில் தாங்கினார். சசிகலாவை வரவேற்பதற்காக அ.தி.மு.க கட்சிக் கொடியை பயன்படுத்துவதில் ஏற்பட்ட கடுமையான புகைச்சலின் காரணமாக, இரு தரப்பினரும் அந்த விடுதி அருகே கூடியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட துவங்கியது. உடனே, பாதுகாப்பிற்காக காவல்துறை அதிகாரிகள் அங்கு குவிக்கப்பட்டனர்.

சி.வி.சண்முகம் – முகமது ஷெரிப்

ஒரு கட்டத்தில், அ.தி.மு.க தரப்பினர் சிலர்… சசிகலாவை வரவேற்பதற்காக நடப்பட்டிருந்த அ.தி.மு.க கட்சிக் கொடியை பிடுங்கி எடுத்துச் சென்றதோடு, ஓரிரு வரவேற்பு பேனர்களையும் கிழித்துள்ளனர். இதனால் கோபமடைந்த சசிகலா தரப்பினர், திடீரென தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின், அந்த கட்சிக் கொடிகளை அதே இடத்தில் கோஷமிட்டபடி மீண்டும் வைத்தனர். இந்த போராட்டத்தினால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியே பதற்றமாக மாறிப்போனது. இன்றைய தினம், ஷெரிப்பின் இல்ல திருமண விழா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்த இருக்கும் சசிகலா, அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அ.தி.மு.க கட்சிக் கொடியை பயன்படுத்துவதில்… சசிகலா மற்றும் அ.தி.மு.க தரப்புக்கும் இடையே ஏற்பட்ட புகைச்சல், களேபரமாக மாறிய சம்பவம் திண்டிவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.