31,000 கோடி ரூபாய்க்கும் மேலான அரசுத் திட்டங்களைத் தொடங்கிவைப்பதற்காக, பிரதமர் மோடி மே 26-ம் தேதி மாலை சென்னை வந்தார். ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பிரதமரை வரவேற்றனர். பின்னர் விழா நடைபெற்ற நேரு உள் விளையாட்டு அரங்கம் சென்றார் மோடி. செல்லும் வழிகளில் பா.ஜ.க நிர்வாகிகள் கொடிகள், தோரணங்கள் கட்டியும், கலைநிகழ்ச்சிகளை ஏற்பாடும் செய்தும் அசத்தியிருந்தனர்.
விழா முடிந்து டெல்லி செல்வதற்காக விமான நிலையம் வந்தபோது, முதல்வர் ஸ்டாலின் வழியனுப்பி வைத்தார். முன்னதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயகுமார் ஆகிய ஐவர் மட்டும் மோடியை தனியாகச் சந்தித்துப் பேசினார்கள்.
சந்திப்பின்போது என்ன பேசினார்கள் என்பது குறித்து அ.தி.மு.க தரப்பில் விசாரித்தோம். “தனியாக சந்திக்க வேண்டும் என்று சொன்னதுமே மோடி தாராளமாக நேரம் ஒதுக்கினார். கிட்டத்தட்டப் பத்து முதல் இருபது நிமிடங்கள் பேசியிருப்பார்கள்.

அப்போது, ஆட்சியமைத்த ஓராண்டிலேயே, தி.மு.க அரசு மீது பல்வேறு ஊழல் புகார்கள் தங்களுக்குக் கிடைத்திருப்பதாக, அதுகுறித்தப் பட்டியலை பிரதமரிடம் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத்துறையை வைத்துக்கொண்டு, தங்கள் மீது வழக்குகள் போட்டுவருவது குறித்தும் முறையிட்டார்களாம்.

மேலும், தமிழக பாஜக குறித்தும் ஏகப்பட்டப் புகார்களை வாசித்துள்ளனர். குறிப்பாக, `தமிழகத்தில் தாங்கள்தான் எதிர்க்கட்சி என்றும், அதிமுக எதிர்க்கட்சியாகச் சரியாகச் செயல்படவில்லை என்றும் பாஜக தலைவர்கள் பேசிவருகிறார்கள். இத்தகையப் பேச்சுக்கு மீடியாயில் பெரிய வெளிச்சம் கிடைப்பதால், அதனால் அ.தி.மு.க-வின் செல்வாக்குக் குறைகிறது. அவர்களை கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லுங்கள்’ என்றும் புகார் வாசித்திருக்கிறார்களாம்
அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி, “திமுக குறித்த விவகாரங்களை நான் பார்த்துக்கொள்கிறேன். உங்களுக்குள் இருக்கும் பிரச்னைகளை முதலில் இருவரும் அமர்ந்துப் பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் இருவருக்கும் இடையே பனிப்போர் நிலவுவதாக ஊடகங்களிலும் வருகிறது, பா.ஜ.க-வினரும் சொல்கிறார்கள்.

நீங்கள் இருவரும் இணைந்து செயல்பட்டால்தான், தொண்டர்கள் உயிர்ப்ப்புடன் இருப்பார்கள். அப்போதுதான் கூட்டணி பலப்படும். தேர்தலுக்கு இன்னும் குறைந்த காலமே இருப்பதால், கவனமாக இருங்கள்” என்று அ.தி.மு.க தலைவர்களுக்கு அட்வைஸ் செய்தார்.
பின்னர், பா.ஜ.க. தலைவர்களை அழைத்து, “நன்றாகப் பணியாற்றி வருகிறீர்கள்.. இன்னும் சிறப்பாக செயலாற்ற வேண்டும்” என்று என்கிரேஜ் செய்திருக்கிறார் மோடி. அதாவது, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்களே புகார் சொல்லும் அளவுக்குப் பா.ஜ.க தமிழகத்தில் செயல்பட்டு வருவதைப் பாராட்டியிருக்கிறார் பிரதமர். அதுமட்டுமின்றி, ‘இந்திய அளவில் குடும்ப ஆட்சிமுறைக்கு எதிராக மக்கள் திரும்பியிருக்கிறார்கள். தமிழகத்திலும் அதற்கான மாற்றம் தெரிகிறது. எனவே, தி.மு.க-வைத் தாக்குவதில் இருந்து ஒருபோதும் பின்வாங்கிவிடாதீர்கள்’ என்றும் அண்ணாமலையிடம் குறிப்பிட்டிருக்கிறார் பிரதமர் மோடி.

இந்த சந்திப்பில் சசிகலா விவகாரம் குறித்துப் பேசப்படவில்லை என்பதே தகவல். ஏனெனில், ஓ.பி.எஸ் தவிர மற்ற நால்வரும் சசிகலா வருகைக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதால், ஒற்றை மனிதராக சசிகலா குறித்துப் பேச முடியாது என்பதால், பன்னீரும் பம்மிவிட்டாராம்!” என்பதோடு முடித்தனர்.