பாலியல் உறவில் ஒருவரின் சம்மதம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இணைக்கு அதில் சம்மதம் இல்லை என்றால் இல்லை என்றே அர்த்தம். எதிர்ப்பு தெரிவித்தாலோ, மௌனமாக இருந்தாலோ அப்போதும் இல்லை என்றே அர்த்தம். சரி என்ற பதில் மட்டுமே சம்மதம்.

எனவே, இனிமேல் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சம்மதம் கொடுக்கப்பட்டதா என்பதை முக்கியமாகக் கருதும் `ஒன்லி யெஸ் மீன்ஸ் யெஸ்’ என்ற புதிய மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது ஸ்பெயின் பாராளுமன்றம். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு எதிராக வன்முறை அல்லது மிரட்டல் நிகழ்த்தப்பட்டதை நிரூபிக்க இனி அவசியமில்லை.
இந்தப் புதிய மசோதாவின்படி, ஒரு நபரின் வெளிப்படையான சம்மதமே ஒப்புதலாகப் பார்க்கப்படுகிறது. ஒருவேளை ஏதும் சொல்லாமல் மௌனமாக இருந்தால் அது சம்மதமாகப் பார்க்கப்படாது. அதன் அடிப்படையில் சம்மதமில்லாத உடலுறவு அத்துமீறலாகக் கருதப்பட்டு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
அதுமட்டுமல்லாமல் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் சிறார்கள் பாலியல் கல்வி கற்கவும், பாலின சமத்துவ பயிற்சிகளுக்கும் அனுப்பப்படுவார்கள். பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 24 மணிநேர உதவி மையங்களோடு இணைக்கப்படுவர்.

2016-ம் ஆண்டு பாம்ப்லோனாவில் நடந்த சான் ஃபெர்மின் எருது ஓட்டத் திருவிழாவின்போது, ஒரு பெண்ணை அவர் சுய நினைவில்லாமலிருந்த நிலையில் ஐந்து பேர் பாலியல் வல்லுறவு செய்தனர். அந்த வழக்கில், ‘இவர்கள் குற்றவாளிகள்தான். ஆனால், இது பாலியல் வன்கொடுமை அல்ல. ஏனெனில், பாதிக்கப்பட்ட பெண் தனக்கு பாலியல் வன்கொடுமை நடந்தபோது எதிர்ப்பு தெரிவித்ததாகத் தெரியவில்லை’ என வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்துப் பல போராட்டங்கள் வெடித்தன. இந்நிலையில் இந்த வழக்கே `ஒன்லி யெஸ் மீன்ஸ் யெஸ்’ என்ற இந்த மசோதா இயற்றப்பட முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.