ஐபிஎல் பிளே ஆப் சுற்றில், இன்று நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் பவுலிங்கை தேர்வு செய்தார். ஆர்சிபி அணியில் ஓப்பனர்களாக டுபிளசிஸ் மற்றும் விராட் கோலி களமிறங்கினர்.

அதிர்ச்சி அளிக்கும் வகையில் மோசின் கான் வீசிய முதல் ஓவரில் கேப்டன் டுபிளசிஸ் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். சமீரா வீசிய 2வது ஓவரில் முதல் பவுண்டரி விளாசி கோலி ஆர்சிபி ரசிகர்களுக்கு விருந்தளித்தார். அடுத்து வந்த ரஜத் படிதாரும் அதிரடியாக விளையாட ஸ்கோர் மெல்ல மெல்ல உயரத் துவங்கியது. க்ருனால் பாண்டியா வீசிய 6வது ஓவரில் படிதார் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்களை விளாச பவர்பிளே முடியும்போது 50 ரன்களை ஆர்பாட்டத்துடன் கடந்தது ஆர்சிபி.

படிதார் மறுபக்கம் அதிரடியை தொடர்ந்துவந்த நிலையில், நிதானமாக விளையாடி வந்த கோலி 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆவேஷ் கான் பந்துவீச்சில் அவுட்டாகி நடையை கட்டினார். இருப்பினும் அதிரடியை தொடர்ந்த படிதார் 28 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் ஒரு சிக்ஸரை விளாசிவிட்டு க்ருனால் பாண்டியாவிடம் சிக்கி அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த லோம்ரோர் படிதாருடன் இணைந்து அதிரடியாக விளையாடத் துவங்கினார்.

சமீரா வீசிய 12வது ஓவரில் லோம்ரோர் -படிதார் கூட்டணி 3 பவுண்டரிகளை விளாச 100 ரன்களை கடந்தது. ஆனால் லோம்ரோர் பிஷ்னாய் பந்துவீச்சில் அவுட்டாக ஆர்சிபி கொஞ்சம் தடுமாறத் துவங்கியது. அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் படிதாருக்கு பக்கபலமாக விளையாடத் துவங்கினார். மோசின் கான் வீசிய 15வது ஓவரில் கார்த்திக் வழங்கிய ஒரு கேட்ச் வாய்ப்பை தாவிப் பிடிக்க முயன்று தவறவிட்டார் கே.எல்.ராகுல்.

ரவி பிஷ்னாய் வீசிய 16வது ஓவரில் படிதார் வழங்கிய ஒரு கேட்ச் வாய்ப்பை தீபக் ஹூடா தவறவிட்டார். இதன் விளைவாக அதே ஓவரில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர் விளாசி சதத்தை நோக்கி டாப் கியரில் பயணித்தார் படிதார். அடுத்து ஆவேஷ் கான் வீசிய பந்தில் தினேஷ் கார்த்திக் ஹாட்ரிக் பவுண்டரிகளை பறக்கவிட ஸ்கோர் ஜெட் வேகத்தில் எகிறத் துவங்கியது. மோசின் கான் வீசிய பந்தை சிக்ஸராக விளாசியபடி 49 பந்துகளில் சதம் கடந்து அசத்தினார் படிதார்.

சமீரா வீசிய 19வது ஓவரில் கார்த்திக் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாச, படிதார் தன்பங்குக்கு ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசி வான வேடிக்கை காட்டினார். ஆவேஷ் கான் வீசிய 20-வது ஓவரில் கார்த்திக் ஒரு பவுண்டரி விளாச, 20 ஓவர்கள் முடிவில் 207 ரன்களை குவித்தது ஆர்சிபி அணி. ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த படிதார் 54 பந்துகளை சந்தித்து 12 பவுண்டரி, 7 சிக்ஸர்களை விளாசி 112 ரன்களை குவித்து அசத்தினார். ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளில் அதிக ரன் குவித்த ஆர்சிபி வீரராக உருவெடுத்தார் படிதார்.

208 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணியில் ஓப்பனர்களாக ராகுலும் டி காக்கும் களமிறங்கினர். சிராஜ் வீசிய முதல் ஓவரில் ஒரு சிக்ஸரை விளாசிவிட்டு டிகாக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த மனன் வோரா 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசிவிட்டு 19 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்ப தடுமாற்றத்திற்கு ஆளானது லக்னோ அணி.

அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா, ராகுலுடன் கைகோர்த்து நிதானமாக விளையாடத் துவங்கினார். சிராஜ் வீசிய 6வது ஓவரில் ராகுல் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசி வான வேடிக்கை காட்டினார். இதனால் பவர்பிளே முடிவில் 60 ரன்களை எளிதாக கடந்தது லக்னோ அணி. அதன்பின் ஹூடா- ராகுல் கூட்டணி நிதான ஆட்டத்தை கையில் எடுத்ததால் ஸ்கோர் மந்தமாக உயரத் துவங்கியது. இதனால் 12வது ஓவரில்தான் 100 ரன்களை லக்னோ அணியால் கடக்க முடிந்தது.

இந்நிலையில் ஹசில்வுட் பந்துவீச்சில் சிக்ஸர் விளாசி ஹூடா அதிரடிக்கு திரும்பினார். ஹசரங்கா வீசிய 15வது ஓவரில் இரு சிக்ஸர்களை விளாசிய ஹூடா அதே ஓவரில் க்ளீன் போல்டாகி நடையை கட்டினார். அடுத்து வந்த ஸ்டோய்னிஸ் ஒரு சிக்ஸரை விளாசிவிட்டு 9 ரன்கள் எடுத்த நிலையில், ஹர்ஷல் பந்துவீச்சில் பறிகொடுக்க கடும் நெருக்கடிக்கு ஆளானது லக்னோ அணி. இந்த அழுத்தத்தில் ராகுலும் ஹசில்வுட் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுக்க வெற்றி ஆர்சிபி பக்கம் சாயத் துவங்கியது.

அடுத்து வந்த க்ருனால் பாண்டியா கோல்டன் டக் அவுட் ஆனதால், லக்னோ அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 24 ரன்கள் தேவைப்பட்டன. ஆனால் களத்தில் இருந்த சமீரா – லெவிஸ் ஜோடியால் 9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. நாளை நடைபெற உள்ள 2வது தகுதிச் சுற்றுப் போட்டியில் ராஜஸ்தானை எதிர்கொள்கிறது ஆர்சிபி அணி.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.