தி.மு.க-வில் உட்கட்சித் தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தஞ்சாவூர் மாவட்டத்தில் உட்கட்சித் தேர்தல் நடத்தும் ஆணையர்களாக கம்பம்.செல்வேந்திரன், காசி.முத்துமாணிக்கம் ஆகியோரை தி.மு.க தலைமை நியமித்திருக்கிறது. தஞ்சாவூர் மாநகராட்சியாக மாறியப் பிறகு நடைபெறும் முதல் உட்கட்சித் தேர்தல் என்பதால் ஆரம்பத்திலிருந்தே கட்சியினரிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

திமுக எம்.எல்.ஏக்கள் டி.கேஜி,சந்திரசேகரன்

இந்த நிலையில், தேர்தல் நடத்தும் ஆணையாளர்கள் தலைமையில் தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் கடந்த செவ்வாய்கிழமை பேச்சுவார்த்தைக் கூட்டம் நடைப்பெற்றது. இதில் எம்.எல்.ஏ-க்கள் துரை.சந்திரசேகரன்,டி.கே.ஜி.நீலமேகம் இருவரும் நேரடியாக மோதிக்கொண்டனர். இருவரும் அரசியல் நாகரிகத்தை மறந்து ஒருவருக்கொருவர் கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளனராம். நகமும், சதையுமாக இருந்த இருவரும் இப்போது கட்சிப் பதவியைக் கைப்பற்றுவதற்காக வெளிப்படையாக மோதி வருகின்றனர். இந்தப் பிரச்னை தலைமை வரை சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. எம்.எல்.ஏ-க்கள் மோதல் விவகாரம் தஞ்சாவூர் மாவட்ட தி.மு.க-வில் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

இது குறித்து தி.மு.க வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம். “திருவையாறு தொகுதி எம்.எல்.ஏ-வாகவும், தஞ்சாவூர் மத்திய மாவட்டச் செயலாளராகவும் இருப்பவர் துரை.சந்திரசேகரன். தஞ்சாவூர் தொகுதி எம்.எல்.ஏ மற்றும் தஞ்சை மாநகர செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார் டி.கே.ஜி. நீலமேகம். இவர்கள் இருவரும் முன்னாள் மத்திய இணை அமைச்சரான எஸ்.எஸ்.பழநி மாணிக்கத்துக்கு எதிராக அரசியல்செய்ய கரம் கோர்த்துச் செயல்பட்டவர்கள்.

தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயம்

கடந்த சில வருடங்களாக ஒற்றுமையாக இருந்தனர். அந்த நட்பை வெளிப்படுத்தும் விதமாக டி.கே.ஜி தன்னுடைய எம்.எல்.ஏ அலுவலகத்தில் தானும், துரை.சந்திரசேகரன் இருவரும் சிரித்தபடி ஒன்றாக இருக்கும் போட்டோவை வைத்திருந்தார். இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் துரை.சந்திரசேகரன், சண்.ராமநாதனுக்கு ரெகமெண்ட் செய்ய… சண்.ராமநாதன் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதிலிருந்தே இருவருக்கும் மறைமுகமான மோதல் தொடங்கியதாம். அமைச்சர் நேருவின் ஆதரவாளராக வலம்வரும் சந்திரசேகரன், அவர் மூலமாக டி.கே.ஜி குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தவறான தகவல்களை கூறி வந்ததாக டி.கே.ஜி தரப்பு பேசி வந்தது. இந்த நிலையில், உட்கட்சித் தேர்தலுக்கான பணிகள் தொடங்கியது. மாநகரச் செயலாளராக இருக்கும் டி.கே.ஜி மீண்டும் அந்தப் பதவியில் தன்னை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியுடன்… தன் ஆதரவாளர்களுக்கும் பதவியினை பெறுவதற்கான பணிகளை முன்னெடுத்தார். இதையடுத்து மேயரான சண்.ராமநாதன், எம்.எல்.ஏ டி.கே.ஜி நீலமேகத்தை எதிர்த்து மாநகரச் செயலாளர் பதவிக்கும், அதே போல 51 வார்டு செயலாளர் உள்ளிட்டப் பதவிகளுக்கும் தன் ஆதரவாளர்களை போட்டியிடுவதற்கு தயார்படுத்தினார்.

எம்.எல்.ஏ டி.கே.ஜி நீலமேகம்

சந்திரசேகரன் இதன் பின்னணியிலிருந்து கொண்டு, தனக்கு எதிராக சண்.ராமநாதனை செயல்பட வைப்பது டி.கே.ஜிக்கு தெரியவந்தது. இந்த நிலையில், கலைஞர் அறிவாலயத்தில் மாநகரச் செயலாளர் உள்ளிட்டப் பதவிகளுக்கான தேர்தல் குறித்த பேச்சுவார்த்தை தேர்தல் ஆணையாளர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் கம்பம்.செல்வேந்திரன், காசி.முத்துமாணிக்கம், எம்.பி.பழநிமாணிக்கம், துரை.சந்திரசேகரன், சண்.ராமநாதன் உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டனர்.

அப்போது டி.கே.ஜி, `என்னையும் இளைஞரணி அமைப்பாளரான சண்.ராமநாதனும் ஒண்ணா ஒரே நேரத்தில் உட்கார வச்சிருக்கீங்க’ என்று சந்திரசேகரனைப் பார்த்து கேட்டாராம். அதற்கு எஸ்.எஸ்.பி, `அவர் மேயர் எல்லா இடத்துலையும் இருப்பார்’ எனக் கூறியிருக்கிறார்.

உடனே டி.கே.ஜி, `தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் நீங்க மாவட்டச் செயலாளருக்கு அடிபணிந்து செயல்படுவதாக சொன்னீங்க. சிங்கம் மாதிரி இருந்த நீங்க இப்ப இப்படி ஆகிட்டீங்க’ என்று சொல்ல, `நான் யார்னு தெரியுமா?” என்று எஸ்.எஸ்.பி கேட்டிருக்கிறார்.

எஸ்.எஸ்.பழநிமாணிக்கம்

`என்ன அண்ணே, மிரட்டுற மாதிரி பேசுறீங்க’ணு கேட்டவர், சந்திரசேகரனைப் பார்த்து, `எல்லாம் உங்களாலதான் எல்லாம் போச்சு நான் சொன்ன ஆளுக்கு மேயர் கொடுக்கல. இப்ப எனக்கு எதிராக செயல்படுறீங்க.. என் முதுகுல குத்துறீங்க’ என்று சொல்ல உடனே துரை.சந்திரசேகரன், `நீங்க தான் என் முதுகுல குத்துனது… நான் எதையும் கண்டுக்கலை… தலைமையிடம் அத பத்தி சொல்லியிருந்தா ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருப்பாங்க” என்று கூறியிருக்கிறார்.

அப்போது டி.கே.ஜியின் ஆதரவாளரான மாநகர துணை செயலாளர் நீலகண்டன் உள்ளே வர, மாவட்ட பொருளாளரான எல்.ஜி.அண்ணா, `துணை செயலாளருக்கு இங்கு என்ன வேலை” என்று கேட்க, `நடப்பது மாநகர தேர்தல், பொருளாளருக்கு மட்டும், இங்கு என்ன வேலை? நீ நில்லு நீலகண்டன்” என டி.கே.ஜி பதில் சொல்லி யிருக்கிறார். உடனே சந்திரசேகரன், பதிலுக்கு சத்தம் போட, அந்த இடமே பரபரப்பாகி இருக்கிறது. அதன் பிறகு டி,கே.ஜி கிளம்பி போய் விட்டாராம்.

ஸ்டாலின்

பின்னர் இருவருமே சென்னை சென்று விட்டனர். இந்த பிரச்னை தலைமை வரை சென்றுள்ளது. இப்பிரச்னையால் தேர்தல் தள்ளிப்போகிறது. தேர்தல் இல்லாமல் நியமனம் மூலம் அனைத்து பதவிகளுக்கும் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது: என்கிறார்கள்

டி.கே.ஜி தரப்பினர் கூறுகையில், `எஸ்.எஸ்.பழநிமாணிக்கத்திற்கு எதிராக செயல்பட்ட துரை.சந்திரசேகரன் சமூக ரீதியாக ஒத்து போய் அவருடன் சேர்ந்து கொண்டு நீலமேகத்திற்கு எதிராக செயல்படுகிறார்.

306 பதவிகளுக்கு பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்தல் நடத்தினால் நாங்க ஜெயிச்சிடுவோம் என்பதால் நியமனம் செய்ய இருக்கின்றனர். கட்சி தலைமைக்கும், தலைவர் ஸ்டாலினுக்கும் கட்டுப்பட்டு நாங்க நடக்கிறோம். தலைமையிடம் எங்க தரப்பு நியாத்தை எடுத்து வைப்போம்” என்கின்றனர். துரை.சந்திரசேகரனின் கருத்தை அறிய அவருக்கு போன் செய்தோம் அவர் நமது அழைப்பை எடுக்கவில்லை. இந்த விவகாரங்கள் தொடர்பாக விளக்கம் அளிக்கும் பட்சத்தில், உரிய பரீசீலனைக்குப்பின் அது தொடர்பாக பதிவிட தயாராக இருக்கிறோம்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.